சரிந்தது எண்ணெய் விலை - அடுத்த ஆண்டு உலகின் எண்ணெய் தேவை எவ்வளவு?

கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.

சரிந்த எண்ணெய் விலை

கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெயின் தேவை சர்வதேச அளவில் குறைந்துள்ளது. எண்ணெய் ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு அடுத்தாண்டு சர்வதேச அளவில் ஒரு நாளைக்கான எண்ணெய் தேவையானது 1.29 மில்லியன் பாரல்கள் என்ற அளவில் இருக்கும் என்று கணித்ததை தொடர்ந்து விலை குறைந்துள்ளது. இது அவர்கள் முன்னர் கணித்ததைவிட ஏறத்தாழ 70,000 பீப்பாய்கள் குறைவு.

வெறுப்பு குற்றங்கள்

வெறுப்பின் காரணமாக ஏற்படும் குற்றங்கள் 2017ஆம் ஆண்டு அமெரிக்காவில் 17 சதவிகிதம் அதிகரித்துள்ளது. தொடர்ந்து கடந்த மூன்றாண்டுகளாக வெறுப்பினால் ஏற்படும் குற்றங்கள் அதிகரித்தப்படியே உள்ளன. 2017ஆம் ஆண்டில் மட்டும் 7175 வெறுப்பு குற்றங்கள் நடந்துள்ளதாகவும், 2016ஆம் ஆண்டில் இது 6121 என்ற அளவில் இருந்ததாகவும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அமைப்புகள் தெரிவிக்கின்றன. கருப்பினத்தவர்கள் மற்றும் யூதர்களுக்கு எதிராகவே இவ்வகை குற்றங்கள் அதிக அளவில் நடப்பதாக அறிக்கை விவரிக்கிறது.

ஏலத்தில் வைரம்

அரிதான பிங் வைரம் ஒன்று இதுவரை இல்லாத அளவிற்கு அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளது. அதாவது 50 மில்லியன் டாலருக்கு ஜெனிவாவில் நடந்த ஏலத்தில் வாங்கப்பட்டது. 19 கேரட் எடை கொண்ட இந்த வைரத்தை வாங்கியது அமெரிக்க நிறுவனமான ஹாரி வின்ஸ்டன். ஏலம் தொடங்கிய ஐந்து நிமிடத்தில் இந்த வைரம் ஏலம் போனது.

அமேசான்

தமது அலுவலகத்திற்கான புதிய வளாகங்களை நியூயார்க் நகரம், வாஷிங்டனில் கட்ட முடிவு செய்துள்ளது அமேசான் நிறுவனம். அதுபோல நாஷ்விலேவிலும் தமது செயல்பாடுகளை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம். இந்த மூன்று புதிய அலுவலகங்கள் மூலம் அடுத்த 20 ஆண்டுகளில் 55,000 புதிய வேலைவாய்ப்புகள் உண்டாகும்.

எட்டு பேர் பலி

இஸ்ரேல் மற்றும் காஸாவில் உள்ள பாலத்தீன கிளர்ச்சியாளர்களுக்கும் - இஸ்ரேல் படைகளுக்கும் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை எட்டு பேர் பலியாகி உள்ளனர். திங்கட்கிழமை இரவுவரை 460 ராக்கெட் தாக்குதல்களை இஸ்ரேல் படைகளை நோக்கி கிளர்ச்சியாளர்கள் நிகழ்த்தி உள்ளனர். அதுபோல, இஸ்ரேல் விமானப்படை கிளர்ச்சியாளர்களின் 160 இலக்குகளை குறிவைத்து தாக்கி உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :