You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வைரலான சிறுமியின் புகைப்படம் - உண்மையில் நடந்தது என்ன?
ஐதராபாத்தில் ஐந்து வயது சிறுமி ஒருவர், கையில் தட்டுடன் பள்ளி வகுப்பறை ஒன்றின் வெளியே நின்று கொண்டு ஏக்கத்துடன் எட்டிப் பார்ப்பது போன்ற புகைப்படம் பெரும் கவனத்தை பெற்றது.
ஆனால் அந்த புகைப்படத்தின் பின்னணி வேறொன்றாக உள்ளது.
அதுகுறித்து அறிய பிபிசி தெலுங்கு சேவையின் செய்தியாளர் தீப்தி பதினி சிறுமியின் தந்தையிடம் பேசினார்.
திவ்யா என்ற அந்த சிறுமி வசிக்கும் அந்த சேரிப் பகுதியில் தற்போது அவள் புகழ்பெற்றுவிட்டாள்.
அந்த ஐந்து வயது சிறுமி இருக்கும் புகைப்படம் சமீபத்தில் வைரலானது. அந்த உருக்கமான புகைப்படம் நவம்பர் 7ஆம் தேதி தெலுங்கு செய்தித்தாள் ஒன்றில் "பசியுடன் ஒரு பார்வை" என்ற வாக்கியத்துடன் பிரசுரமானது.
அது உடனே மக்களின் கவனத்தையும் பெற்றது. குழந்தைகள் நல ஆர்வலர்கள் அந்த புகைப்படத்தை முகநூலில் பகிர்ந்துவிட்டு, உணவு மற்றும் கல்வி மறுக்கப்படும் மற்றொரு குழந்தை என குறிப்பிட்டிருந்தனர்.
பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய அந்தப் புகைப்படத்தால் திவ்யா அடுத்த நாளே பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
ஆனால் துப்பரவு பணியாளர்களாகப் பணி செய்துவரும் தனக்கும் தனது மனைவிக்கும் இது நியாயமற்றதாக தோன்றியது என்கிறார் அந்த சிறுமியின் தந்தை லக்ஷ்மணன்.
"நான் அந்த புகைப்படத்தை பார்த்தவுடன் பெரும் துயரடைந்தேன். திவ்யாவிற்குப் பெற்றோர்கள் உள்ளனர். அவளுக்கு நல்லதொரு எதிர்காலத்தை வழங்க நாங்கள் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவளை ஏதோ அனாதை குழந்தை போலச் சித்தரித்திருப்பது எங்களுக்கு துயரமளிக்கிறது." என்கிறார் லக்ஷ்மணன்.
திவ்யாவின் பெற்றோருக்கு திவ்யாவை தவிர மேலும் மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்களை நல்லபடியாக படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் குப்பை பொறுக்கும் தொழிலில் ஈடுபட்டுவரும் திவ்யாவின் தந்தை.
திவ்யாவின் சகோதரிகள் அரசுப் பள்ளியில் படிக்கின்றனர்.
திவ்யாவின் அண்ணன் பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரியில் சேரவிருக்கிறார்.
திவ்யாவுக்கு ஆறு வயது ஆன பின் அவளை அரசுப் பள்ளியில் சேர்க்கலாம் என அவளின் தந்தை காத்துக் கொண்டிருந்தார்.
திவ்யாவின் குடும்பம் ஐதராபாத் நகரின் முக்கிய பகுதியில் ஒரு சிறிய ஓலை குடிசையில் வாழ்ந்து வருகின்றனர்.
அந்த சேரிப் பகுதி, திவ்யா படம்பிடிக்கப்பட்ட அரசுப் பள்ளியிலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ளது.
அந்த பகுதியில் சுமார் 300 குடும்பத்தினர் வசிக்கின்றனர். அவர்கள் அனைவரும் தினக்கூலி வேலை செய்பவர்கள் அவர்களின் குழந்தைகள் அருகாமையில் உள்ள பள்ளியில் பயில்கின்றனர்.
அந்த வீட்டைச் சுற்றி மறுசுழற்சி செய்ய விற்கத் தயாராக இருக்கும் பிளாஸ்டிக்குகளும், கண்ணாடி பொருட்களும் சூழ்ந்துள்ளன.
மாதம் ஒன்றுக்கு தானும் தனது மனைவியும், 10,000 ரூபாய் வரை சம்பாதிப்பதாகவும், அது உணவு மற்றும் உடைக்குச் செலவிடுவதாகவும் தெரிவிக்கிறார் லக்ஷமணன். குழந்தைகளை அரசுப் பள்ளியில் படிக்க வைப்பதால் அவர்களுக்குக் கல்வி இலவசம்.
திவ்யாவின் தந்தை லஷ்மணன், "நான் பெற்றோர் இல்லாமல் வளர்ந்தவன். எனவே எனது வாழ்க்கையில் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். என்னைப்போன்ற வாழ்க்கை எனது பிள்ளைகளுக்கு அமையக் கூடாது. எனவே அவர்கள் அனைவரையும் பள்ளிக்கு அனுப்புகிறேன்." என்கிறார்.
தனது அண்ணனின் குழந்தைகளையும் தான் பார்த்துக் கொள்வதாகவும் எனவே தன்னை அந்த புகைப்படம் மிகவும் காயப்படுத்தியதாகவும் அவர் கூறுகிறார்.
"எனது அண்ணனும் அண்ணியும் சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டனர். அவர்களின் ஐந்து குழந்தைகள் அனாதையாக வளரக்கூடாது என்பதற்காக அவர்களை ஒரு காப்பகத்தில் சேர்த்துப் பார்த்து வருகிறேன்," என்கிறார் லஷ்மணன்.
திவ்யா கையில் தட்டுடன் அந்த பள்ளிக்குச் சென்றது குறித்துக் கேட்டபோது, அந்த அரசுப் பள்ளியில் மத்திய வேளையில் சத்துணவு வழங்குவதால் இந்த பகுதியிலிருந்து சில குழந்தைகள் அங்கு செல்வர். ஆனால் திவ்யா தினமும் செல்லமாட்டாள். ஆனால் அவள் சென்ற அந்த நாள் அவளை புகைப்படம் எடுத்துள்ளனர்.
சில குழந்தைகள் வீட்டிலிருந்து உணவு எடுத்து வருவதால் அவர்களுக்கு கிடைக்கும் மதிய உணவை அங்கு வரும் குழந்தைகளுக்கு அவர்கள் கொடுத்துவிடுவர் என்கின்றனர் அங்குள்ள ஆசிரியர்கள்.
அந்த பகுதியில் சத்துணவுக் கூடம் இல்லாததால் அந்த பள்ளியைச் சுற்றி நிறையக் குழந்தைகள் வருவார்கள் என பெயர் வெளியிட விரும்பாத ஆசிரியர் ஒருவர் தெரிவிக்கிறார்.
"இதையேதான் லக்ஷமணனும் அவரின் பக்கத்து வீட்டுக்காரர்களும் தெரிவிக்கின்றனர். அங்குள்ள பெற்றோர்கள் பணிக்கு செல்வதால் குழந்தைகளை எங்கு விட்டுச் செல்வது என்பது பெரிய கேள்வியாக உள்ளது," என்கிறார் லக்ஷமணன்.
அந்த பள்ளியின் ஆய்வாளர் ஷிவ்ராம் பிரசாத், திவ்யாவின் புகைப்படத்தால் அங்கு ஒரு சத்துணவு அமைந்தால் சரி என்கிறார். மேலும் இதனால் அந்த பள்ளியில் சில வசதிகளும் மேம்படுத்தப்படும் என்று நம்புவதாக அங்குள்ள ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
எதுவாக இருப்பினும் பள்ளிக்குச் செல்வது குறித்து திவ்யா மகிழ்ச்சியாக இருக்கிறாள். தனது பெயரைத் தவிர நாம் கேட்ட எந்த ஒரு கேள்விக்கும் அவள் பதிலளிக்கவில்லை.
திவ்யா மிகவும் அமைதியான குழந்தை என்கிறார் லக்ஷ்மணன். தனது தந்தையின் கையை பிடித்து முத்தமிடுகிறாள் திவ்யா.
தனது புத்தகப்பையை எங்குச் சென்றாலும் எடுத்துச் செல்கிறாள் திவ்யா. விளையாடச் சென்றால்கூட அங்கு எடுத்து சென்றுவிடுகிறாள்.
இந்த புகைப்படத்தால் ஒரு நன்மையும் ஏற்பட்டுள்ளது என்கிறார் திவ்யாவின் தந்தை. திவ்யா வயதுடைய பிற குழந்தைகளையும் அந்த பள்ளியில் சேர்த்துள்ளனர் என்பதே அது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்