ஜப்பானில் 225 கி.மீ. வேகத்தில் புயல், 60 ஆண்டில் இல்லாத பாதிப்பு

பட மூலாதாரம், Reuters
ஜப்பானில் 60 ஆண்டுகளில் காணாத கனமழை மற்றும் புயலால் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஹகிபிஸ் என்னும் டைஃபூன் புயல் உள்ளூர் நேரப்படி இரவு 7 மணி அளவில் டோக்கியோவுக்கு தென்மேற்கு பகுதியில் இருக்கும் ஈஸு தீபகற்பத்தில் கரையைக் கடந்தது.
இது கிழக்கு கடற்கரையை நோக்கி மணிக்கு 225 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவு எச்சரிக்கையால் சுமார் 70 லட்சம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளிறும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். ஆனால் 50 ஆயிரம் பேர் மட்டுமே முகாம்களில் உள்ளனர்.
ரயில் சேவை மற்றும் விமான சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டன.
சீபா பகுதியில் வேகமாக காற்று வீசியதால் கார் ஒன்று கவிழ்ந்து ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் சுமாராக 60 பேர் காயமடைந்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
டோக்கியோவை சுற்றி உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அவற்றில் சில வீடுகளுக்கு விரைவாக மீண்டும் மின்னிணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் காரணமாக இரண்டு ரக்பி உலக்கோப்பை ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ், நியூசிலாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கிடையே நடக்கவிருந்த உலகக்கோப்பை ஆட்டங்கள் சமன் என அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டன. ஃபார்முலா 1 கார் பந்தயமும் ரத்து செய்யப்பட்டது.
ஜப்பான் வானிலை முகமை டோக்கியோவில் அரை மீட்டர் அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என கூறியுள்ளது.
ஹகிபிஸ் புயல்

பட மூலாதாரம், Getty Images
ஹகிபிஸ் புயல் ஹோண்ஸு தீவுகளைத் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1959ல் மணிக்கு 306 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய வெரா புயலுக்குப் பின் ஜப்பான் எதிர்கொள்ளும் கடுமையான புயலாக இது கருதப்படுகிறது. இந்த வெரா புயலால் சுமார் 5000 பேருக்கு மேற்பட்டோர் காணாமல் போயினர் அல்லது இறந்தனர்.
முன்னெப்போதும் இல்லாத அளவு மழை பெரும்பாலான கிராமங்களில் மற்றும் நகரங்களில் பெய்ய வாய்ப்புள்ளதாக ஜப்பான் வானிலை முகமை கூறியுள்ளது.
இது நிலச்சரிவு மற்றும் வெள்ளம் போன்ற பேரிடர்களை ஏற்படுத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இன்று சனிக்கிழமை மதியம் எடுத்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் ஆறுகள் கரை கடந்து ஓடுவதாக காட்டுகின்றன.
இதனால் ஏற்படும் பாதிப்பு
ரக்பி உலக கோப்பை போட்டி மற்றும் ஃபார்முலா 1 பந்தயம் ரத்து செய்யப்பட்டதால் இந்த புயல் உலகத்தின் கவனத்தை கவர்ந்தது. புயல் காரணமாக சூப்பர் மார்க்கெட்டுகளில் இருந்த பொருள்களை மக்கள் பெருமளவில் வாங்கிச் சென்றுவிட்டனர்.

பட மூலாதாரம், AFP
கடந்தமுறை வந்த ஃபாக்சாய் புயலால் சேதமடைந்த பகுதிகளில் முப்பதாயிரம் வீடுகள் இன்னும் சரிசெய்யப்படாமல் அப்படியே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












