You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சபரிமலை நடை இன்று மாலை திறப்பு: முந்தும் பெண்கள் - என்ன நடக்கிறது?
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசிக்காக
சபரிமலையில் பெண்கள் நுழைவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிய பிறகு ஏற்பட்ட பரபரப்பான சூழ்நிலை அடங்குவதற்குள் இன்று முதல் முறையாக அதிக நாட்களுக்கு வழிபாட்டுக்காக நடை திறக்கப்படுகிறது. அதாவது, இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படும் நடை அடுத்த 64 நாட்களுக்கு திறந்திருக்கும்.
உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, எவ்வித பிரச்சனையும் இல்லாமல் பெண்கள் உள்பட பக்தர்கள் சபரிமலைக்கு வந்து செல்வதை உறுதிசெய்வதற்காக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அம்மாநில எதிர்க்கட்சிகள், பண்டலம் ராஜ குடும்பம் மற்றும் தந்திரிகளுடன் நடத்திய கூட்டம் தோல்வியில் முடிவடைந்ததால் பக்தர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டபோது, கடந்த செப்டம்பர் மாதம் வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்வதற்கு தயாராக இருப்பதாகவும், ஆனால் ஏற்கனவே வழங்கிய தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கமுடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
"சபரிமலையில் பெண்கள் வழிபடுவதற்கு அனுமதிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், நாம் தீர்ப்பை மீறி எப்படி செயல்பட முடியும். தீர்ப்புக்கு எதிராக உள்ள பக்தர்களின் கருத்துகளை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் கடமையும் எங்களுக்கு உள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை நீர்த்துப்போக செய்வதற்கு நாங்கள் முற்படவில்லை, எவ்வித அசம்பாவிதங்களுமின்றி சபரிமலையில் வழிபாடு நடைபெறுவதற்கே நாங்கள் விரும்புகிறோம்" என்று பினராயி விஜயன் கூறியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதில் முதலமைச்சர் "பிடிவாதமாக" இருப்பதாக கூறி அம்மாநில சட்ட சபையிலிருந்து எதிர்க்கட்சி தலைவர்கள் வெளிநடப்பு செய்த பிறகு இந்த அறிக்கையை பினராயி வெளியிட்டுள்ளார்.
"பக்தர்களின் உணர்வுகளை இந்த அரசாங்கம் புறக்கணித்துள்ளது. முதலமைச்சர் பிடிவாதத்துடன் செயல்படுகிறார். இந்த விவகாரம் குறித்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி விசாரிக்கும் வரை மாநிலத்தில் அமைதி நிலைநாட்டுவதற்கே இந்த கோரிக்கையை முன்வைத்தோம்" என்று கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரான சென்னிதலா கூறியுள்ளார்.
"இந்த விவகாரத்தில் அகந்தையுடனும், கம்யூனிச கொள்கைகளை திணிக்கும் நோக்கத்துடனும் செயல்பட்டு வரும் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தக்க பதிலடி கொடுப்போம்" என்று கேரள மாநில பாஜகவின் தலைவரான ஸ்ரீதரன் பிள்ளை தெரிவித்துள்ளார்.
சபரிமலையில் பெண்கள் வழிபடுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிய பிறகு கடந்த அக்டோபர் மாதம் ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்ய முற்பட்ட பல பெண்களை மற்ற பக்தர்கள் தடுத்தனர். பெண்களை வழிபடவிடாமல் தடுத்தது சங்க பரிவார் இயக்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள்தான் என்று பின்னர் ஸ்ரீதரன் தெரிவித்தார்.
சென்ற அக்டோபர் மாதம் சபரிமலைக்கு சென்ற சில பெண்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில், இம்முறை எவ்வித பாதுகாப்பு வழங்கப்படும் என்பதில் இதுவரை தெளிவில்லை. "சபரிமலைக்கு சென்று வழிபடுவதற்கு இதுவரை 700-800 பெண்கள் கேரள காவல்துறையின் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்த அனைவருக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும்" என்று பெயர் வெளியிட விரும்பாத கேரள மாநில உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
பெண்ணுரிமை செயற்பாட்டாளருக்கு பாதுகாப்பு அளிக்கப்படுமா?
சபரிமலையில் வழிபடுவதற்காக கொச்சி விமான நிலையத்தில் வந்திறங்கிய மகாராஷ்டிராவை சேர்ந்த பெண்ணுரிமை செயற்பாட்டாளர் த்ருப்தி தேசாய் மற்றும் மற்ற ஆறு பெண்கள் அங்கிருந்து வெளியேற முடியாத நிலை நீடித்து வருகிறது.
மகாராஷ்டிராவிலிருந்து இன்று அதிகாலை சுமார் 4:30 மணியளவில் கொச்சி விமான நிலையத்திற்கு வந்த த்ருப்தி தேசாய் உள்ளிட்ட ஏழு பெண்கள், தங்களை சபரிமலைக்கு அழைத்து செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனம் ஒன்று கூட இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
"போராட்டக்காரர்கள் தங்கள் மீதும், வாகனத்தின் மீதும் தாக்குதல் நடத்துவார்கள் என்ற அச்சத்தில் வரவில்லை என்று அவர்கள் என்னிடம் கூறினர்" என்று பிபிசியிடம் த்ருப்தி தேசாய் கூறினார்.
சபரிமலையை போன்று பெண்கள் வழிபடுவதற்கு அனுமதிக்கப்படாத மகாராஷ்டிராவிலுள்ள ஷானி ஷிங்காப்பூர் கோயிலுக்கு த்ருப்தியும், அவரது நண்பர்களும் தடையை மீறி உள்ளே சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
த்ருப்தி உள்ளிட்டவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக கொச்சி விமான நிலையத்தில் 150 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
"பத்தனம்திட்டாவை அடைந்து அங்கிருந்து சபரிமலைக்கு அழைத்து செல்வதற்கு முன்னர் சிறிது காலத்திற்கு இங்கேயே காத்திருக்குமாறு கேரள காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது" என்று அவர் மேலும் கூறினார்.
பிற செய்திகள்:
- கரையை கடந்தது 'கஜ' புயல் : தொடரும் கனமழை
- டி.எம்.கிருஷ்ணா இசை நிகழ்ச்சி ரத்து: 'இவர்கள் யார் என்பதை யூகிக்க முடிகிறது'
- வரைவு பிரெக்ஸிட் ஒப்பந்தம்: எதிர்ப்புத் தெரிவித்து பிரிட்டன் அமைச்சர்கள் பதவி விலகல்
- "கஜ புயல் வரும்போது செல்ஃபி எடுக்காதீர்கள்"
- இலங்கை நாடாளுமன்றத்தில் அடிதடி, எம்.பி. ஒருவர் காயம் - மீண்டும் ஒத்திவைப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :