You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜப்பானை புரட்டிப்போட்ட ஹகிபிஸ் புயல்: வெள்ளத்தில் மூழ்கும் புல்லட் ரயில்கள்
ஜப்பானில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான புயல் ஒன்று தாக்கியதில் குறைந்தது 23 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், புயலின் பாதிப்பில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்களும், மீட்புதவியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஹகிபிஸ் எனும் அந்த டைஃபூன் புயல் நேற்று (சனிக்கிழமை) டோக்கியோ நகரின் தெற்கே கரையைக் கடந்த நிலையில், அது கடுமையான வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தியவாறு வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்த புயலின் காரணமாக இதுவரை 17 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகமான என்எச்கே செய்தி வெளியிட்டுள்ளது.
நகனோ நகரில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் உலக புகழ்ப்பெற்ற ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில்கள் பாதி மூழ்கிய நிலையில் காணப்படுகின்றன. அங்குள்ள குடியிருப்புப் பகுதிகளில் சிக்கியவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.
மீட்புப் பணிகளில் ஜப்பானில் 27,000 ராணுவ வீரர்கள் மற்றும் மீட்புதவியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"எங்களால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். தேவைப்படும் பட்சத்தில் இன்னும் அதிக அளவிலான ராணுவ வீரர்கள் மீட்புதவி பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்" என்று ஜப்பானின் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடுமையான சேதங்களை விளைவித்த ஹகிபிஸ் புயல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வலுவிழந்ததுடன், நிலப்பகுதியை விட்டு விலகி சென்றுவிட்டதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஹெலிகாப்டரிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி
பெரிதும் பாதிக்கப்பட்ட டோக்கியோவின் புறநகர் பகுதிகளிலுள்ள வீடுகளிலும், மருத்துவமனைகளிலும் தஞ்சமடைந்திருந்த மக்கள் படகுகள் மூலமாக மீட்கப்பட்டனர்.
கிரேட்டர் டோக்கியோ பகுதியில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் மற்றும் விமான போக்குவரத்து முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவில் சிக்கியும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் பலர் இறந்ததாக அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மீட்புதவி ஹெலிகாப்டர் மூலம் காப்பாற்றப்பட்டு நகர்த்தப்பட்டபோது தற்செயலாக கைவிடப்பட்டதில் சுமார் 70 வயதுள்ள பெண் ஒருவர் இறந்ததாக, ஜப்பானிய தீயணைப்பு அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஏபி செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
ஜப்பானின் ஒரு சில பகுதிகளில், ஓராண்டில் பெய்ய வேண்டிய சராசரி மழை அளவில் 40 சதவீதம் ஒரு சில நாட்களிலேயே பெய்துள்ளது.
குறிப்பாக, ஜப்பானின் வரலாற்றில் முதல் முறையாக, ஒரு 48 மணிநேர காலத்தில் அதிகபட்ச மழையாக ஹகோன் எனும் பகுதியில் ஒரு மீட்டர், அதாவது 100 சென்டிமீட்டர் மழை கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமையில் மட்டும் பதிவாகியுள்ளது.
வெள்ளப் பெருக்கில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டதோடு, கிடங்குகளில் இருந்த அறுவடை செய்யப்பட்ட ஏராளமான உணவு தானியங்கள் நீரில் மூழ்கி வீணாகின.
"இது போன்ற ஒரு வெள்ளத்தை நாங்கள் இதுவரை பார்த்ததேயில்லை" என்று கூறுகிறார் ஹிகாஷி மாட்சுயாமா எனும் நகரை சேர்ந்த விவசாயி ஒருவர்.
பிறசெய்திகள்:
- குர்து மக்கள் தனி நாடு கேட்டு போராடுவது ஏன்? அவர்களின் வரலாறு என்ன?
- கடலில் திசை மாறி 20 நாள்கள் தத்தளித்த இலங்கை மீனவர்கள்: பசி தீர்த்த ஆமை ரத்தம்
- ‘ஜீரோ’ ‘ஓ’ - இரண்டுக்கும் இடையேயான ஒற்றுமையால் பரிதவிக்கும் விவசாயிகள் - வங்கி குளறுபடி
- "பொருளாதாரம் குறித்து நான் கூறியதைத் திரும்பப் பெறுகிறேன்" - ரவிசங்கர் பிரசாத்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்