மலேசியப் பிரதமர் மகாதீர் வலியுறுத்தல்: "உலகில் தீவிரவாதம் குறைய பாலத்தீனத்தை அங்கீகரியுங்கள்"

பட மூலாதாரம், Getty Images
இஸ்லாமிய சமூகத்தில் நிலவும் விரக்தி மற்றும் கோபத்தின் விளைவாக உலகெங்கிலும் தீவிரவாதச் சம்பவங்கள் நிகழ்வதாக மலேசிய பிரதமர் துன் மகாதீர் மொஹம்மத் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரைப் போலவே பாலத்தீனமும் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார். குறிப்பாக பாலத்தீன பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பதை ஏற்கவே இயலாது என்கிறார் மகாதீர்.
எனவே, தீவிரவாதச் செயல்பாடுகளின் பின்னணியில் உள்ள காரணங்களை அனைத்துலகச் சமூகம் புரிந்து கொண்டு, அந்தக் காரணங்களை அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், அவ்வாறு செய்யவில்லை எனில், மத்திய கிழக்குப் பகுதியில் மட்டுமல்லாமல் உலகின் ஏனைய பிற பகுதிகளிலும் தீவிரவாத தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்யும் எனவும் கூறியுள்ளார்.
மீண்டும் இஸ்ரேல், பாலஸ்தீனம் பக்கம் பார்வையை திருப்பிய மலேசியா

பட மூலாதாரம், Getty Images
காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண, பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்திய மலேசிய பிரதமர், தற்போது இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினையைக் கையில் எடுத்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐ.நா பொதுப் பேரவையில் வெளிப்படையாக தமது கருத்துக்களை முன் வைத்தார் மகாதீர். இது இந்தியாவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியபோதும் அவர் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை.
மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே வர்த்தகப் போர் மூளும் எனும் அளவிற்கு ஊடகங்களில் பரபரப்புச் செய்தி வெளியான நிலையில், "காஷ்மீர் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது," என தாம் குறிப்பிட்டது சரிதான் என்று திட்டவட்டமாகக் கூறினார் மகாதீர்.
தற்போது அவரது பார்வை இஸ்ரேல், பாலத்தீனம் பக்கம் திரும்பியுள்ளது. பாலத்தீனமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மகாதீர் மீண்டும் குரல் எழுப்பியுள்ளார். அனைத்துலக தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட வேண்டுமெனில், பாலத்தீனத்தை அனைத்துலக சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார்.
நீண்ட காலமாகவே பாலஸ்தீனத்துக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தி வருகிறது மலேசியா. பாலத்தீனத்தின் மீது தாக்குதல் நடத்தப்படும் போதெல்லாம் மலேசியத் தலைமை இஸ்ரேலைக் கண்டிக்கத் தவறுவதில்லை.
இந்நிலையில் மீண்டும் பாலத்தீனத்துக்காகக் குரல் கொடுத்துள்ளார் பிரதமர் மகாதீர்.
பாலத்தீனியர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப் பட்டுள்ளனர்

பட மூலாதாரம், Getty Images
"பாலத்தீனத்தை சுதந்திர நாடாக அனைத்துலக சமூகம் அங்கீகரிக்க வேண்டும். இஸ்ரேலின் அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எந்தவிதமான இழப்பீடும் இன்றி பாலஸ்தீன மக்கள் தங்களது தாய் மண்ணை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இஸ்ரேலியர்களால் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன” என்று கோலாலம்பூரில் திங்கட்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றியபோது மகாதீர் குறிப்பிட்டார்.
மேலும், "ஆனால் இஸ்ரேலுக்குப் பின்னால் நின்று ஆதரவு அளிக்கும் ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் தீவிரவாதத்துக்குப் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்து விவாதிக்க மறுக்கின்றன. எதைத் தீவிரவாதம் என விவரிக்கிறோமோ, அதற்கான காரணங்களைப் புரிந்து கொண்டு அங்கீகரிக்கவில்லை எனில், நிலைமை மேலும் மோசமடையும். மேலும் பலர் கோபமும் விரக்தியும் அடைவார்கள். அது நாம் தீவிரவாதம் என வர்ணிக்கும் நிகழ்வுகளில்தான் சென்று முடியும்," என்று மகாதீர் குறிப்பிட்டார்.
மலேசியாவையும் , இஸ்லாமிய உலகத்தையும் பாதிக்கக்கூடிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கும் வகையில் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நீண்டகாலமாக பாலத்தீனத்திற்கு ஆதரவாக மலேசியா குரல் கொடுத்து வரும் நிலையில், இந்த நிலைப்பாட்டை மீண்டும் உறுதி செய்துள்ளார் பிரதமர் மகாதீர்.
"இந்தோனிசிய முஸ்லீம்களும் கூட கோபமும் விரக்தியும் அடைவார்கள்"

பட மூலாதாரம், Getty Images
காஸா (Gaza) பகுதிக்கு மலேசியா அனுப்பி வைத்த கட்டுமானப் பொருட்களுடன் சென்ற கப்பல்களை அனைத்துலக கடற்பகுதியில் வைத்து இஸ்ரேல் தடுத்து நிறுத்திவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், இது சட்ட விரோதமான செயல் எனச் சாடினார்.
"இத்தகைய செயல்பாடானது இஸ்ரேல் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட கடற்கொள்ளைக்கு ஈடானது. இதற்காக அந்நாடு கண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. இதனால் ஏராளமான இஸ்லாமியர்கள், குறிப்பாக அராபியர்கள், ஏன் இந்தோனீசிய முஸ்லீம்களின் விரகத்தியும் கோபமும் கூட அதிகரிக்கும். இதனால் வருங்காலங்களில் தீவிரவாதச் செயல்கள் அதிகரிக்கும். அவை மத்திய கிழக்குப் பகுதியில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் நிகழக்கூடும்," என்று மகாதீர் கவலையுடன் கூடிய எச்சரிக்கையை விடுத்தார்.
எனினும், பாலத்தீனியர்களின் உரிமைக்கான கோரிக்கைகள் மதிக்கப்பட்டு, ஆதரிக்கப்படும் எனில் தீவிரவாதச் செயல்களின் எண்ணிக்கை குறையும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், அதே வேளையில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டுள்ள இஸ்லாமியர்கள் பாலஸ்தீனத்திற்காக தாங்கள் எந்தவித பங்களிப்பையும் அளிக்கவில்லை என்பதை உணர வேண்டும் என்றார்.
கடந்த எழுபது ஆண்டுகளாக பாலஸ்தீனியர்கள் தங்கள் மண்ணுக்காகப் போராடி வருவதாகவும், இவ்விஷயத்தில் இதுவரை எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ராஜதந்திர செயல்பாடுகளே அனுதாபத்தைப் பெற உதவும் என மகாதீர் அறிவுறுத்தல்

பட மூலாதாரம், Getty Images
"தீவிரவாதச் செயல்கள் அதிகரித்திருப்பது அனைத்துலக சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதே இதற்குக் காரணம். 'இஸ்லாமோ ஃபோபியா' (Islamophobia) குறித்து மேற்கத்திய நாடுகள் முன்வைக்கும் தற்போதைய விளக்கத்தை மாற்ற வேண்டும். அதற்கு தீவிரவாத தாக்குதல்களை கைவிட்டு, ராஜதந்திர ரீதியில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் இஸ்ரேல் குற்றம் புரிந்திருப்பதை, அதன் அநீதியை வெளிப்படுத்த முடியும்," என்றார் பிரதமர் துன் மகாதீர்.
பெரும்பாலான மக்களின் ஆதரவைப் பெற ராஜதந்திர செயல்பாடுகளைப் பின்பற்றுவதே நல்ல வியூகமாக இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், அனைத்து அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் இஸ்லாமிய சமூகத்துக்கும் பாலஸ்தீனர்களுக்கும் எதிரானவர்கள் எனும் கூற்று உண்மையல்ல" என்றார்.
"எனினும் நாம் செய்யும் சில விஷயங்களால் நம் மீதான அவர்களுடைய அனுதாபத்தை இழக்க நேரிடுகிறது. பாலஸ்தீன மக்களுக்கு உதவக் கூடியவர்களாகவும், அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களாகவும் அறியப்பட்டவர்களும் கூட இஸ்லாமியர்களால் கொல்லப்பட்டுள்ளனர். இத்தகைய செயல்பாடு நமக்கு உலகின் ஆதரவைப் பெற்றுத் தராது.
இஸ்லாமியர்கள் மீதான இஸ்ரேலின் அடக்குமுறையை நிறுத்த வேண்டும் எனில், நாம் அனைத்துலகத்தின் ஆதரவையும் அனுதாபத்தையும் பெற வேண்டும். இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகள் மிகச்சிறந்த ஆட்சியை வழங்குவதன் மூலம் மதத் தீவிரவாதத்தை எதிர்கொண்டு கட்டுப்படுத்த இயலும்," என்று குறிப்பிட்ட பிரதமர் மகாதீர், சில இஸ்லாமியர்களும், இஸ்லாமிய குழுக்களும் பங்கேற்ற சில தீவிரவாத செயல்பாடுகள் இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்டதால் எழுந்த விரக்தியின் வெளிப்பாடு என்பதை தம்மால் புரிந்து கொள்ள முடிகிறது என்றும் தெரிவித்தார்.
80 பேரை கொன்றால் முன்னேற முடியுமா? - கேள்வி எழுப்பும் மலேசிய பிரதமர்

பட மூலாதாரம், Getty Images
அதற்காக மக்கள் கூடியுள்ள சந்தைக்குள் நுழைந்து தங்களையே வெடிகுண்டால் வெடிக்கச் செய்து, மேலும் 80 பேரை கொல்வது எந்த வகையில் பலனளிக்கும்? என்று மகாதீர் கேள்வி எழுப்பினார்.
"இதனால் நாம் முன்னேற முடியுமா? பாலஸ்தீனத்துக்கு விடுதலை பெற்றுத்தர இயலுமா? இஸ்லாமியர்கள் வலுவடைவார்களா? இவை எதுவும் நடக்காது.
கடந்த எழுபது ஆண்டுகளாக இவற்றை எல்லாம் செய்தாயிற்று. நமக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
மாறாக, நம் மக்களுக்கான சிறந்த ஆட்சியை அளிக்க வேண்டும். அவர்களைக் கைது செய்யாமல், வறுமையில் இருந்து மீள்வதற்கான உரிமைகளை அளிக்க வேண்டும். இவை தான் நம்மை வலுவாக்கும். தீவிரவாதச் செயல்பாடுகளை மறப்பதே இஸ்லாமா ஃபோபியாவுக்கான தீர்வு," என்றார் பிரதமர் மகாதீர்.
இஸ்லாமோ ஃபோபியா என்பது இஸ்லாத்தின் எதிரிகளால் உருவாக்கப்பட்ட வார்த்தை என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












