யாசுகே: ஆப்பிரிக்க சாமுராயின் அசாதாரண வளர்ச்சி நிகழ்ந்தது எப்படி?

பட மூலாதாரம், IWASAKI SHOTEN
- எழுதியவர், நைமா மொஹமூத்
- பதவி, பிபிசி
ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன்பு, உயரமான ஆப்பிரிக்க ஆண் ஒருவர் ஜப்பானை அடைந்தார். வெளிநாட்டில் பிறந்து முதன்முதலில் சாமுராய் வீரர் அந்தஸ்தைப் பெற்ற முதலாவது நபராக அவர் இருந்தார்.
யாசுகே என அறியப்பட்ட அந்த போர் வீரர், ஜப்பானை ஒன்று சேர்த்த மூன்று பேரில் முதலாவமாவரும், 16வது நூற்றாண்டில் வலிமையான ஜப்பானிய நிலவுடமை பிரபுத்துவ அதிகாரம் கொண்டிருந்தவருமான ஓடா நொபுனகா ஆட்சியில் சாமுராய் பதவிக்கு உயர்ந்தார்.
1579ல் அப்போதைய தலைநகரான கியோட்டோவுக்கு யாசுகே சென்று சேர்ந்தார். அப்போது அவரைக் காண்பதற்காக மக்கள் முண்டியடித்துக் கொண்டு ஓடினர். ஒருவர் மீது ஒருவர் ஏறி நின்று அவரைப் பார்க்க முயற்சி செய்தனர். அதில் சிலர் மிதிபட்டு உயிரிழந்தனர் என்று வரலாற்றாளர் லாரன்ஸ் வின்க்லர் பதிவு செய்துள்ளார்.
ஓராண்டு காலத்துக்குள் ஜப்பானின் போர் வீரர்களில் உயர் பதவியான சாமுராய் நிலையில் சேர்ந்தார். முன்னதாக அவர் சரளமாக ஜப்பானிய மொழி பேசுபவராக இருந்தார். போர்க்களத்தில் நொபுனகாவுக்கு அருகில் செல்லக் கூடியவராக இருந்தார்.
``அவர் 6 அடி 2 அங்குலம் (1.88 மீட்டர்) உயரம் கொண்டவராக இருந்தார்... கருப்பாக இருந்தார், அவருடைய தோல் கரிக்கட்டை போன்ற கருப்பு நிறத்தில் இருந்தது'' என்று மற்றொரு சாமுராய் வீரர் மட்சுடய்ரா லெட்டடா 1579ல் தன்னுடைய நாள்குறிப்பேட்டில் எழுதி வைத்துள்ளார்.
1900களில் ஜப்பானியர்களின் சராசரி உயரம் 157.9 செ.மீ. (5 அடி 2 அங்குலம்) என இருந்தது. எனவே சத்து குறைந்த உணவு காரணமாக மக்கள் குள்ளமாக இருந்த நிலையில், 16 ஆம் நூற்றாண்டில் பெரும்பாலான ஜப்பானியர்களைவிட உயர்ந்தவராக யாசுகே தோற்றமளித்தார்.
மாவீரனாக உருவெடுத்தல்
யாசுகேவின் பிறந்த தேதி அல்லது பிறந்த நாடு குறித்த ஆவணங்கள் எதுவும் இல்லை. அவர் மொசாம்பிக் நாட்டில் இருந்து வந்தார் என பெரும்பாலான வரலாற்றாளர்கள் கூறுகின்றனர். ஆனால் எத்தியோப்பியா அல்லது நைஜீரியா போன்ற பிற நாடுகளில் ஏதாவது ஒன்றில் இருந்து வந்திருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர்.
இருந்தபோதிலும், இத்தாலிய யூதரான அலெஸ்ஸான்ட்ரோ வலிக்னானோ என்பவருடன் ஆய்வுக்கான சுற்றுப் பயணத்தின் போது வந்தவர் என்பது தெரிந்த தகவலாக உள்ளது. 1579க்கும் 1582 க்கும் இடைப்பட்ட காலத்தில் தான் அவரைப் பற்றிய வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர் ஓர் அடிமையாக வந்தார் என சில நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் அப்படி சொல்வதும் சிரமம் தான்.
அவர் ஓர் அடிமை என்று கூறுவது அனுமானமாத்தின் அடிப்படையில் தான் என்று, அவரைப் பற்றிய ஆவணப் படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் பிளாய்ட்வெப் மற்றும் தேபோரா டெஸ்னூ ஆகியோர் கூறுகின்றனர்.
``போர் வீரனுக்கு உரிய பின்னணி இல்லாமல் வெறும் ஓராண்டு காலத்துக்குள் சாமுராய் அந்தஸ்தை யாசுகே எட்டுவது சாத்தியப்பட்டிருக்காது'' என்று டெஸ்னூ கூறுகிறார்.
சாமுராய்கள் பெரும்பாலும் குழந்தைப் பருவத்திலேயே பயிற்சியைத் தொடங்கி விடுவார்கள்.
போர்த் தலைவருடன் நட்புணர்வு

பட மூலாதாரம், IWASAKI SHOTEN
ஜப்பானுக்கு சென்ற சிறிது காலத்துக்குள்ளாகவே நொபுனகாவை யாசுகே சந்தித்தார். திறமையான உரையாடல் திறன் காரணமாக, அவருடைய ஆர்வத்தை தூண்டக் கூடியவராக யாசுகே இருந்திருக்கிறார் என்று திரைப்படத் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.
ஏற்கெனவே யாசுகே ஓரளவு ஜப்பானிய மொழி பேசக் கூடியவர் என்பதால் இருவரும் நெருக்கமானார்கள் என்று, யாசுகே பற்றி புத்தகம் எழுதிய கல்வியாளர் தாமஸ் லாக்லே கூறியுள்ளார்.
ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவில் சொல்லப்படும் கதைகளை நொபுனகாவுக்கு கூறி யாசுகே சுவாராசியப்படுத்தினார் என்று லாக்லே கூறுகிறார். ஜப்பானுக்கு செல்வதற்கு சில காலம் முன்னதாக ஆப்பிரிக்கா, இந்தியாவில் யாசுகே வாழ்ந்திருக்கலாம் என்ரு லாக்லே நம்புகிறார்.
ஜப்பானிய மொழியில் ஆளுமை கொண்டவராக யாசுகே இருந்ததால், வேண்டப்பட்டவர் நிலையில் அவர் நடத்தப்பட்டிருக்கலாம் என்று வெப் நம்புகிறார்.
``ஜப்பானுக்கு மத அடிப்படையிலான திட்டத்துடன் வந்த யூதர்களைப் போல அவர் இருக்கவில்லை'' என்று வெப் கூறுகிறார்.
முதலாவது சந்திப்பின் போதே யாசுகேவுக்கு குறிப்பிட்ட ஒரு தொகையை அளிக்குமாறு தனது உறவுமுறை சகோதரரிடம் நொபுனகா கூறியதாகப் பதிவுகள் உள்ளன.
யாசுகேவின் அசாதாரணமான வளர்ச்சி பற்றி ஆர்வம் கொண்ட பிரெஞ்சு-ஐவரி எழுத்தாளர் செர்ஜி பைலே, அந்த வீரரைப் பற்றி புத்தகம் எழுதியுள்ளார்.
``இந்த கதாபாத்திரத்தை சுற்றிய ஒரு புதிராகவே அது உள்ளது. அதனால் தான் நான் ஈர்க்கப்பட்டேன்'' என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
ஆப்பிரிக்க வீரருக்கும், ஜப்பானிய நிலப்பிரபுவுக்கும் பல பொதுவான அம்சங்கள் இருந்தன.
நொபுனகா தற்காப்புக் கலையில் அதிக நாட்டம் கொண்டவர். அதைப் பயிற்சி செய்வதில் அதிக நேரத்தை செலவிட்டவர். வித்தியாசமான குணாதிசயம் கொண்டவர் என்பதால் பெரும்பாலும் மேற்கத்திய பாணி உடைகளை அணியக் கூடியவராக இருந்தார் என்றும், உயர் ஒழுக்கமான, அறிவுஜீவிகளுடன் இருப்பதை விரும்பினார் என்றும் வெப் கூறுகிறார்.
``யாசுகேவிடம் போர் வீரனுக்கான உத்வேகம் இருந்தது'' என்று வெப் கூறுகிறார். ஜப்பானின் கலாசார மொழியை புரிந்து கொள்ளக் கூடியவராக யாசுகே இருந்தார். வீரச் செயல்களைக் கொண்டாடும் ஸ்வாஹிலி கவிதை நடையிலான வரலாற்று அம்சமாகக் கருதப்படும் - உட்டென்ஜி வாசிப்பதிலும், நடனம் ஆடுவதிலும் ஆர்வம் கொண்டிருந்தார் என்று வெப் குறிப்பிடுகிறார். மொசாம்பிக்கில் வடக்கில் சில பகுதிகளில் ஸ்வாஹிலி மொழி இன்னும் பேசப்படுகிறது. எனவே யாசுகே மொசாம்பிக் நாட்டில் இருந்து வந்தவராக இருக்கலாம் என்றும் சில வரலாற்றாளர்கள் கருதுகின்றனர்.
அதேபோல ஜப்பானிய இசை நாடகமான - நோஹ் நாடகம் நொபுனகாவுக்கு அதிகம் பிடிக்கும். அந்தக் கலையை ஊக்குவிப்பவராக அவர் இருந்தார் என பதிவுகள் காணப்படுகின்றன.
யாசுகே மீது பிரியம் கொண்டவராக நொபுனகா இருந்தார், தன் குடும்பத்தைச் சேர்ந்தவராகக் கருதியுள்ளார் - அவருடன் சேர்ந்து சாப்பிடக் கூடிய ஒரு சிலரில் இந்த ஆப்பிரிக்கரும் இருந்துள்ளார்.
``யாசுகேவின் பலம் மற்றும் கம்பீரம் பற்றி நொபுனகா பாராட்டியுள்ளார். 10 பேருக்கு சமமானவர் என்று வர்ணித்திருக்கிறார்'' என்று டெஸ்னூ கூறுகிறார். பெருமைக்குரியவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்

பட மூலாதாரம், Getty Images
யாசுகேவுக்கு சாமுராய் அந்தஸ்தை நொபுனகா வழங்கியபோது, ஜப்பானியர் அல்லாத யாருக்கும் அந்த அந்தஸ்து வழங்குவது பற்றி கேள்விப்பட்டிராத காலமாக இருந்தது. பின்னர் வெளிநாட்டினர் வேறு சிலரும் அந்தப் பட்டத்தைப் பெற்றுள்ளனர்.
சாமுராய் அந்தஸ்து பெற்ற முதலாவது வெளிநாட்டவர் என்ற வகையில், ஒடா நொபுனகாவுடன் சேர்ந்து முக்கியமான போர்களில் பங்கேற்றிருக்கிறார்.
நொபுனகா ஓர் அறையில் இருந்த போது அவருடைய அரண்மனைக்கு, அவருடைய ஜெனரல் அக்கெச்சி மிட்சுஹிடே தீயிட்டுக் கொளுத்திய போதும் யாசுகே அங்கிருந்துள்ளார். சம்பிரதாயப்படியான தற்கொலையாக, வயிறை அறுத்துக் கொண்டு நொபுனகா உயிரை மாய்த்துக் கொண்டார்.
தன்னுடைய தலையை துண்டித்து, அதையும் தனது வாளையும் தன் மகனிடம் ஒப்படைக்க வேண்டும் என உயிரை மாய்த்துக் கொள்வதற்கு முன் யாசுகேவை நொபுனகா கேட்டுக்கொண்டார் என்று வரலாற்றாளர் தாமஸ் லாக்லே கூறுகிறார். அது அபார நம்பிக்கையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக 1582ல் பெருமைக்குரிய யாசுகேவின் பயணம் முடிவுக்கு வந்தது. சதிகார ஜெனரலின் நடவடிக்கைகளால் நொபுனகா வீழ்ந்ததை அடுத்து, முதலாவது கருப்பு சாமுராய் கியோட்டோவில் உள்ள யூதர் தூதரக அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தார்.
அவருக்கு என்ன நேர்ந்தது, அவருடைய கடைசிக் காலம் எப்படி இருந்தது என்பது பற்றியெல்லாம் தகவல்கள் இல்லை என்றாலும், குருசு யோஷியோ எழுதிய குரோ-சுக்கே (குரோ என்றால் ஜப்பானிய மொழியில் ``கருப்பு'' என அர்த்தம்) என்ற விருது பெற்ற குழந்தைகளுக்கான புத்தகம் மூலமாக, பல ஜப்பானியர்களின் கற்பனைகளில் யாசுகே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
யாசுகேவின் வாழ்க்கையை, நாடகம் போல விவரித்துக் கூறியுள்ள அந்தப் புத்தகம் இனிமையான ஒரு குறிப்புடன் நிறைவடைகிறது. நொபுனகா தன் உயிரை மாய்த்துக் கொண்ட பிறகு குரோ-சுக்கே (யாசுகே) ஒரு கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆப்பிரிக்காவில் உள்ள தனது பெற்றோர்கள் குறித்து அங்கே கனவில் கண்டு அழுதார் என்று முடிகிறது.
தயாரிப்பில் உள்ள திரைப்படம் ஒன்றில் யாசுகே கதாபாத்திரத்தில், பிளாக் பாந்தர் நடிகர் சாட்விக் போஸ்மன் நடிக்கிறார் என்று வெரைட்டி என்ற பொழுதுபோக்கு பத்திரிகை கடந்த மே மாதம் செய்தி வெளியிட்டுள்ளது.
யாசுகே வாழ்க்கை குறித்து தயாரிக்கப்படும் இரண்டாவது ஹாலிவுட் திரைப்படமாக அது இருக்கும்.
2017ல் கருப்பு சாமுராய் வாழ்க்கை குறித்து ஒரு திரைப்படத்தை உருவாக்கி வருவதாக லயன்ஸ்கேட் என்ற ஹாலிவுட் ஸ்டூடியோ அறிவித்துள்ளது.
சுமார் 500 ஆண்டுகள் கழித்து, அவருடைய அசாதாரண வாழ்க்கை இன்னும் மக்களிடம் ஆர்வத்தையும் உத்வேகத்தையும் ஏற்படுத்துவதாக உள்ளது.
பிறசெய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












