You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பின்லாந்து கடற்கரையை நிறைத்த அரிய “பனி முட்டைகள்”: அரிய வானிலை நிகழ்வு
அரியதொரு வானிலை நிலவிய காரணத்தால், ஆயிரக்கணக்கான முட்டை வடிவ பனிக்கட்டிகள் பின்லாந்தின் கடற்கரையில் காணப்பட்டன.
பின்லாந்துக்கும் ஸ்வீடனுக்கும் இடையிலான போத்னியா வளைகுடாவில் உள்ள ஹைலூட்டோ தீவில் காணப்பட்ட "பனி முட்டைகளை" கண்டவர்களில் புகைப்படக் கலைஞர் ரிஸ்டோ மட்டிலாவும் ஒருவர்.
காற்றாலும், நீராலும் சிறிய பனிக்கட்டி துண்டுகள் உருண்டு செல்லும் அரியதொரு வழிமுறையின்போது இவ்வாறு பனிக்கட்டிகள் வட்டவடிவில் உருவாவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இது போன்று அதற்கு முன்னர் பார்த்ததே இல்லை என்று பிபிசியிடம் தெரிவித்தார் அருகிலுள்ள ஒலு நகரை சோந்த மாட்டிலா.
"நான் எனது மனைவியோடு மர்ஜனீமி கடற்கரையில் இருந்தன். வானிலை சூரிய ஒளியோடு இருந்தாலும், தட்பவெப்ப நிலை பூஜியத்திற்கு கீழ் ஒன்றாகவும், பலத்த காற்று வீசுகிற நாளாகவும் அது இருந்தது". என்று அவர் பிபிசியிடம் கூறினர்.
"அங்கு ஆச்சரியமடைய வைத்த இந்த முட்டை வடிவ பனிக்கட்டிகளை பார்த்தோம். நீருக்கு அருகில் பனியையும், முட்டை வடிவ பனிக்கட்டிகளையும் பார்த்தோம்" என்றார் அவர்.
இந்த முட்டை வடிவ பனிக்கட்டிகள் சுமார் 30 மீட்டர் வரை பரவியிருந்தன. சிறியவை முட்டை வடிவிலும், பெரியவை கால்பந்து அளவிலும் அங்கு காணப்பட்டன.
"அது மிகவும் வியப்பளிக்கும் காட்சியாக இருந்தது. கடந்த 25 ஆண்டுகளில் இது போன்றதொரு நிகழ்வை நான் பார்த்த்தில்லை" என்று மாட்டிலா கூறினார்.
"என்னிடம் கேமரா இருந்ததால், இந்த அபூர்வ காட்சியை படம் பிடித்து பாதுகாப்பாக வைக்க முடிவு செய்தேன்" என்கிறார் அவர்.
பிபிசி வானிலை அறிவிப்பு செய்தியாளர் இது பற்றி கருத்து தெரிவிக்கையில், "பனிக்கட்டி பந்துகள் உருவாவதற்கு குளிராக இருக்க வேண்டும். சற்று காற்று வீச வேண்டும். அவ்வளவுதான்" என்று குறிப்பிட்டார்.
பெரிய பனிப்பாளத்தில் இருந்து இவை பொதுவாக உருவாகின்றன. பின்னர் அலைகளில் உருட்டி செல்லப்பட்டு முட்டை வடிவம் பெறுகின்றன" என்று அவர் தெரிவித்தார்.
"கடல் தண்ணீர் அவற்றின் மீது உறைந்து பனி படரும்போது, அவை இன்னும் பெரிதாகின்றன. அவற்றின் மேற்பரப்பு மென்மையாகிறது. இதன் விளைவாக, மென்மையான பந்து வடிவான பனிக்கட்டிகள் அலைகளால் அடித்து செல்லப்பட்டு கடற்கரையோரத்தில் நிரப்பப்படும்" என்று அவர் கூறுகிறார்.
இதுபோன்ற காட்சிகள் இதற்கு முன்னர் ரஷ்யாவிலும், சிக்காக்வே அருகிலுள்ள மிச்சிகன் ஏரி உள்பட பல இடங்களில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
2016ம் ஆண்டு, கடற்கரை ஓரத்தில் சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் மிக பெரிய பனிக்கட்டி பந்துகள் கிடத்த காட்சியை சைபீரியாவின் நைடா குடிவாசிகள் கண்டு களித்தனர்.
டென்னிஸ் பந்து வடிவம் முதல் ஒரு மீட்டர் வட்ட வடிவ பனிக்கட்டி பந்துகள் வரை அங்கு காணப்பட்டன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்