You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மனிதர்களின் மூதாதையர்கள் இரு கால்களில் நடக்க ஆரம்பித்தது எப்போது?
- எழுதியவர், ஹெலன் பிரிக்ஸ்
- பதவி, பிபிசி
பரிணாம வளர்ச்சி குறித்து எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
முதன் முதலாக இரண்டு கால்களில் நடக்க ஆரம்பித்தது எப்போது, எப்படி என்று அறிந்து கொள்ளும் நோக்கில், பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதக் குரங்கின் புதைப்படிமங்களில் செய்யப்பட்ட ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
நிமிர்ந்து நடப்பது என்பது மனித இனத்தின் ஒரு முக்கிய அடையாளம்.
குரங்குகளின் கைகள் மரத்தில் தொங்குவதற்கு ஏற்றவாறு இருக்கும். ஆனால், அவற்றுக்கு மனிதனை போன்ற கால்கள் இருக்கும்.
சுமார் 1.2 கோடி ஆண்டுகளுக்கு முன்பே, குரங்குகள் மரக்கிளைகளிலும், நிலத்திலும் நடந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதுவரை செய்யப்பட்ட ஆய்வுகளில் 60 லட்ச ஆண்டுகளுக்கு முன்பிலிருந்துதான் நிமிர்ந்து நடக்கும் பழக்கம் உருவானதாக கருதப்பட்டது. ஆனால், இது அதற்கு முன்னரே நடந்திருப்பதை இப்போதைய ஆய்வு காட்டுகிறது.
2015 மற்றும் 2018ஆம் ஆண்டிற்கு இடையே ஜெர்மனியில் உள்ள பவேரியாவில், ஒரு களிமண் குழியில் இருந்து நான்கு புதைப்படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒரு ஆண் குரங்கு, இரு பெண் குரங்குகள் மற்றும் ஒரு குட்டிக் குரங்கு ஆகியவற்றின் உடல்கள் கிடைத்தன.
"தெற்கு ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்ட இவை பரிணாம வளர்ச்சி குறித்த ஆராய்ச்சியில் ஒரு மைல்கல். மனிதக் குரங்குகள் மற்றும் மனிதர்களின் வளர்ச்சியில் நமக்கு இருக்கும் முந்தைய புரிதல் குறித்து இவை அடிப்படை கேள்விகளை எழுப்புகின்றது," என்கிறார் டூபிங்கன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் மடேலைன் போஹ்மி.
இரு கால்களில் நடக்க ஆரம்பித்தது எப்போது?
நம் மூதாதையர்கள் இரு கால்களில் நடக்கத் தொடங்கியது எப்போது என்பது குறித்த பெரும் விவாதம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
மனிதர்கள் இரண்டு கால்களில் நடக்கக்கூடிய குணம் குரங்குகளிடம் இருந்து வந்ததா? மரங்களில் வாழ்ந்த ஓரங்குட்டான், அல்லது நிலத்தில் பெரும் நேரத்தை செலவழித்த மனிதக்குரங்கு, அல்லது கொரில்லா குரங்கு போன்றவற்றிடம் இருந்து வந்ததா?
நேச்சர் என்ற அறிவியல் சஞ்சிகையில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வின்படி, மனிதக் குரங்குள் மற்றும் மனிதர்களின் பொதுவான மூதாதையர்களிடம் இருந்து நாம் நிமிர்ந்து நடக்கும் பழக்கம் வந்திருக்கலாம். முன்னதாக ஆப்பிரிக்காவில் இந்த மூதாதையர்கள் வாழ்ந்திருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் இந்த ஆய்வறிக்கையின்படி அவர்கள் ஐரோப்பாவில் வாழ்ந்திருக்கிறார்கள்.
தற்போது கண்டுபிடிக்கப்பட்ட புதைப்படிவங்களை ஆய்வு செய்ததில், 11.62 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த Danuvius guggenmosi எனும் அறிவியல் பெயர்கொண்ட மனிதக்குரங்குகள், இரு கால்களில் நேராக நிமிர்ந்து நடந்துள்ளன என்றும் மரத்தில் ஏறும்போது அவை மூட்டுகளை பயன்படுத்தியுள்ளன என்றும் தெரிய வந்துள்ளது.
சுமார் 1.2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, மரங்களில்தான் இரு கால்களில் நடக்கும் பழக்கம் உருவானதாக இந்த ஆய்வுகள் கூறுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பல கோடி ஆண்டுகளுக்கு முன் மனிதக்குரங்குகள் எப்படி இருந்தன?
ஆண் மனிதக்குரங்குகளின் எலும்புக்கூட்டை ஆராய்ந்ததில், அவை சுமார் ஒரு மீட்டர் உயரமும், 31 கிலோ எடையுடன் இருந்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.
பெண் மனிதக்குரங்குகள், சுமார் 18 கிலோ எடையுடன் இருந்திருக்கலாம். இன்று இருக்கும் எந்த மனிதக்குரங்குகளின் எடையைவிட இது மிகக் குறைந்ததே ஆகும்.
மூட்டு எலும்புகள், முதுகெலும்புகள், கைவிரல் மற்றும் கால்விரல் எலும்புகளைக் கொண்டு, அவை எப்படி நடந்திருக்கக் கூடும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மனிதக்குரங்கின் உடல்களில் இருந்த சில எலும்புகள், மனித எலும்புகள் போன்று இருப்பதை கண்டு நாங்கள் வியந்தோம் என்கிறார் பேராசிரியர் போஹ்மி.
மனிதர்கள் எப்படி இரு கால்களில் நடக்க ஆரம்பித்தனர் என்பதை தெரிந்து கொள்வது, நம் பரிணாம வளர்ச்சியின் பல அடிப்படை கேள்விகளுக்கு பதில் அளிக்கும்.
மனிதர்களின் வளர்ச்சியில், நேரமாக நிமிர்ந்து நடப்பது என்பது ஒரு முக்கிய மைல்கல். அதுவே, தொடுதல், கருவிகளை பயன்படுத்துதல் போன்ற முக்கிய வாய்ப்புகளுக்கு வழிவகுத்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: