You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
த்ருப்தி தேசாய்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயன்ற இப்பெண் யார்?
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழையலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், இன்று மாலை இருமுடி கட்டி வரும் பக்தர்களுக்காக கோயில் திறக்கப்பட்டது. இன்றிலிருந்து 64 நாட்கள் ஐயப்பன் கோயில் திறந்திருக்கும்.
மகாராஷ்டிராவை சேர்ந்த பெண்ணுரிமை செயற்பாட்டாளர் த்ருப்தி தேசாய் சுமார் 14 மணிநேர காத்திருப்புக்கு பிறகு, போராட்டக்காரர்களின் எதிர்ப்பால் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் செல்லும் முயற்சியை கைவிட்டு மீண்டும் புனே திரும்புகிறார்.
ஆறு பெண்களுடன் கோயிலுக்குள் நுழைவேன் என்று கொச்சி விமான நிலையத்தில் வந்திறங்கிய த்ருப்தி தேசாய், அவரது குழுவினருடன் விமான நிலையத்தில் இருந்து வெளியேற முடியாமல் இருந்தார்.
மகாராஷ்டிராவிலிருந்து இன்று அதிகாலை சுமார் 4:30 மணியளவில் கொச்சி விமான நிலையத்திற்கு வந்த த்ருப்தி தேசாய் உள்ளிட்ட ஏழு பெண்கள், தங்களை சபரிமலைக்கு அழைத்து செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனம் ஒன்று கூட இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அவர்கள் நுழைவதை எதிர்த்து விமான நிலையத்துக்கு வெளியில் பலரும் போராட்டம் நடத்தி வரும் சூழலில் த்ருப்தி தேசாய் மீது கவனம் ஏற்பட்டுள்ளது.
யார் இந்த த்ருப்தி தேசாய்?
வழிபாட்டு இடங்களில் பெண்களுக்கு அனுமதி மறுத்த இடங்களில் போராட்டம் நடத்தியதற்காக ஏற்கனவே அறியப்பட்டவர் த்ருப்தி தேசாய்.
' புவித்தாய் படை' எனும் பொருள்படும் 'பூமாதா ப்ரிகேட்' எனும் பெண்கள் உரிமை அமைப்பை நடத்தும் த்ருப்தி, 2016ஆம் ஆண்டு இந்தியக் குடியரசு தினத்தன்று 400க்கும் மேலான பெண்களுடன், மகாராஷ்டிர மாநிலம் ஷனி ஷிக்னாப்பூர் எனும் இடத்தில் உள்ள சனி பகவான் கோயிலுக்குள் நுழைய முயன்றார்.
அப்போது அவர்கள் காவல் துறையால் தடுத்து நிறுத்தப்பட்டாலும், அடுத்த இரண்டு மாதங்களிலேயே பெண்கள் நுழைவதை தடுக்கக்கூடாது என்று மும்பை உயர்நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
இதேபோல கோலாப்பூரில் உள்ள மஹாலட்சுமி கோயில் சன்னிதானத்தின் குறிப்பிட்ட பகுதிக்கு மேல் பக்தர்கள் அனுமதிக்கப்படாததை எதிர்த்து 2016இல் அக்கோயிலின் கருவறை வரை சென்றார். அப்போது காவல் துறை பாதுகாப்புடன் அவர் உள்ளே சென்றாலும், அவர் உள்நுழைவதை எதிர்த்த பக்தர்கள் மற்றும் பூசாரிகளால் தாக்கப்பட்டார்.
அதே ஆண்டு மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்காவில் பெண்கள் அனுமதிக்கப்படாததை எதிர்த்து உள்ளே நுழைய முயன்றபோது தடுக்கப்பட்டாலும், இரண்டாவது முயற்சியில் தர்காவினுள் நுழைந்தார். ஆனால், பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படும் தொழுகை நடக்கும் இடத்துக்குள் அவரால் நுழைய முடியவில்லை.
இந்தப் போராட்டங்கள் மட்டுமல்லாது, பொது இடங்களில் பெண்கள் மீதான பாலியல் ரீதியிலான அத்துமீறல்களை தட்டி கேட்பது, ஊழல் எதிர்ப்பு போராட்டங்கள் என பலவற்றிலும் பங்கேற்றுள்ள த்ருப்தி, சில சமயங்களில் அதற்காக காவல் துறையால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :