You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பறந்தது பிஸ்கட் செய்யும் அடுப்பு
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் தாங்களே சாக்லேட் துருவல் பிஸ்கட் செய்துகொள்ளும் வகையில், அதற்கான மாவும், பிஸ்கட் அடுப்பும் (Oven) ஒரு சரக்கு விண்கலம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் பயன்படுத்துவதற்கு என்றே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட 'விண்வெளி அவன்', பிஸ்கட் சுடுவதற்கான சரக்குகள் ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு இந்த விண்கலன் அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் இருந்து சனிக்கிழமை விண்ணில் சீறிப் பாய்ந்தது.
அதிகபட்ச வெப்பம், ஈர்ப்பு விசை இல்லாத நிலை ஆகிய சூழல்களில் பிஸ்கட் சுடும்போது, அதன் வடிவம், அமைப்பு ஆகியவை எப்படி இருக்கும் என்று சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விஞ்ஞானிகள் ஆராய உள்ளனர்.
விண்வெளியில் முதல் முறையாக பிஸ்கட் சுடும் நிகழ்வு இது என்று இந்த சோதனையை வருணிக்கிறார்கள்.
'ஹில்டன் டபுள் ட்ரீ' என்ற விடுதி நிறுவனம், இதற்கான மாவை தயாரித்து வழங்கியுள்ளது. "மிகக்குறைந்த ஈர்ப்பு விசை நிலவும் சூழலில் செய்யப்படும் இந்த முக்கிய சோதனை, நீண்ட கால விண்வெளிப் பயணங்களை இனிமையானதாக மாற்றும் நோக்கத்தோடு செய்யப்படுகிறது என்று அந்த நிறுவனம் கூறியிருக்கிறது.
இந்த சரக்கு விண்கலத்தின் மூலம் விண்வெளிக்கு வழக்கத்துக்கு மாறான வேறு சில பொருள்களும் செல்கின்றன. கதிரியக்கத்துக்கு எதிரான பாதுகாப்பை வழங்கும் உடை மற்றும், ஸ்போர்ட்ஸ் கார் உதிரி பாகங்கள் ஆகியவை அதில் அடக்கம். சர்வதேச விண்வெளி நிலையத்தை சேர்ந்த விண்வெளி வீரர்கள், கதிரியக்கத்துக்கு எதிரான ஆடை அணிவதற்கு வசதியாக இருக்கிறதா என்று பரிசோதித்துப் பார்ப்பார்கள். ஸ்போர்ட்ஸ் கார்களில் பயன்படுத்தப்படும் கார்பன் இழைகள் விண்வெளியில் எவ்விதமான தாக்கத்துக்கு உள்ளாகிறது என்று ஆராய்வதற்காக லம்போர்கினி கார் நிறுவனம் அந்த இழை மாதிரிகளை அனுப்பியுள்ளது.
துகள் இயற்பியல் மானி ஒன்றைப் பொருத்துவதற்காக விண்வெளி வீரர்கள் இம்மாமதம் மேற்கொள்ளவேண்டிய விண்வெளி நடைக்குத் தேவையான கருவிகள் சிலவும் இந்த சரக்கு கலனில் செல்கின்றன. 3,700 கிலோ எடையுள்ள இந்த சரக்குகள் திங்கட்கிழமை சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்று சேரும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்