You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்காவில் வரலாறு காணாத குளிர் - காரணம் என்ன?
சைபீரியாவில் தொடங்கி 'ஆர்க்டிக் பிளாஸ்ட்' என்று அழைக்கப்படும் குளிர்க்காற்று வீசுவதால் அமெரிக்காவின் பல பகுதிகளில் வரலாறு காணாத அளவு குளிர் நிலவுகிறது.
பல பகுதிகளில் கடுமையான பனிப் பொழிவு நிலவுகிறது.
கன்சாஸ், இல்லினாய்ஸ் மாகாணங்களில் இதுவரை கண்டிராத அளவு மோசமான குளிர் பதிவாகியுள்ளது.
மோசமான வானிலை காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், இதுவரை நான்கு பேரின் மரணம் மோசமான வானிலையால் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. சில பகுதிகளில் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளது.
நாட்டின் கிழக்குப் பகுதியில் வீசும் இந்தக் காற்றின் தன்மை குளிர் காலத்தை விட மிகவும் கடுமையானதாக உள்ளது. முந்தைய ஆண்டுகளில் இதே தேதியில் கன்சாஸின் பல நகரங்களில் பதிவான வெப்பநிலையைவிட தற்போது மிகக் குறைந்த வெப்பநிலையே நிலவுகிறது. மிகக் குறைந்த வெப்பநிலை கார்டன் சிட்டியில் பதிவாகியுள்ளது. இங்கு -1F (-18° C) ஆக வெப்பநிலை குறைந்து, கடந்த ஆண்டு பதிவான 7 ஃபாரன்ஹீட் என்ற முந்தைய வரலாறு காணாத அளவை முறியடித்துள்ளது.
சிகாகோவில் 1986ல் பதிவான 8F வெப்பநிலையை முறியடித்து தற்போது, 7F வெப்பநிலை பதிவாகியுள்ளது என தேசிய வானிலை சேவை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தின் போர்ன்வில்லி நகரத்தில் அரிதாக பனிப்பொழிவும் காணப்படுகிறது.
தேசிய வானிலை சேவையின் வானிலை ஆய்வாளர் கெவின் பிர்க், காற்றின் தன்மை "நவம்பர் மாத மத்தியில் இருப்பது போல இல்லை. ஜனவரி மாத மத்தியில் இருப்பது போல இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
வழக்கத்துக்கு மாறான இந்த வானிலையால், செவ்வாய்க்கிழமை அன்று பல பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் முடங்கின. இந்த குளிரால் சாலைப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
பனிப் படர்ந்த சாலையில் ஒரு லாரி கட்டுப்பாட்டை இழந்ததால் ஏற்பட்ட விபத்தில், எட்டு வயது சிறுமி உயிரிழந்தாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மிச்சிகனில் சாலையின் மோசமான நிலையால் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்