You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெண்கள் உருவாக்கும் நகரம் எப்படி இருக்கும்?
- எழுதியவர், ஸ்டீபனி ஹெகார்டி
- பதவி, பிபிசி உலக சேவை
நகரங்கள் நம் அனைவருக்காகவும் வடிவமைத்து, கட்டமைக்கப்பட வேண்டும். ஆனால் அவை நம் அனைவராலும் உருவாக்கப் படுவதில்லை.
உலகில் அனைத்து நகரங்களும் தலைமுறை தலைமுறையாக ஆண்களால் மட்டுமே உருவாக்கப் பட்டுள்ளன. ஆனால் பெண் பாலினத்தவர்கள் அதைச் செய்தால் எப்படி இருக்கும்?
இதற்கு பார்சிலோனா நகரம் நமக்கு விடை அளிக்கக் கூடும்.
கடந்த நான்கு ஆண்டுகளாக அங்கு, தீவிர பெண்ணிய சிந்தனை உள்ள பெண் மேயர் பதவியில் இருக்கிறார்.
பெண்களுக்கு உகந்ததாக நகரங்களில் நல்ல மாற்றம் ஏற்படுவதற்கு என்ன செய்ய வேண்டும் என பெண்கள் கருதுகிறார்கள் என்பதைக் கண்டறிய, நகர திட்டமிடலில் உள்ள பெண்ணிய சிந்தனையாளர்களுடன் நாங்கள் பேசினோம்.
1. கார்களை ஒழித்துக்கட்டுங்கள்
பார்சிலோனாவில் நகரமயமாக்கல் கவுன்சிலராக உள்ள ஜேனட் சான்ஜ் என்பவர் தான் இந்த முன் முயற்சியின் பின்னணியில் இருக்கும் பெண்மணி. பெரிய அளவில், அதிக லட்சிய நோக்குடைய திட்டத்தின் ஓர் அங்கமாக இது உள்ளது.
வண்ணமயமாக பெயின்ட் செய்யப்பட்டுள்ள சாலையின் நடுவில் நடந்து செல்லும் ஜேனட் ''பார்சிலோனாவில் பொது இடத்தில் 60 சதவீதம் கார்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. அதை நீங்கள் விடுவித்தால், இதுவரை அதைப் பயன்படுத்தாத மக்களுக்கு அது கிடைக்கும்,'' என்று கூறுகிறார்.
''பலசாலிகள் பெரும்பாலான இடத்தை எடுத்துக் கொள்ளும் இந்த சூழ்நிலையை நாம் தடுத்தாக வேண்டும். கார்கள்தான் இந்த இடத்தைப் பிடித்துக் கொள்கின்றன.''
கேட்டலானில் ''சூப்பரில்லஸ்'' என்ற பெயரில் அமல் செய்யப்படும் சூப்பர் பிளாக் திட்டத்தால், பாதசாரிகள் மற்றும் சைக்கிள்களில் செல்பவர்களுக்கு அல்லது பொழுது போக்கும் விஷயங்களுக்கு இந்த இடம் பயன்படும்.
பார்சிலோனாவின் பிரத்யேகமான வடிவமைப்பில் ஒன்பது பகுதிகளை அவர்கள் எடுத்துக் கொண்டு, ஒரு பெரிய சூப்பர் பிளாக் ஆக உருவாக்குகிறார்கள். அதில் போக்குவரத்துக்கு அனுமதி இல்லை. உள்ளே வர வேண்டிய தேவை உள்ள கார்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே அந்தலைகளில் செல்ல முடியும். தரைக்கு அடியில் உள்ள வாகன நிறுத்தும் இடங்களில் அவை நிறுத்தப்படும்.
எனவே பரபரப்பான சாலை சந்திப்புகளுக்குப் பதிலாக பூங்காங்கள், பிக்னிக் பெஞ்ச்கள், விளையாட்டுப் பகுதிகள் இருக்கும்.
சல்வடார் ரியூடா என்ற ஆண் இந்த சூப்பர் பிளாக் திட்டத்தை வடிவமைப்பு செய்தார். காற்று மாசுபாடு பிரச்சனையைக் கையாள்வது மற்றும் பொது மக்களுக்கு அதிக இட வசதியை உருவாக்குவது ஆகியவைதான் இதன் நோக்கம்.
ஆனால் ஜேனட் சான்ஜ் என்ற பெண்மணி இதில் பெண்ணிய சிந்தனை மாற்றத்தைக் கொடுத்தார். மக்களின் பங்கேற்பை மையமாகக் கொண்டதாக திட்டம் மாற்றப்பட்டது.
இதுவரை பார்சிலோனாவில் ஆறு பகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதை 500 பகுதிகளுக்கு விரிவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
2. நெறியற்ற செயல்களுக்கு முடிவு கட்டுங்கள்
பார்சிலோனா மக்கள் கொண்டாட்டத்தை விரும்புகிறார்கள். பகலோ அல்லது இரவோ பொதுவெளியில் மகிழ்வாக இருக்க ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது என்று மாநகர மன்றம் நம்புகிறது.
எனவே, ஒரு திருவிழா அல்லது இளைஞர்களின் ஒன்றுகூடல் நிகழ்வு இருந்தால் ''இளஞ்சிவப்புப் பகுதி'' உருவாக்கப் பட்டிருப்பதை நீங்கள் காணலாம்: பாலியல் துன்புறுத்தல் மற்றும் ஆணாதிக்கத்தைத் தடுப்பது தொடர்பான ஆலோசனைகளைப் பெற பெண்களும் ஆண்களும் அங்கு வரலாம் என்பதற்கான அடையாளப்பூர்வமான தகவலாக அது இருக்கிறது.
லாரா மார்ட்டி மர்டோரெல் போன்ற தகவல் அதிகாரிகள் பரபரப்பான இரவு நேரத்தில் நடந்து சென்று கொண்டிருப்பார்கள். இளைஞர்களை கவனித்துக் கொண்டிருப்பார்கள். தொந்தரவு ஏதும் ஏற்பட்டால் உதவிக்கு தாங்கள் இருப்பதாக இளைஞர்களிடம் அவர்கள் தெரிவிப்பார்கள்.
``No es No'' என்ற செல்பேசி செயலி ஒன்றையும் மாநகர மன்றம் உருவாக்கியுள்ளது. ''உங்களுக்கு ஏற்பட்ட அல்லது நீங்கள் பார்த்த பாலியல் தொந்தரவு சம்பவங்களை, காவல் துறையினர் அறியாதிருந்தால், உங்கள் பெயர் விவரங்களைக் குறிப்பிடாமல்,'' அதில் நீங்கள் தகவல்கள் அளிக்கலாம் என்கிறார் லாரா.
3. அதிக கழிப்பறைகள்
கழிப்பறைகளுக்கு வெளியே காத்திருக்கும் ஆண்களின் வரிசையைவிட, அவ்வாறு காத்திருக்கும் பெண்களின் வரிசை பெரியதாக இருக்கிறது என்பதை உலகம் முழுக்க அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். இது பெரிய அநீதியாக உள்ளது. இதற்கு சில சாதாரண காரணங்கள்தான் உள்ளன.
பெண்கள் சிறுநீர் கழிக்க கழிவறையில் உட்கார்ந்து பயன்படுத்த வேண்டும், ஆண்கள் நின்று கொண்டே அதை செய்யலாம். அதாவது ஆண்களைவிட பெண்களுக்கு மூன்று மடங்கு அதிக நேரம் தேவைப்படுகிறது.
பெண்கள் அதிக சமயங்களில் கழிப்பறைகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. மாதவிலக்கு அல்லது கருவுற்ற காலங்களில் இந்தத் தேவை ஏற்படுகிறது. சமூகத்தில் பெரும்பாலும் மற்றவர்களை கவனிக்கும் பொறுப்பில் பெண்கள்தான் இருக்கிறார்கள். எனவே மற்றவர்கள் கழிப்பறை செல்வதற்கு அவர்கள் உதவ வேண்டியுள்ளது.
''குழந்தைகளை அமர வைத்து தள்ளிக்கொண்டு வரும் வண்டிகளில் வரும் ஏராளமான தாய்மார்கள் பொதுக் கழிப்பறைகளுக்குச் செல்ல முடிவதில்லை என்று கூறுகிறார்கள். ஏனெனில் தள்ளுவண்டியை கழிப்பறைக்குள் கொண்டு செல்ல முடியாது,'' என்று வடிவமைப்பு திட்டமிடலில் பங்கு வகிக்கும் பிளான்கா வால்டிவியா கூறுகிறார். அதனால் அவர்கள் கழிப்பறைக்குச் செல்வதில்லை,'' என்கிறார் அவர்.
அதுமட்டுமின்றி கழிப்பறைக்கான சாதனம், சிறுநீர் கழிப்பதற்கான சாதனத்தைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிக இடத்தைப் பிடித்துக் கொள்கிறது.
எனவே, பெண்களின் கழிப்பறைக்கு ஒதுக்கும் இடம் மூன்று மடங்கு அதிகமாக இருக்க வேண்டும், அவற்றின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்க வேண்டும். ஆனால் கட்டட வடிவமைப்பில் இந்த விஷயம் அபூர்வமாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
4. விளையாட்டு மைதானங்கள்
நாம் உணர்ந்தாலும், இல்லாவிட்டாலும், மிக சிறிய வயதில் இருந்தே நாம் பயன்படுத்தும் இடம் பிரித்து ஒதுக்கப்பட்டுள்ளது - விளையாட்டு மைதானங்களும் கூட.
''வடிவமைப்பில் நீங்கள் முறையாக திட்டமிடாமல் போனால், பல நேரங்களில் நடுவில் ஒரே மாதிரியான ஒரு பெரிய இடம் காலியாக இருக்கும்,'' என்று விளையாட்டுக்கு நியாயமான இடம் ஒதுக்க விரும்பும் நகர வடிவமைப்பு நிறுவனமான Equal Saree-ஐ சேர்ந்த டாஃப்னே சல்டானா என்ற கட்டடக் கலை நிபுணர் கூறுகிறார்.
''கால்பந்து அல்லது அதிக தீவிரமான விளையாட்டுகள் இருந்தால், அவை இந்த இடத்தைப் பிடித்துக் கொள்கின்றன, மற்ற செயல்பாடுகளுக்கு இடம் கிடைப்பதில்லை'' என்கிறார் டாஃப்னே .
Equal Saree அமைப்பு பார்சிலோனா அருகே புறநகரில் பயன்படுத்தப்படாத, களையிழந்த ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு, அதை விளையாட்டு மைதானமாக மாற்றியது. பெயிண்ட், வெவ்வேறு வகையான தரை வடிவமைப்புகள், தாவரங்கள் மற்றும் வெளிப்புற கட்டமைப்புகளைப் பயன்படுத்தி அந்த இடத்தை அந்த நிறுவனம் பிரித்தது.
இப்போது அந்தப் பூங்காவில் எல்லா பகுதிகளில் இருந்தும் நடைபாதைகள் செல்கின்றன. பல வகையான செயல்பாடுகளை ஊக்குவிக்கும் ''வெளிப்புற அறைகள்'' உருவாக்கப்பட்டுள்ளன. விளையாட்டு மைதானத்தில் ஒரே விளையாட்டின் ஆதிக்கம் கிடையாது.
5. இருக்கைகள்
Equal Saree மற்றும் Punt 6 போன்ற கூட்டமைப்புகளுக்கு பிரியமான ஒரு விஷயம் இது.
''அது வெறுமனே சமூக பயன்பாடு மட்டுமல்ல'' என்று Punt 6 சேர்ந்த பிளான்கா வால்டிவியா கூறினார்.
''நோயற்றவர்கள் அல்லது மாற்றுத்திறனாளிகள் மற்றும் பிறரை கவனித்துக் கொள்ள உடன் வருபவர்கள் அல்லது குழந்தைகளை கவனித்துக் கொள்பவர்கள் செல்வதற்கு அடிப்படைத் தேவையாக இது உள்ளது. போதிய அளவில் இருக்கைகள் இல்லாததால் இந்த மக்கள் பொது இடங்களைப் பயன்படுத்த முடியாமல் போகிறது.''
பார்சிலோனாவில் ஒரு பகுதியில் மட்டும் 500 புதிய இருக்கைகளை அரசு அமைத்துக் கொடுத்துள்ளது.
6. தெருவின்பெயரில்என்ன இருக்கிறது?
நகரை அழகானதாக ஆக்குவது, பெண்களை பாதுகாப்பாக உணரச் செய்யும் விஷயம். பெண்கள் வெளியில் வருவதற்கு உதவும் விஷயமாகவும் உள்ளது.
ஏனெனில் அதை நீங்கள் யோசித்துப் பார்த்தால், பெரும்பாலும் ஆண்களின் சாதனைகளைக் கொண்டாடும் படங்கள் மட்டுமே நமது வரலாற்றுப் புத்தகங்கள் மற்றும் நகரங்களில் நிறைந்திருக்கும்.
உலகில் ஏழு பெரிய நகரங்களில் கணக்கெடுப்பு நடத்தியதில் 27.5 சதவீத தெருக்களுக்கு மட்டுமே பெண்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வந்தள்ளது.
அதை மாற்ற பார்சிலோனா முயற்சித்து வருகிறது. நகரின் முந்தைய அரசு, பாதி புதிய தெருக்களுக்கு பெண்களின் பெயர்களை வைத்துள்ளது.
நகர கவுன்சில் அதை இன்னும் அதிகமாக்க - 60 சதவீதமாக்க - முயற்சித்து வருகிறது.
பெண்களால் உருவாக்கப்படும் நகரம் எப்படி இருக்கும் என்று காண்பது இன்னும் கற்பனையாகவே உள்ளது.
ஆனால், எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதன் ஒரு சிறிய பகுதியை நாம் பார்சிலோனாவில் காண வாய்ப்பு கிடைக்கலாம்.
கூடுதல் தகவல்கள் அளித்தவர்கள் கமீலா சாதெக்சாதே மற்றும் இவாஒன்டிவெரோஸ்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்