தரையில் நகரும் அதிசய விரால் மீன்: அலறும் அமெரிக்கா

விரால் வகை மீனின் பிளந்த வாய்

பட மூலாதாரம், United States Geological Survey handout

இந்த வடக்கு விரால் மீனைப் பிடித்தால் அதை அப்படியே உயிரோடு வைக்காதீர்கள்; கொன்று அதை குளிர்ப்பதனம் செய்து வையுங்கள். ஏனெனில், இவ்வகை மீன்களால் நிலத்திலும் வாழ முடியும்.

இந்த எச்சரிக்கை அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் இருக்கும் இயற்கை வளத்துறையிடமிருந்து வந்தது. இது வேட்கையுடன் தாக்கும் மீன் தொடர்பாக 15வது எச்சரிக்கை ஆகும்.

ஆசியாவைப் பூர்வீகமாக கொண்ட இந்த மீன்வகை, அபரிமிதமாக வேட்டையாடி உண்ணும் என்பதால் மீன்வளத்தை இது பாதிக்கும் என்றும், படையெடுப்பு உயிரினமாக இது ஆகிவிடக் கூடும் என்பதாலும் இதைக் கண்டு அந்நாட்டு இயற்கை வளத்துறை அலறுகிறது.

சன்னா ஆர்கஸ் எனப்படும் விரால் வகை மீன் நீளமான உடலைக் கொண்ட பட்டை தலையுடன் கூடிய மீனாகும்.

இது வேட்கையுடன் மற்ற மீன்களைத் தாக்க கூடியது.

ஒவ்வொரு வருடமும் 10,000 முட்டைகள்

இந்த விரால் மீனின் அளவு

பட மூலாதாரம், United States Fish and Wildlife Service handout

இந்த விரால் மீன்கள் பிற மீன்கள், தவளைகள் மற்றும் நண்டுகள் என்று கண்ணில் படும் எல்லா உயிரிகளையும் உணவாகக் கொள்ளும்.

இந்த மீன் 80 சென்டிமீட்டர் நீளம் வளரக்கூடியது. இந்த மீனால் நீருக்கு வெளியில் சுவாசிக்கவும் 'நடக்கவும்' முடியும்.

இந்த பண்பைக் கொண்டு இந்த மீன் ஒரு நீர் நிலையிலிருந்து இன்னொரு நீர் நிலைக்கு செல்லும்.

இது ஒரு இடத்திற்கு வந்துவிட்டால் அங்கிருந்து அதை வெளியேற்றுவது கடினம். ஒரு வருடத்திற்கு இந்த இனத்தைச் சேர்ந்த பெண் மீன்கள் 10000 முட்டை போடும்.

எதிர்பாராமல் வந்ததா?

இந்த விரால் மீன் வகையின் பூர்வீகம் சீனா ரஷியா மற்றும் கொரிய தீபகற்பம். ஆனால் ஒரு தசாப்தத்திற்கு முன்பு இதை அமெரிக்காவில் கண்டுபிடித்தார்கள்.

இதுவரை நான்கு வகையான விரால் மீன்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

சர்வதேச நீர் நிலையில் இது போன்ற விரால் மீன்களை செல்லப் பிராணிகளாக கொண்டு வருபவர்கள் விடுவதால் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என அமெரிக்காவை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

A man shows a stuffed specimen of snakehead caught in Philadelphia in 2005

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சர்வதேச நீர்நிலையில் இது போன்ற விரால் மீன்களை செல்ல பிராணிகளாக கொண்டு வருபவர்கள் விடுவதால் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

இது ஃப்ளொரிடா, நியூயார்க், வெர்ஜெனியா, கலிபோர்னியா, மாசாசூசெட்ஸ் மற்றும் மேரிலேண்ட் போன்ற பகுதிகளிலும் இது காணப்பட்டுள்ளது.

மேரிலேண்டில் 2002ம் ஆண்டு இந்த வகை மீன் குஞ்சுகளைக் கண்டறிந்ததால் இது இயற்கைச் சூழலில் இனப்பெருக்கம் செய்கிறது என்பது தெரியவருகிறது.

பொது மக்கள் உதவி

Fishermen try to kill a snakehead fish in Florida

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விரால் மீனை பிடிக்க முயல்பவர்

அக்டோபர் 8 அன்று ஒருவர் பிடித்த மீன் இந்த விரால் வகையை சார்ந்தது என தெரிந்த பிறகு ஜார்ஜியாவின் அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

இயற்கை வளத்துறை மக்களுக்கு இந்த மீன் நீருக்கு வெளியேவும் வாழும் என்றும் இந்த மீனைக் கண்டால், கொன்று புகைப்படம் எடுத்து, இது எங்கே பிடிக்கப்பட்டது என்ற தகவலோடு பகிரும்படி கேட்டுக்கொண்டது.

அவை முழுவதையும் பிடிக்க நீண்டகாலம் ஆகும். ஆனால் அவற்றைப் பிடிப்போம். பிறகு அப்பகுதி நீர் நிலையையும் அதன் கிளைப்பகுதியையும் தொடர்ந்து கண்காணிப்போம் என இயற்கை வளத் துறையின் மீன் பிடிதொழில் மேலாளர் ஸ்காட் ராபின்சன் கூறியுள்ளார்.

நீருக்கு வெளியே வாழ்வது எப்படி

இந்த விரால் மீன் எப்படி நிலத்தில் வாழ்கிறது என்பதை விளக்கினார் பிரிட்டனில் உள்ள ப்ரிஸ்டால் பல்கலைகழகத்தில் பரிணாம சூழலியல் மற்றும் நீர்வாழ் உயிரியல் துறையின் பேராசிரியர் மார்டின் ஜென்னர்.

தரையில் ஊர்ந்து செல்லுக்கூடியது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தரையில் ஊர்ந்து செல்லுக்கூடியது

"இந்த வகை மீன்கள் ஆசியாவில் இயற்கையாகவே வயல், மற்றும் ஆக்ஸிஜன் குறைந்த நீர் தேக்கங்களில் வாழ்ந்திருக்க வேண்டும்."

"இது போன்ற சூழலில் வாழும் உயிரிகள் வெவ்வேறு சூழ்நிலைகளில் வாழும் தன்மையைப் பெற்றிருக்கும். அடிப்படையாகவே தாங்கள் வாழும் சூழ்நிலையிலிருந்து அதிகம் ஆக்ஸிஜன் பெறும்" எனக் கூறினார் ஜென்னர்.

காற்று அறை

இந்த உயிரினத்திற்கு செதில்களுக்கு பின்னால் சூப்ராப்ரான்கியல் எனக்கூறப்படும் காற்று அறை இருக்கும்.

சாதாரணமாக செதில்கள் மூலம் தான் மீன்கள் சுவாசிக்கும். மேற்பரப்புக்கு வந்தால் மீண்டும் நீருக்குள் மூழ்கி ஆழத்திற்கு சென்று தான் சுவாசிக்கும்.

Catfish

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காற்று அறையுடன் உள்ள கெளுத்தி மீன்

ஆனால் இந்த விரால் மீன்கள் மேற்பரப்பிற்கு வந்து காற்றை உள்ளிழுத்து நீருக்குள் மூழ்கி இந்த காற்று அறைகளை கொண்டு சுவாசிக்கும். என்று ஜென்னர் கூறினார்.

இவ்வாறு தண்ணீருக்கு மேற்பரப்பில் சுவாசிப்பது இந்த மீன்களுக்கு தரைப்பகுதியில் சிறு இடப் பெயர்வுக்கு வழி செய்கிறது.

ஊர்ந்து செல்லுதல்

வறட்சி மிகுந்த பகுதிகளில் நீர்த் தேக்கங்கள் அடிக்கடி வறண்டு விடும். இதனால் ஒரு நீர் நிலையில் இருந்து இன்னொரு நீர் நிலைக்கு இந்த மீன்கள் செல்லும்.

இந்த மீன்கள் நிலப்பகுதியில் நகரும் தன்மையைக் கொண்டுள்ளது. இது மிகவும் ஒழுங்கற்ற முறையில் நகரும். தங்களுடைய துடுப்புகளை வைத்து ஊர்ந்து செல்லும். காற்றை விழுங்கி அதன் மூலம் சுவாசிப்பதால் இது நீர் இல்லாமல் சில காலம் வாழும். ஆனால் இந்த ஒரு வகை மீன் மட்டுமல்ல மேலும் சில வகை மீன்கள் தண்ணீருக்கு வெளியே சுவாசிக்கும் என்கிறார் ஜென்னர்.

மேற்பரப்பில் உள்ள ஆக்ஸிஜனைக் கொண்டு நிறைய வகையான மீன்கள் வாழ்கின்றன. உதாரணமாக கெளுத்தி மீன்களுக்கும் சூப்ராப்ராங்கியல் அறை இருக்கும் என விளக்கினார்.

Snakeheads in a crowded aquarium

பட மூலாதாரம், Getty Images

அதேபோல் வேறு சில வகை மீன்களுக்கும் மனிதர்களைப் போன்ற நுரையீரல் இருக்கும். இந்த நுரையீரல் சுவாசிக்கப் பயன்படாது. ஆனால் ஆக்ஸிஜன் குறைவான பகுதியில் காற்றை உள்ளிழுக்க உதவும் என ஜென்னர் கூறினார்.

கடுமையான போட்டியாளர்

இந்த விரால் வகையின் தாக்குபிடிக்கும் திறனால்தான் ஜார்ஜியா அதிகாரிகள் தண்ணீருக்கு அருகில் வாழும் மக்களை தண்ணீரில் விழுந்த பொருட்களை சுத்தம் செய்து உலர வைக்க அறிவுறுத்துகின்றனர்.

மற்ற உயிரினங்கள் மீது கொடூர தாக்குதலை இந்த வகை விரால் மீன்கள் நடத்தும்.

குறைந்த ஆக்ஸிஜன் உள்ள பகுதியில் சுவாசிக்கும் இதன் திறன் மற்ற உயிரினங்களைக் காட்டிலும் இதற்கு வலு சேர்க்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :