அயோத்தி தீர்ப்பு: அனைத்து இந்திய முஸ்லீம் தனிநபர் சட்டவாரியம் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு

அயோத்தி நிலவிவகார வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்யப் போவதாக அனைத்து இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.

மிஸ்பஹுதீன், மொஹமத் உமர் மற்றும் ஹாஜி மஹபூப் ஆகியோர் சீராய்வு மனு தாக்கல் செய்ய ஒப்புக் கொண்டுள்ளதாக சுன்னி வஃக்பு வாரிய வழக்கறிஞர் ஜிலானி தெரிவித்தார்.

முதன் முதலில் வழக்கு தாக்கல் செய்த இக்பால் அன்சாரி, மீண்டும் சீராய்வு மனு தாக்கல் செய்வாரா என்று கேட்டதற்கு, போலீஸ் நிர்வாகம் அவருக்கு அழுத்தம் கொடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.

"அயோத்தி போலீஸார் இக்பால் அன்சாரிக்கு இது தொடர்பாக அழுத்தம் கொடுப்பதால், அவர் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய ஒப்புக் கொள்ளவில்லை. நாங்கள் சந்தித்து பேசவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. கடைசி நிமிடத்தில் இடத்தை மாற்றி நாங்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தினோம். நட்வா கல்லூரியில் நடப்பதாக இருந்த கூட்டம் பின்னர் மும்தாஜ் கல்லூரிக்கு மாற்றப்பட்டது" என்றார்.

ஆனால், அனைத்து இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் இந்த வழக்கில் பங்கு வகிக்கவில்லை என்பதால், அவர்கள் வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று இந்து மகாசபையின் வழக்கறிஞர் வருண் சின்ஹா கூறினார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் இந்துக்கள் ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்து கடந்த சனிக்கிழமை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

முஸ்லீம்களுக்கு அயோத்தி நகருக்குள் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்கவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.

அயோத்தி நிலத் தகராறு தொடர்பான வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து தங்கள் தரப்பு எந்த விதமான மறு ஆய்வு மனுவோ, சீராய்வு மனுவோ தாக்கல் செய்யப் போவதில்லை என்று உத்தரப்பிரதேச மாநில சுன்னி மத்திய வஃக்பு வாரியத் தலைவர் ஜூஃபர் ஃபரூக்கி முன்பு தெரிவித்து இருந்தார்.

இப்படியான சூழலில், அனைத்து இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம்(ஏஐஎம்பிஎல்பி) இன்று லக்னோவில் கூடி விவாதித்தது. அதன்பின் சுன்னி வஃக்பு வாரிய வழக்கறிஞர் ஜிலானி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது , "அயோத்தியில் உள்ள மசூதியின் நிலம் அல்லாஹ்வுக்குச் சொந்தமானது. ஷாரியத் சட்டப்படி அந்த நிலத்தை யாருக்கும் தர முடியாது. மசூதிக்கு மாற்றாக வேறு ஏதும் இருக்க முடியாது" என்று கூறியதாக ஏ.என்.ஐ செய்தி முகமை கூறுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :