அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த 5 நீதிபதிகள் யார்?

இந்தியாவில் மிகவும் உற்று கவனிக்கப்பட்ட அயோத்தி நிலத்தகராறு வழக்கை இந்திய உச்ச நீதிமன்றத்தை சேர்ந்த 5 நீதிபதிகள் விசாரித்து தீர்ப்பளித்தனர்.

அவர்களை பற்றிய தகவல்களை இந்த கட்டுரையில் தொகுத்து வழங்குகின்றோம்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்

நவம்பர் 17ஆம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ள ரஞ்சன் கோகோய், அதற்குமுன் பல முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்க வேண்டியுள்ளது.

65 வயதாகும் ரஞ்சன் கோகாய் இந்திய உச்சநீதிமன்றத்தின் 46வது தலைமை நீதிபதியாக பதவியேற்றவர்.

அசாமிலுள்ள திப்ருகார் பகுதியில் 1954ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி ரஞ்சன் பிறந்தார். ரஞ்சனின் தந்தை அசாமின் முன்னாள் முதலமைச்சர் கெசாப் சந்திர கோகாய் ஆவார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கெசாப் சந்திர கோகாய் கடந்த 1982ஆம் ஆண்டு அசாமின் முதலமைச்சராக இருந்தார்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலம் ஒன்றிலிருந்து இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்ற முதல் நபர் ரஞ்சன் கோகோய்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் இளங்கலை பட்டப்படிப்பை முடிந்த ரஞ்சன், அதே பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தார்.

1978ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவுசெய்த ரஞ்சன், கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகத் தொழில் செய்தார். கவுகாத்தி உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக கடந்த 2001ஆம் ஆண்டு பதவியேற்ற அவர், பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றத்திலும் பணியாற்றியுள்ளார்.

ஹரியாணா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2011ஆம் ஆண்டு பதவியேற்ற ரஞ்சன், அடுத்த ஆண்டே உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் குஜராத் அரசாங்கத்திற்கு எதிரான வழக்கு, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் வருமானம் பற்றிய வழக்கு, பல்லாண்டுகளாக அசாமில் வாழ்ந்து வரும் வங்கதேச குடியேறிகள் சார்ந்த வழக்கு போன்ற பல்வேறு வழக்குகளில் ரஞ்சன் தீர்ப்பு வழங்கியவராக அறியப்படுகிறார்.

தங்களது சொத்து விவரங்களை வெளியிட்ட 11 உச்சநீதிமன்ற நீதிபதிகளில் இவரும் ஒருவர். அவர் வைத்திருக்கும் நிலம், நகைகள், பணம் போன்றவற்றின் விவரங்களை பார்த்தால் அவர் எப்படிப்பட்ட எளிமையான வாழ்க்கையை வாழ்கிறார் என்பது தெரியும். ரஞ்சனிடம் சொந்தமாக ஒரு கார்கூட இல்லை. எப்போதெல்லாம் மாற்றம் உள்ளதோ, அப்போதெல்லாம் தனது சொத்து விவரத்தை ரஞ்சன் புதுப்பித்து வருகிறார்.

அடுத்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ரஞ்சன் கோகாய் வரும் நவம்பர் 17ஆம் தேதி ஓய்வு பெறும் நிலையில், அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே நியமிக்கப்பட்டுள்ளார்.

எப்ரல் 24, 1956ஆம் ஆண்டு நாக்பூரில் பிறந்த நீதிபதி பாப்டே, நாக்பூர் பல்கலைக்கழகத்தில் 1978ஆம் ஆண்டு, சட்டம் படித்து முடித்தார். முதலில் பாம்பே நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த அவர் 1998ஆம் ஆண்டு மூத்த வழக்கறிஞர் ஆனார்.

29 மார்ச், 2000 அன்று மும்பை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2012ல் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியானார் பாப்டே. அதனை தொடர்ந்து 2013ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.

பாப்டேவின் குடும்பத்தில் பல வழக்கறிஞர்கள் இருந்திருக்கிறார்கள். அவரது தாத்தாவும் ஒரு வழக்கறிஞர்தான். பாப்டேவின் தந்தையான, அர்விந்த் பாப்டே, 1980 மற்றும் 1985ல் மகாராஷ்டிராவின் அரசு தலைமை வழக்கறிஞராக இருந்தார்.

ஆதார் வழக்கு, என்ஆர்சி அசாம் உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் பாப்டே பங்கு வகித்திருக்கிறார்.

