விஜயவாடாவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீவிபத்து - 11 பேர் பலி

ஆந்திரப்பிரதேசத்தின் விஜயவாடாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மையமாக செயல்பட்டு வந்த ஹோட்டல் ஒன்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பெரும் தீவிபத்து ஏற்பட்டது.

தனியார் மருத்துவமனை ஒன்றால் நிர்வகிக்கப்பட்டு வந்த இந்த மையத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலா ரூ.50 லட்சம் இழப்பீடு

தீ விபத்தில் இறந்த ஒவ்வொருவர் குடும்பத்துக்கும் தலா ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று ஆந்திரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது என்கிறது ஏ.என்.ஐ. செய்தி முகமை. அவர்களது ட்வீட் இதோ:

ஹோட்டலில் எத்தனை பேர் இருந்தனர்?

விஜயவாடாவிலுள்ள ரமேஷ் மருத்துவமனை என்னும் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில், அருகிலுள்ள ஸ்வர்ணா பாலஸ் என்னும் தனியார் ஹோட்டலை குத்தகைக்கு எடுத்திருந்தது அந்த மருத்துவமனை.

விபத்து நடந்த நேரத்தில் 50க்கும் மேற்பட்ட கோவிட்-19 நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் இருந்தனர் சம்பவ இடத்தில் இருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீ விபத்து ஏற்பட்ட ஹோட்டலில் இருப்பவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால் மீட்புப் பணியாளர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஹோட்டலின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களில் ஏற்பட்ட தீ, பிறகு தரைத்தளத்துக்கும் பரவியதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். பிறகு, பாதுகாப்பு கவச உடைகளை அணிந்த தீயணைப்பு வீரர்களும், தேசிய பேரிடர் மீட்புப்படையை சேர்ந்த வீரர்களுக்கும் கட்டடத்துக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இதுவரை உயிருடன் மீட்கப்பட்ட 15 நோயாளிகள் மற்றும் நான்கு சடலங்கள் ரமேஷ் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டன.

தீவிபத்துக்கு காரணம் என்ன?

மின்கசிவின் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக ஆந்திரப்பிரதேசத்தின் உள்துறை அமைச்சர் மெகடோட்டி சுச்சரிதா தெரிவித்துள்ளார். சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட மற்றொரு ஆந்திரப்பிரதேச அமைச்சர் சீனிவாசனும் இதே காரணத்தையே தெரிவித்துள்ளார்.

ஆந்திரப்பிரதேசத்தில் மக்களிடையே அச்சத்தை ஏற்பட்டுள்ள இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்

"விஜயவாடாவிலுள்ள கோவிட் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் பலர் உயிரிழந்ததை அறிந்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல். விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்" என்று இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

"விஜயவாடாவில் உள்ள கோவிட் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து மிகுந்த வேதனையளிக்கிறது. இந்த தீ விபத்தில் தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு என் அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். தற்போதுள்ள நிலைமையை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியுடன் கலந்துரையாடிபோது தேவையான உதவிகள் அனைத்தும் வழங்கப்படும் என்று உறுதியளித்தேன்" என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அனுமதி பெறவில்லை

தீயணைப்புப் படை துறையின் இயக்குநர் அஹ்சன் ரெசா பிபிசியிடம், "தங்மிடத்தை மருத்துவமனையாக மாற்றுவதற்குத் தீயணைப்புப் படையின் அவர்கள் அனுமதி பெறவில்லை," என்று தெரிவித்தார்.

மேலும் அவர், "தங்கும்விடுதி நிர்வாகம் ஒரு மருத்துவமனைக்கு தங்கள் இடத்தை வாடகைக்கு விட்டிருக்கிறது. இதற்கு அனுமதி கடிதத்தை அவர்கள் தீயணைப்புத் துறையிடமிருந்து பெற்றிருக்க வேண்டும். ஆனால், பெறவில்லை. ஆபத்துக் காலத்தில் வெளியேறும் வழி ஒன்றுதான் மக்கள் பார்வைக்கு இருக்கிறது. மற்றொன்று மக்கள் பார்வைக்கு தெரியும்படி இல்லை," என்று கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: