You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கீழடியில் கிடைத்தது போன்று விழுப்புரத்தில் பெரிய செங்கற்கள்? - அகழாய்வு நடத்த கோரிக்கை
விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை அடுத்த சங்கராபரணி ஆற்றங்கரையோரம் அமைத்துள்ளது கொடுக்கூர் கிராமம்.
இங்கே தனி நபர் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் செங்கல் சூளை கற்களுக்காக பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி, வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, பூமிக்கடியில் பழமையான முதுமக்கள் தாழி, மதுக்குடுவை, எலும்புகள், பானை ஓடுகள், கீழடியில் கிடைக்கப்பெற்றது போன்று பெரிய செங்கற்கள் கிடைத்துள்ளன.
பழங்கால பொருட்கள் கிடைத்ததையடுத்து இப்பகுதி மக்கள் தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அப்பகுதிக்கு வந்த விழுப்புரம் அரசுக் கல்லூரி உதவி பேராசிரியரும், அகழ்வாராய்ச்சி ஆய்வாளருமான ரமேஷ் கண்டெடுக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் கைப்பற்றி, தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்தார்.
கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்கள் குறித்து பிபிசி தமிழுக்கு விளக்கமளித்த விழுப்புரம் அரசுக் கல்லூரி உதவி பேராசிரியரும், அகழ்வாராய்ச்சி ஆய்வாளருமான ரமேஷ், "பழமைவாய்ந்த கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் உள்ள மண் பானைகள், தாழிகள், எலும்புகள், மதுக் குடுவைகள் கிடைத்துள்ளது. இங்கே கிடைக்கப்பெற்ற மதுக்குடுவையைப் போன்று ஆதிச்சநல்லூரிலும் கிடைத்திருக்கிறது. ஆனால் இங்கே முழுமையாக கிடைக்கவில்லை, பாதி மட்டுமே கிடைத்துள்ளது. மேலும் பழங்கால கட்டடங்கள் இருந்ததற்கு அடையாளமாக பெரிய செங்கற்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் கிடைத்துள்ளது. குறிப்பாக, கருப்பு மற்றும் சிவப்பு வடிவிலான பானைகள் கிடைத்திருப்பதன் மூலம் இவைகள் 2000 ஆண்டுகள் முற்பட்ட சங்ககாலத்தை சார்ந்தது என்பது தெரிகிறது. இதில் மேற்கொண்டு அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டால் எழுத்து பொறிக்கப்பட்ட அல்லது குறியீடுகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது," என்றார்.
மேலும், தொடர்ந்து பேசிய அவர், "இதுகுறித்து தொல்லியல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது கண்டெடுக்கப்பட்ட பொருள்களை அங்கேயே பாதுக்காக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு இதனை தொல்லியல் துறையினர் ஆராய்ச்சி செய்தால் விழுப்புரம் அரசு கல்லூரியில் பாதுக்கப்படும். மேலும் இதுகுறித்த தகவல், தமிழக தொல்லியல் துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது," எனத் தெரிவித்துள்ளார் ரமேஷ்.
கிடைக்கப்பெற்ற தொல்லியல் பொருட்களை ஆய்வு செய்ய வேண்டும் என விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
"கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் கிடைக்கப் பெற்ற மண் குடுவைகள் இரண்டாயிரம் ஆண்டுகள் அல்லது கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கக்கூடும். கீழடியில் கிடைக்கப்பெற்றதை போல் பெரிய செங்கற்கள் கிடைக்கப்பெற்றுள்ளதால், இங்கே அகழாய்வு நடத்த வேண்டும். மேலும், கிடைத்த தொல்லியல் பொருட்கள் தொடர்பாக தமிழக தொல்லியல் துறை இயக்குனர் உதயச்சந்திரனுக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் ஒரு வார காலத்தில் தொல்லியல் பொருட்கள் கிடைத்த இடத்தை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்," என தெரிவித்துள்ளார் விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார்.
பிற செய்திகள்:
- கேரளா விமான விபத்து: கருப்புப் பெட்டி மீட்பு, 22 பேரின் உடல்நிலை கவலைக்கிடம்
- இலங்கையில் ராஜபக்ஷ சகோதரர்களின் அரசியல் பயணத்தின் எழுச்சியும், தமிழர்களின் நிலையும்
- கோழிக்கோடு விமான விபத்தில் சிக்கியவர்களின் சாட்சியங்கள்: "உருக்குலைந்த நம்பிக்கை, எதிர்காலம்"
- "சமூகப் பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுப்பேன்" - பத்ம பிரியா பேட்டி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: