You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பகலைப்போல இரவில் படமெடுக்கும் வசதி - கூகுள் அறிமுகம்
- எழுதியவர், சாய்ராம் ஜெயராமன்
- பதவி, பிபிசி தமிழ்
கடந்த வாரம் வெளியான சில முக்கிய தொழில்நுட்ப செய்திகளைத் தொகுத்து வழங்குகிறது இந்த கட்டுரை.
பகலைப்போல இரவில் படமெடுக்கும் வசதி, கூகுள் செல்போனில் அறிமுகம்
இரவு நேரத்திலோ அல்லது குறைந்த ஒளி கொண்ட இடத்திலோ புகைப்படங்களை எடுக்கும்போது இருக்கும் சிரமத்தை பெருமளவில் நீக்கும் தொழில்நுட்பத்தை கூகுள் நிறுவனம் முதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை தொழில்முறை கேமராக்களில் மட்டுமே எடுக்க முடிந்த தரமான புகைப்படங்கள்/ காணொளிகளை தற்போது கைபேசிகளிலேயே எடுக்குமளவுக்கு தொழில்நுட்பம் முன்னேறியுள்ளது.
இருந்தபோதிலும், இரவு அல்லது ஒளி குறைந்த இடங்களில் புகைப்படங்களை எடுக்கும்போது தெளிவான புகைப்படங்களை பெறுவதில் சிரமம் நீடித்து வருகிறது. கைபேசியிலுள்ள பிளாஷை பயன்படுத்தி எடுக்கப்படும் புகைப்படங்களும் செயற்கையான தோற்றத்தையே அளிக்கின்றன.
இந்நிலையில், தமது பிக்ஸல் கைபேசிகளில் இருக்கும் கேமராக்களுக்கென 'நைட் சைட்' என்னும் பிரத்யேக வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள். அதாவது, இயந்திர நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் இந்த வசதியின் மூலம் அனைத்து விதமான ஒளியிலும் பளிச்சென வண்ணமயமான புகைப்படங்களை எடுக்கமுடியுமென்று கூகுள் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சமீபத்திய வரவான பிக்ஸல் 3, சென்றாண்டு வெளியிடப்பட்ட பிக்ஸல், முதலாவதாக வெளியிடப்பட்ட பிக்ஸல் ஆகிய மூன்று மாடல்களுக்கும் இந்த வசதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறும் கூகுள், "இந்த வசதியை பயன்படுத்தி நீங்கள் புகைப்படத்தை எடுக்கும்போது மட்டுமல்லாது, எடுப்பதற்கு ஒரு சில நிமிடங்கள் முன்பும், சில நொடிகளுக்கு பின்பும் கேமரா முன்பு நிற்பவர் அசையாமல் இருக்க வேண்டும்" என்றும் அறிவுறுத்தியுள்ளது.
கடும் வீழ்ச்சியில் பிட்காயின்
பிரபல கிரிப்டோகரன்சி எனப்படும் மின்னணு பண வகைகளில் ஒன்றான பிட்காயினின் மதிப்பு கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
ஒவ்வொரு நாட்டுக்கும் டாலர், பவுண்ட், ரூபாய் என தனித்தனியே நாணயங்கள் இருப்பது போல, முற்றிலும் இணையத்தையே இருப்பிடமாக கொண்ட மின்னணு பணங்கள் உலகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
இந்தியா, ரஷ்யா, ஸ்வீடன், ஐஸ்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பிட்காயின் தடைசெய்யப்பட்டு இருந்தாலும், அதன் மூலம் கிடைக்கும் லாபத்தை எண்ணி பலர் தொடர்ந்து பிட்காயின்களில் முதலீடு செய்து வருகின்றனர்.
தொடக்க காலத்தில் சில நூறு டாலர்கள் மதிப்பு கொண்டிருந்த பிட்காயின்களின் மதிப்பு கடந்தாண்டு வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. அதாவது, 2009ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டபோது ஒரு பிட்காயினின் விலை ஒரு அமெரிக்க டாலராக இருந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அதே ஒரு பிட்காயினின் விலை 17,060 டாலர்கள் என்ற உச்சத்தை அடைந்தது.
இந்நிலையில், 2018ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே படிப்படியாக வீழ்ச்சியடைந்து வரும் பிட்காயினின் மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் இல்லாத வகையில் 5,322 டாலர்கள் என்ற அளவை அடைந்தது.
பிட்காயின் மட்டுமின்றி மற்ற மின்னணு பண வகைகளான ஈத்திரியம், லைட்காயின் உள்ளிட்டவைகளின் மதிப்பும் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.
ஏசிக்கு மாற்று: வெப்பத்தை தடுக்கும் பிலிம் கண்டுபிடிப்பு
கோடைகாலத்தில் வீட்டினுள்ளே ஏற்படும் வெப்பத்தினால் அவதிப்படுபவர்களுக்கு பெரும் செலவுகளை ஏற்படுத்தும் ஏசிக்கு மாற்றாக சூரிய ஒளியின் வெப்பத்தை தடுக்கும் ஒருவித பிலிமை அமெரிக்காவின் மாசாசூட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் கோடை காலத்தை சமாளிப்பது மிகவும் சவாலானதாக கருதப்படுகிறது. ஒவ்வொருவரும் தங்களது பொருளாதார சூழ்நிலைக்கேற்ப மின் விசிறி, ஏசி போன்றவற்றை கொண்டு சமாளிக்க முயல்கின்றனர். இருப்பினும், அந்த இயந்திரங்களின் விலை மட்டுமல்லாது, மின்சார செலவும் மிகவும் அதிகமாக உள்ளது.
வீடுகள், அலுவலகங்களில் கோடைகாலத்தில் அதிக அளவிலான வெப்பம் ஏற்படுவதற்கு காரணமாக சன்னல்கள் மற்றும் கதவுகள் உள்ளதை கண்டறிந்த விஞ்ஞானிகள், அதை தடுக்கும் வகையிலான குறைந்த செலவு தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், 32 டிகிரி செல்சியஷுக்கு அதிகமாக வெயில் அடித்தால் அதை வீட்டிற்குள் நுழைவதை தடுக்கும் பிலிமை அமெரிக்காவின் எம்ஐடி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதாவது, பிளாஸ்டிக் பையைப் போன்று காணப்படும் இந்த பையை உங்களது வீட்டில் வெப்பம் நுழையும் பகுதிகளில் படர்த்திவிட வேண்டும். எப்போதெல்லாம் வெயிலின் அளவு 32 டிகிரி செல்சியஸை தாண்டி செல்கிறதோ, அப்போது அதனுள்ளே பொருத்தப்பட்டிருக்கும் சிறிய நுண்பொருட்கள் வெப்பத்தை தடுத்து வெளியேற்றும்.
ஹாங்காங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சி முடிவுகள் ஜூல் (Joule) என்ற சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளன.
பிற செய்திகள்:
- வலுவிழந்தது கஜ புயல்; குறைந்தது நான்கு பேர் உயிரிழப்பு
- அரசியல் வெற்றிடத்தை ரஜினியால் ஏன் நிரப்ப முடியாது?
- டி.எம்.கிருஷ்ணா இசை நிகழ்ச்சி ரத்து: 'இவர்கள் யார் என்பதை யூகிக்க முடிகிறது'
- "கஷோக்ஜி கொலைக்கும் இளவரசர் சல்மானுக்கும் தொடர்பில்லை"
- 1200 கோடியில் காவிரித்தாய்க்கு 360 அடி உயர சிலை அமைக்க கர்நாடகா திட்டம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :