You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அயோத்தி தீர்ப்பு: "அரசியல் கட்சிகளுக்கு இந்து வாக்குகளை இழந்துவிடுவோம் என்ற பயம்" பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன்
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
இந்து வாக்குகளை இழந்துவிடுவோம் என்ற பயம் காரணமாக அயோத்தி நிலத்தகராறு வழக்கின் தீர்ப்பை வரவேற்பதாகவும், மக்கள் அமைதி காக்கவேண்டும் என்றும் பல அரசியல் கட்சிகள் பேசுகின்றன என்று மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்னன் கூறுகிறார்.
பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில், அயோத்தி நிலத் தகராறு வழக்கில் உள்ள குறைகளை வெளிப்படையாக சொன்னால் வாக்குகளை இழந்துவிடுவோம் என்பதால் நீதிமன்ற தீர்ப்பை மதிக்கவேண்டும் என்ற போலியான பிம்பத்தை அரசியல் கட்சிகள் உருவாக்குகிறார்கள் என காட்டமாக விமர்சிக்கிறார் சென்னையை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன்.
தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவில் பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த தீர்ப்பை முழுமையாக எதிர்க்கவும் இல்லை, முழுமையாக ஏற்றுக்கொள்ளவும் இல்லை என்பதை சுட்டிக்காட்டியபோது ''எல்லா கட்சிகளும் இந்து வாக்குகளை இழந்துவிடக்கூடாது என நினைக்கின்றன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனைப் போல ஒரு சிலர் மட்டுமே உண்மையான கருத்தை வெளியிட்டுள்ளனர். பெரும்பாலான கட்சிகள் திமுக, சிபிஎம் என பலரும் நீதிமன்றத் தீர்ப்பை சரியாக அணுகவில்லை. ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நடக்கும்போதுதான் விமர்சனம் செய்யக்கூடாது, கருத்து சொல்வது சரியில்லை. ஆனால் தீர்ப்பு வந்தபிறகு, அதில் உள்ள குறைகளை சொல்வதில் எந்த தவறும் இல்லை,''என்கிறார் ராதாகிருஷ்ணன்.
இஸ்லாமியர்கள் மாற்று இடம் கேட்டு நீதிமன்றத்தில் போராடவில்லை என்று கூறும் ராதாகிருஷ்ணன், ''தீர்ப்பில் சர்ச்சைக்குரிய நிலம் இந்துகளுக்கு என்றும் அந்த இடத்தில் இருந்த மசூதியை இடித்தது சட்டப்படி தவறு என்றும் இருவேறு கருத்துக்களை உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. பாபர் மசூதியை இடித்தது தவறு என ஒப்புக்கொள்ளும் நீதிமன்றம், அந்த மசூதி இருந்ததற்கு முன்னர் இந்து கோயில் இருந்ததற்கான சான்று இல்லை என்றும் கூறுகிறது. இறுதியில் அந்த இடத்தை இந்துகளுக்கு ஒதுக்கியுள்ளது வேடிக்கையாக உள்ளது,''என்கிறார் அவர்.
பாபர் மசூதி இருந்த இடத்தில் இஸ்லாமியர்களுக்கு இடம் கொடுக்காமல், அவர்கள் வழிபாடு செய்வதற்கு வழி இல்லாமல் உச்சநீதிமன்றத் தீர்ப்பு செய்ததுள்ளது வருத்தமாக உள்ளது என்கிறார் ராதாகிருஷ்ணன்.
இந்த தீர்ப்புக்கு பின்னர், இந்தியாவின் மீதான உலகநாடுகளின் பார்வை என்னவாக இருக்கும் என்று கேட்டபோது, இந்தியாவை ஒரு இந்து நாடாக பார்க்கும் பார்வை ஏற்படும் என்றார் .
''இந்தியாவில் பொருளாதார மந்தம் நிலவுகிறது. வேலைவாய்ப்பு இல்லை. வெளிநாடுகளை பொறுத்தவரை, இந்தியாவில் முதலீடு செய்தால் லாபமா என்று யோசனை செய்வார்கள். அதற்கான சூழல் இங்குள்ளதா என்பதைத்தான் பார்ப்பார்கள். இந்த நாட்டில் நடக்கும் பல விஷயங்கள் தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு எதிராக இருந்தால், கலவரங்கள் நடக்கும் வாய்ப்புள்ளது என கருதினால் முதலீடு செய்யமாட்டார்கள். நமக்கு நஷ்டம் ஏற்படும். இதனை விடுத்து மத்திய அரசு கோயில் கட்டுவதில் அக்கறை காட்டுகிறது,''என்கிறார்.
1990-களில் இருந்து பாஜக ராமர் கோயில் கட்டுவதாக கூறி ஓட்டுகேட்டதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றும் இனி அவர்களுக்கு வாக்கு கேட்பதற்கு எந்த பிரச்னையை கையில் எடுப்பது என தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
அயோத்தி தீர்ப்பை வைத்துக்கொண்டு, நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள மசூதிகளுக்கு அடியில் கோயில் இருந்ததது என பிற இந்து அமைப்புகள் கூறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நேர்காணலின் காணொளியை காண:
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்