நீதிபதி டி.ஒய். சந்திரசூட்

1985ஆம் ஆண்டு இவரது தந்தை வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தீர்ப்பு வழங்கி, முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பால் மிகவும் அறியப்பட்டவர்தான் நீதிபதி டி.ஒய். சந்திரசூட்.

திருமண உறவுக்கு வெளியே கொள்ளும் உறவு தவறு என வரையறுக்கும் சட்டம் அரசியலமைப்பு ரீதியாக செல்லுபடியாகும் என்று இவரது தந்தை நீதிபதி ஒய்.வி சந்திரசூட் தீர்ப்பு வழங்கியிருந்தார்.

ஆனால், பின்னர் அவரது மகன் டி.ஒய். சந்திரசூட், சட்டப்பிரிவு 497 பெண்களின் மாண்புக்கும், சுயமரியாதைக்கும் எதிராக இருப்பதாக தீர்ப்பு அளித்தார்.

கணவன் விரும்பியதைபோல மனைவியை நடத்த அனுமதிக்க முடியாது என்றும், பெண்களின் பாலியல் சுதந்திரத்தை இந்த சட்டம் பாதிக்கிறது என்றும் டி.ஒய். சந்திரசூட் தீர்ப்பு அளித்தார்,

நீதிபதி தனன்ஜெய யஷ்வந்த் சந்திரசூட் டெல்லி பல்கலைக்கழகத்தில் எல்எல்பி பட்டம் பெற்ற பின்னர் சட்டத்தில் முதுநிலை பட்டம் பெற்றார்,

2016ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், 2024ம் ஆண்டு வரை பணியில் இருப்பார்.

மும்பை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய இவர், பின்னர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஆனார்.

நீதிபதி அசோக் பூஷண்

உத்தர பிரதேசத்தின் ஜான்பூரை சேர்ந்த நீதிபதி அசோக் பூஷண் 2016ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியானார். 2021ஆம் ஆண்டு வரை அவர் பணியில் இருப்பார்.

2001ஆம் ஆண்டு அலகாபாத் நிரந்தர நீதிபதியான இவர் நியமிக்க்பட்டார். பின்னர், 2015ஆம் ஆண்டு கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆனார்.

பான் அட்டையோடு ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்குவதற்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதி அர்ஜூன் சிக்ரியோடு, அந்த நீதிபதிகள் அமர்வில் நீதிபதி பூஷணும் இடம்பெற்றிருந்தார்.

முதல் தகவல் அறிக்கை (FIR) வழங்க வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட நிர்வாகம் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கும் வரை எந்தவொரு தகவல் அறியும் உரிமை கோரிக்கைக்கும் முதல் தகவல் அறிக்கையின் பிரதியை காவல்துறை வழங்க வேண்டுமென கேரள உயர் நீதிமன்றத்தில் இவர் இருந்த அமர்வுதான் தீர்ப்பளித்தது.

நீதிபதி அப்துல் நசீர்

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இருந்து நீதிபதி அப்துல் நசீர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக 2017ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இவர் ஓய்வு பெறுவார்.

நாட்டின் எந்தவொரு உயர் நீதிமன்றத்திலும் தலைமை நீதிபதியாக நீதிபதி அப்துல் நசீர் இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மங்களூரை சோந்த இவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஏறக்குறைய 20 ஆண்டுகள் பணிபுரிந்தார். 2003ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

அயோத்தி நிலத்தகராறு வழக்கில், 3 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இவரும் இடம்பெற்றிருந்தார். அதிக நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி நசீர் தெரிவித்திருந்தார்.

முத்தலாக் சொல்லி முஸ்லிம் பெண்களுக்கு வழங்கப்படும் மணமுறிவு அரசியலமைப்பு ரீதியாக செல்லுபடியாகுமா என்பதை முடிவு செய்யும் நீதிபதிகள் அமர்வில் நசீரும் இடம்பெற்றிருந்தார்.

முத்தலாக் நடைமுறையை நீக்குவது உச்ச நீதிமன்றத்தால் செய்யப்படுவதில்லை. நாடாளுமன்றம் செய்ய வேண்டியது என்று கூறி, இது தொடர்பாக அரசு சட்டம் இயற்ற வேண்டுமென அப்போதைய தலைமை நீதிபதி கௌஹரோடு இணைந்து நீதிபதி நசீர் தீர்ப்பளித்தார்.

குறிப்பு - பிபிசியின் செய்தியாளர் சல்மான் ரவி மற்றும் மூத்த பத்திரிகையாளர் சுசித்ரா மொஹந்தி அளித்த தகவல் மூலம் இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :