மத்திய கிழக்கு நாடுகளில் வளரும் இரானின் செல்வாக்கு: சாத்தியமானது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஃபிராங் கார்ட்நர்
- பதவி, பிபிசி பாதுகாப்பு செய்தியாளர்
மத்திய கிழக்கு நாடுகளில் போட்டி நாடாக இருக்கும் சௌதி அரேபியாவுக்கு எதிராக செல்வாக்கு செலுத்தும் தந்திரோபாய போராட்டத்தில் இரான் வெற்றி பெற்று கொண்டிருக்கிறது என்று லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச தந்திரோபாய ஆய்வு நிறுவனத்தின் ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
இரானின் பிராந்திய போட்டி நாடுகள் மேற்குலக நாடுகளின் ஆயுதங்களை வாங்குவதில் பில்லியன் கணக்கான டாலர்களை செலவிட்டுள்ளன. அவற்றில் பெரும்பான்மையானவை பிரிட்டனில் இருந்து வாங்கப்பட்டுள்ளன.
ஆனாலும், பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ள இரான், தன்னுடைய தந்திரோபாய கொள்கைகளை நிலைப்பெற செய்வதில் இந்த பிராந்தியம் முழுவதும் வெற்றிபெற்றுள்ளதாக தெரிகிறது.
சில நாடுகளில் கட்டுப்படுத்தும் செல்வாக்கும் முதல் சிரியா, லெபனான், இராக் மற்றும் ஏமன் போன்ற நாடுகளின் விவகாரங்களிலும் வேறுபட்ட நிலைகளில் இரான் செல்வாக்கு கொண்டுள்ளது.
"சமநிலை கொள்ளுதல்"
பிராக்ஸி ஆயுதப்படையினர் என்ற பெயரில் மத்திய கிழக்கு நாடுகளோடு அல்லாத கூட்டணி வலையமைப்பை மறைமுகமாக இரான் கட்டமைத்திருக்கிறது.
லெபனானிலுள்ள ஹிஸ்புல்லா தொடங்கி தனது புரட்சிகர கருத்தியலை வெளிநாடுகளுக்கு பரப்ப தொடங்கிய இஸ்லாமிய குடியரசான இரான், 1979ம் ஆண்டு தெஹ்ரானுக்கு அயத்துல்லா அலி கமேனி வந்தது முதல் எல்லை கடந்து தனது செல்வாக்கை பரப்பி வருகிறது.
"மத்திய கிழக்கு நாடுகளில் இரானின் செல்வாக்கு வலையமைப்பு" என்று தலைப்பிடப்பட்டுள்ள 217 பக்கங்களுடைய இந்த சர்வதேச தந்திரோபாய ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையானது, இந்த பிராந்தியத்தில் இரானின் நடவடிக்கைகள் எந்த அளவுக்கு உள்ளன, எதுவரை சென்றடைந்திருக்கின்றன என்று இதற்கு முன்னர் இல்லாத விவரங்களை வழங்கியுள்ளது.
"இஸ்லாமிய குடியரசான இரான், தனக்கு ஆதரவான நிலைமையை மத்திய கிழக்கு நாடுகளில் சிறந்த சமநிலையில் பேணி வருகிறது" என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
தங்களைவிட வலிமையான மரபுவழி ராணுவத்தை செல்வாக்கு மிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டும், மூன்றாம் தரப்பு சக்திகளை பயன்படுத்தியும் எதிர்ப்பதன் மூலம் இதனை இரான் சாதித்துள்ளது என்று இந்த அறிக்கையை தயாரித்தவர்கள் கூறுகின்றனர்.
இதன் முக்கிய பகுதியாக, இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படையின் வெளிவிவகார பிரிவாக இருக்கும் குர்து ஆயுதப்படைப்பிரிவுகள் உள்ளன.
குர்து படைப்பிரிவும், அதன் தலைவர் மேயர் ஜெனரல் காசெம் சுலைமாணியும் இரானின் உயரிய தலைவரான அயத்துல்லா அலி கமேனியுடன் நேரடியாக உரையாடுகின்றனர். இரானின் ராணுவத்தையும் கடந்து செயல்படும் சிறந்த சுயாதீன அமைப்பாக இது செயல்படுகிறது.

பட மூலாதாரம், AFP
2003ஆம் ஆண்டு இராக்கில் சதாம் ஹூசைனின் ஆட்சியை அமெரிக்காவின் தலைமையிலான படை அகற்றிய பின்னர், மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் பயிற்சி அளித்தால், நிதியளித்தல், ஆயுதங்கள் அளித்தல் அனைத்தையும் இரான் வழங்கியதால், குர்து படைப்பிரிவுகள் தங்களின் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி கொண்டன.
மேலும், திரள் தந்திரங்கள், டிரோன் (ஆளில்லா விமானம்) மற்றும் இணைய தாக்குதல்கள் என மரபுவழி சாராத சமச்சீரற்ற போர் முறைகளை குர்துகள் உருவாக்கியுள்ளனர்.
இதனை பயன்படுத்தித்தான் மரபுவழி ஆயுதங்களில் வலிமையுடையவர்களாக கருதப்படும் எதிரிகளை திணற செய்ய இரானால் முடிந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் குர்து படைப்பிரிவுகள் உள்பட இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படையை வெளிநாட்டு தீவிரவாத நிறுவனம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இன்னொரு அரசின் படைப்பிரிவை வெளிநாட்டு தீவிரவாத நிறுவனம் என அமெரிக்கா அறிவித்தது இதுவே முதல் முறை.
டிரம்பின் இந்த முடிவுக்கு பதிலடியாக, வளைகுடா பிராந்தியத்திலுள்ள அமெரிக்க ராணுவத்தை (அடையாள ரீதியில்) தீவிரவாத படை என்று இரான் அறிவித்தது.
ஜெனரல் சுலைமாணியின் பங்கு ஒரு ராணுவ தளபதி என்ற நிலைக்கு மேலாகவே உள்ளதாக கருதுகிறார் ஜாக் ஸ்ட்ரா. 2001 முதல் 2006ம் ஆண்டு வரை பிரிட்டனின் வெளியுறவு அமைச்சராக இருந்து இரானுக்கு பலமுறை சென்று வந்துள்ளவர்தான் ஜாக் ஸ்ட்ரா.
"கூட்டணி படைப்பரிவுகளின் மூலம் இந்த பிராந்தியத்தில் காசெம் சுலைமாணி, அவர்களின் வெளியுறவு கொள்கைகளை செயல்படுத்தி வருகிறார்" என்கிறார் ஜாக் ஸ்ட்ரா.
சர்வதேச தந்திரோபாய ஆய்வு நிறுவனத்தின் இந்த அறிக்கை பற்றி, லண்டனிலுள்ள இரான் தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் பிபிசியிடம் கருத்து தெரிவித்தபோது, "இந்த பிராந்தியத்தில் இரானின் பங்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என இந்த அறிக்கை தெரிவிக்குமானால், இது வரவேற்க வேண்டிய அறிகுறியாகும்" என்று கூறினார்.
"இரானை கண்டுகொள்ளாத கொள்கை வேலை செய்யவில்லை. ஈரான் எதிர்ப்பை வெளிகாட்டியது. அமெரிக்காவின் பொருளாதார தீவிரவாதத்தின் சேதங்களை இரான் வெற்றிகரமாக கட்டுபடுத்தியுள்ளது. எனவே, இரான் வலிமையான நாடு. பிற நாடுகளோடு அதிக உறவுகளை பேணி வருகிறது. பிராந்திய அளவில் பல ஒத்துழைப்புகளை மேற்கொண்டு வருகிறது.” என்கிறார் அவர்.
ஹிஸ்புல்லா - இளைய பங்காளி
லெபனானின் ஷியா இஸ்லாமிய இயக்கமான ஹிஸ்புல்லா அரசியல் கட்சியாகவும், ஆயுதப்படையாகவும் செயல்பட்டு இரானின் பங்காளி நாடுகளோடு ஒப்பிடுகையில் தனிச்சிறப்புமிக்க தகுநிலையை பெற்றுள்ளது" என்கிறது இந்த அறிக்கை.
சிரியா மற்றும் இராக் வழியாக இரானின் விநியோக வழிகளை இந்த அறிக்கை விவரிக்கிறது.
சிரியா அதிபர் பஷார் அல் அசாத்திற்கு விசுவாசமான சிரிய படைகளோடு போரிடுவது மற்றும் இராக்கின் ஷியா ஆயுதப்படைக்கு உதவியளிப்பது என இவ்விரு நாடுகளிலும் நடைபெறும் போர்களில் ஹிஸ்புல்லா முக்கிய பங்காற்றியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
ஹிஸ்புல்லாவை நம்பிக்கைக்குரிய இளைய பங்காளி என்று வரையறுக்கும் இந்த அறிக்கை, இதனை ஒரு பிராக்ஸி படை என்பதைவிட ஆயுதம் தாங்கிய ஒரு சகோதரர் போல என்று விவரிக்கிறது.
அரபு ஆயுதப்படையின் வரிசையில் உரையாடலில் பங்குபெறுவதில் முக்கியமானதாகவும், இரானோடு உறவிலுள்ள சிறந்த அரசியல் கட்சிகளில் ஒன்றாகவும் இந்த குழு உருவாகியுள்ளது.
இராக் மற்றும் சிரியாவுக்குள் உட்புகுதல்
அமெரிக்கா தலைமையிலான படை இராக்கை ஆக்கிரமித்த பின்னர், சதாம் ஹூசைனின் ஆட்சியை அகற்றியதால், மத்திய கிழக்கு நாடுகளில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள இரானுக்கு சிறந்த வாய்ப்பும் கிடைத்தது.
இந்த நிகழ்வுக்கு முன்னர், இரானிய விவாக்கத்திற்கு எதிரான அரணாக சுன்னி முஸ்லிமால் ஆளப்பட்ட இராக்கை வளைகுடா அரபு நாடுகள் பார்த்தன.
இந்த அரண் அகற்றப்பட்டு விட்டதால், தனது மத மற்றும் கலாசார உறவுகளை ஷியா அரேபிய முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இராக்கிற்குள் இரான் வெற்றிகரமாக அமைத்து, அந்நாட்டில் வலிமையான சக்தியாக உருவெடுத்துவிட்டது.

பட மூலாதாரம், Getty Images
"ஜனரஞ்சக அணிதிரட்டல் அலகுகள்" என்று அழைக்கப்படும் துணை ராணுவ படைக்கு பயிற்சி அளித்து, ஆயுதங்களை இரான் வழங்கியுள்ளது. இஸ்லாமிய அரசு என்ற கூறிகொள்ளும் குழுவை தோல்வியடைய செய்ய உதவிய இந்த படையை, இரானிய காலனியாதிக்க வடிவமாக பல இராக்கியர் பார்க்கின்றனர்.
சமீபத்தில் இராக்கில் நடைபெறும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டங்களை பார்க்கும்போது இரானிய ஆதரவோடு செயல்படும் அரசோடு இராக்கிய இளைஞர்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பது தெரிய வருகிறது.
நாட்டுப்பற்றாளர்கள் என்ற அடையாளத்தில் இருந்து நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் நுழையும் ஜனரஞ்சக அணிதிரட்டல் அலகில் ஏற்பட்டுள்ள மாற்றமே மக்களிடம் இருந்த அதன் ஆதரவை இழக்க செய்துள்ளது என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இரானியர்கள் அங்குள்ள கட்டுப்பாட்டை இழக்கும் ஆபத்து இருப்பதால், இராக்கில் நடைபெறும் சம்பவங்களை மிகவும் முக்கியமாக எடுத்துகொள்ள வேண்டியுள்ளது" என்று ஜாக் ஸ்டாரா தெரிவிக்கிறார்.
சிரியா அரசு இரானின் கூட்டாளியாக நீண்டகாலமாக இருந்து வருகிறது. சிரியாவின் உள்நாட்டு போரில், ரஷ்ய விமான படையோடு, இரானிய படைப்பிரிவுகள், ஹிஸ்புல்லா மற்றும் பிற ஷியா போராளிகள் அனைவரும் அதிபர் அசாத்துக்கு உதவி, கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நிலையை உருவாக்கினர்.
ஆனால், இன்று "சிரியா அரசாங்கமும், அதன் முறைசாரா பாதுகாப்பு கட்டமைப்புகளும் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக பரிணமித்து வரும் நிலையில், இரான் அந்த விவகாரங்களில் தன்னை உட்பொதித்து வருகிறது என்று சர்வதேச தந்திரோபாய ஆய்வு நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது.
வளைகுடா போட்டியாளர்களை தொந்தரவு செய்தல்
அமெரிக்கா இந்த பிரந்தியத்தை விட்டு வெளியேறிவிட்டால், இரான் அங்கு தனது ராணுவ சக்தியை வலிமையாக்கிக் கொள்ள விரும்புகிறது. இதனை நடக்க விட்டுவிடக்கூடாது என்று சௌதி அரேபியா, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரோட்ஸ் எண்ணுகின்றன.
2011ஆம் ஆண்டு அரபு வசந்தம் போராட்டங்கள் தொடங்கியபோது, அந்த கலகத்தை இரான் நன்றாக பயன்படுத்தி கொண்டது. நாட்டின் பெரும்பான்மையான ஷியா மக்களிடம் இருந்த குறைகளைத் தீர்த்து கொண்டதோடு, சில வன்முறை குழுக்களுக்கு ஆயுதம் வழங்கி உதவியது.
"பஹ்ரைன், சௌதி அரேபியா மற்றும் குவைத்தில் உள்ள ஆயுதக்குழுக்களுக்கு இரானின் ஆதரவு, அந்தந்த நாட்டு அரசுகளை எரிச்சலடைய செய்யவும், அழுத்தம் கொடுக்கவும், அமெரிக்காவோடு அவைகள் கொண்டிருக்கும் நட்புறவுக்கு அரசியல் ரீதியாக பழிவாங்கவுமே" என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த குழுக்களால் வழங்கப்படும் அச்சுறுத்தல் அனைத்தும் எதிர்கொள்ளக்கூடியவைதான். ஆனாலும், கடந்த செப்டம்பர் மாதம் சௌதி எண்ணெய் நிலையத்தில் நடத்தப்பட்ட டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள், சீரற்ற போர் முறையால் வளைகுடா அரேபிய நாடுகள் எந்த அளவுக்கு பாதிக்கப்படும் நிலையில் உள்ளன என்பதை தெளிவாகக் காட்டின.

பட மூலாதாரம், Reuters
அமெரிக்காவிடம் இருந்து சௌதி அரேபியா விலையுயர்ந்த ஏவுகணை தடுப்பு அமைப்பை வாங்கியுள்ளது. ஆனால், இந்த உயரிய நவீன தொழில்நுட்ப அமைப்பால், நாட்டின் பாதியளவு எண்ணெய் உற்பத்தி திறனை தற்காலிகமாக செயலிழக்க செய்துவிட்ட குறைவான தொழில்நுட்ப கருவிகளால் தொடுத்த தாக்குதலை தடுக்க முடியவில்லை.
சௌதி எண்ணெய் நிலையத்தில் நடந்த தாக்குதல் இரானில் செய்யப்பட்ட ஏவுகணைகளால் நாட்டின் வடக்கில் இருந்து ஏவப்பட்டன என்று சௌதியின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. ஆனால், இந்த சம்பவத்தில் இரான் ஈடுபடவில்லை என்று இரான் மறுத்துவிட்டது.
ஏமன்
2014ல் ஏமன் போரில் இறங்கியபோது இரான் தலையீடு பெரிதாக இல்லை.
ஆனால், 2015 மார்ச் மாதத்தில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் வென்ற இடங்களில் இருந்து அவர்களை வெளியேற்றும் நோக்கத்துடன் சௌதி அரேபியா விமானத் தாக்குதலில் ஈடுபட்டபிறகு இரான் தனது ஆதரவை அதிகப்படுத்தியது.
குறைந்த செலவில் தமது எதிரியான சௌதி அரேபியாவை பணியவைக்கவேண்டும் என்பதற்காகவும், செங்கடல் பகுதியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பாப் அல்-மண்டப் பகுதியில் தம்மை வலுப்படுத்திக்கொள்வதற்காகவும் முன்னேறிய தொழில்நுட்பம் கொண்ட ஆயுதங்கள் அளிப்பது போன்ற உதவிகளை இரான் செய்தது என்கிறது ஐ.ஐ.எஸ்.எஸ். அறிக்கை.
ஏமன் போரினால், சௌதி அரேபியாவுக்கு பல பில்லியன் டாலர் செலவு, பின்னடைவு. 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் ஏவப்படவும் அது காரணமாக இருந்தது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறி ஹிஸ்புல்லா, ஹூதி ஆகிய பயங்கரவாத அமைப்புகளுக்கு இரான் பேலிஸ்டிக் ஏவுகணைகளை வழங்கியதாக சௌதி வெளியுறவு அமைச்சகம் குற்றம்சாட்டியது.
போரினால் ஏமனில் ஏற்பட்ட பாரிய சேதாரங்கள், குறிப்பாக சௌதி தலைமையிலான விமானத் தாக்குதலால் நிகழ்ந்த சேதங்கள் காரணமாக சௌதி அரேபியாவுக்கு ஏற்பட்ட இழப்பு பெரிதாகத் தெரியாமல் போனது.
இந்த பேரழிவு யுத்தத்தில் வெற்றி பெற்றவர்கள் எவரும் இல்லை. ஆனால், சௌதியும் அதன் கூட்டாளியான ஐக்கிய அரபு எமிரேட்டும் தங்கள் புழக்கடையில் இரான் நிரந்தரமாக கால்பதிக்க முடியாமல் செய்ததே ஏமனில் தாங்கள் செய்த சாதனை என்று கருதுகின்றன.
குறைந்த செலவில் அதிக செயல்திறன்
அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருக்கும் வரை இரான் அதன் பாதையை மாற்ற போதில்லை என்ற இந்த அறிக்கை நிறைவு பெறுகிறது. மூன்றாம் தரப்பு திறன்களை விரிவாக்குவதை இரான் தொடரும் என்றும் தெரிவிக்கிறது.
புதிய அணு ஒப்பந்தம் உருவாக்குவதற்காக கடந்த ஆண்டு டிரம்ப் பழைய ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறி, தடைகளை விதித்ததால், கடும் மோதலே தொடரும் என்று எதிர்பாக்கப்படுகிறது.
விரிவான வலையமைப்பை இரான் உருவாக்கியுள்ளதால், அதிக தாக்குதல் நடைபெறும் சாத்தியமே அதிகம் காணப்படுகிறது.
அமெரிக்க பொருளாதார தடைகள் இரான் மக்களை அதிகமாக பாதிக்கின்றன. பொருளாதார ரீதியாக இரான் அபாயகரமான இடத்தில் உள்ளது.
ஆனால், குறைந்த செலவில் அதிக விளைவை ஏற்படுத்த கூடிய ஒரு கூட்டணியை ஐஆர்ஜிசியின் குர்து படைப்பரிவு உருவாக்கியுள்ளது.
இரான் புறக்கணிக்க முடியாத ஒரு சக்தியாக உருவாகியுள்ளதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












