You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சபரிமலை: உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்?
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி
உச்சநீதிமன்றம் அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என முன்பு அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்காததை தொடர்ந்து, கேரள அரசாங்கமும், சங் பரிவாரமும் சபரிமலை தொடர்பாக இன்னொரு மோதலுக்கு தயாராகிவிட்டன.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என செப்டம்பர் 28ஆம் தேதி அளித்த தீர்ப்பை மறுபரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள ஒப்புக் கொண்டுள்ளது உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து நபர் அமர்வு.
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கடந்த 28ஆம் தேதியன்று தீர்ப்பளித்திருந்தது. அந்தத் தீர்ப்புக்கு எந்த தடையும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
தீர்ப்புக்கு எதிராக 49 மறு சீராய்வு மனுக்களும், 4 ரிட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மறு சீராய்வு மனுக்களின் விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதியன்று நடைபெறும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
வெற்றி
மறுபரிசீலனை ஏற்பு என்பதையே முதற்கட்ட வெற்றியாக எடுத்துக் கொள்கின்றனர் ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று சொல்வோர்.
மேலும் அவர்களும், பாரதிய ஜனதா மற்றும் சங் அமைப்புகளும் கேரள இடது முன்னணி அரசிடம் ஜனவரி 22ஆம் தேதி வரை பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்க கூடாது என கேட்டுக் கொண்டுள்ளன.
நவம்பர் 17ஆம் தேதி சபரிமலை கோயில் நடை திறக்க இருக்கிறது இரண்டு மாதங்களுக்கு திறந்திருக்கும். இந்த சமயத்தில் உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருவர்.
அனுமதிக்க மாட்டோம்
செப்டம்பர் 28ஆம் தேதி அளித்த தீர்ப்பிற்கு உச்ச நீதிமன்றம் தடைவிதிக்கவில்லை என்பதால் சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு தமது அரசு பாதுகாப்பு வழங்கும் என்கிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன். ஆனால், நாங்கள் அனுமதிக்க மாட்டோம். கடந்த மாதம் சபரிமலைக்கு வந்த பெண்களை எப்படி தடுத்தோமோ அதுபோல் அடுத்த இரண்டு மாதங்களும் தடுப்போம் என்று பிபிசி இந்தியிடம் தெரிவிக்கிறார் அந்தரஷ்திரிய இந்து பரிஷத்தின் தேசிய செயலாளர் ப்ரதீஷ் விஸ்வநாத்.
இது உச்சநீதிமன்றத்தின் ஆணையை சிதைப்பதாக அமையாதா என்ற கேள்விக்கு, "இல்லை. உதாரணத்திற்கு ஒருவரை தூக்கிலிட நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. பின்னர், அந்த தீர்ப்பை பரீசிலினைக்காக எடுத்துக் கொள்கிறது என்று வையுங்கள். மறு தீர்ப்பு வரும் வரை அவரை தூக்கிலிட மாட்டோம் தானே? அரசு இதனை யோசிக்க வேண்டும், ஜனவரி 22 ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும்" என்கிறார் விஸ்வநாத்.
தெளிவாக உள்ளது
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பானது தெளிவாக உள்ளது. செப்டம்பர் 28 அளித்த தீர்ப்பிற்கு அது தடை விதிக்காத போது எங்களால் ஏதும் செய்ய முடியாது என்கிறார் கேரள முதல்வர் விஜயன்.
ஏதாவது முடிவெடுக்கும்பட்சத்தில் சட்ட ஆலோசனை பெறுவோம் என்கிறார் அவர்.
கேரள காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா கேரள அரசு இவ்வளவு உறுதியாக இருக்க வேண்டாம். செப்டம்பர் 28 தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் விடலாம் என்கிறார்.
தேவசனத்தின் முன்னாள் தலைவரும், மனுதாரர்களில் ஒருவருமான கோபலகிருஷ்ணன், "இது பக்தர்களின் முதற்கட்ட வெற்றி. எங்களது பிராத்தனைகளும், வேண்டுதல்களும் நிறைவேறும்" என்கிறார் அவர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :