சிறிய நட்சத்திரத்தை சுற்றும் மிகப் பெரிய கோள் கண்டுபிடிப்பு - விஞ்ஞானிகள் வியப்பு மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், UNIVERSITY OF BERN
தற்போதைய வானியல் கோட்பாடுகளின்படி, 'இருக்கக்கூடாது' என்று கருதப்படும் ஒரு பெரிய கோளை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சூரிய குடும்பத்திலுள்ள ஜுபிடர் கோளை ஒத்த இது, தன்னை விட மிகவும் சிறிய நட்சத்திரத்தை சுற்றி வருவது, ஒரு கோள் எப்படி உருவாகிறது என்ற கோட்பாட்டிற்கு எதிராக அமைந்துள்ளதால் அது விஞ்ஞானிகளிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூமியிலிருந்து சுமார் 284 ட்ரில்லியன் கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள இந்த கோள், சூரிய குடும்பத்தில் அமைந்துள்ள கோள்களின் அமைப்பை ஒத்துள்ளது.

பட மூலாதாரம், ESO / M KORNMESSER/NICK RISINGER
இதுகுறித்த ஆய்வு முடிவுகள் சயின்ஸ் எனும் சஞ்சிகையில் சர்வதேச விஞ்ஞானிகள் குழுவினால் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஸ்பெயினில் உள்ள தொலைநோக்கிகளை பயன்படுத்தி இந்த கோள் கண்டறியப்பட்டுள்ளது.

ஐ.நா. சபையில் நரேந்திர மோதி பேச்சு

பட மூலாதாரம், ANI
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் நரேந்திர மோதி, ஐக்கிய நாடுகள் பொது சபையில் நடந்த கூட்டத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றியபோது, கடந்த 5 ஆண்டுகளில் தனது அரசு நிகழ்த்திய சாதனைகளையும், இனி செயல்படுத்தவுள்ள திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.
''உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 100 கோடிக்கும் மேலான மக்கள் வாக்களித்து மீண்டும் எங்கள் அரசு ஆட்சி பொறுப்பேற்றது. மக்களின் பெரும்பான்மை வாக்குகளை பெற்றதால்தான் தற்போது உங்கள் முன்னர் நான் நிற்கிறேன்'' என்று மோதி குறிப்பிட்டார்.
விரிவாக படிக்க:‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’- ஐ.நா. சபையில் கணியன் பூங்குன்றனாரை மேற்கோள் காட்டிய மோதி

சுபஸ்ரீ மரணம்: பேனர் விபத்து வழக்கில் அ.தி.மு.க. பிரமுகர் கைது

பட மூலாதாரம், FACEBOOK
சென்னையில் பேனர் விழுந்து மாணவி ஒருவர் உயிரிழந்த வழக்கில் தேடப்பட்ட அ.தி.மு.க. பிரமுகர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேனர்கள் வைப்பதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, ஜெயகோபால் கைதுசெய்யப்படாதது குறித்து நீதிமன்றம் கடுமையாகக் கேள்வியெழுப்பியது. அவர் தேடப்பட்டுவருவதாக காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதையடுத்து ஜெயகோபாலைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

நரேந்திர மோதிக்கு கிரெட்டா டூன்பெர்க் செய்த எச்சரிக்கை என்ன?

பட மூலாதாரம், Getty Images
இந்த வாரம் அமெரிக்காவில் இரண்டு பிரபலங்கள் மீது அனைவரின் கவனமும் இருந்தது. ஒருவர் இந்திய பிரதமர் நரேந்திர மோதி. மற்றொருவர் ஸ்வீடனைச் சேர்ந்த 16 வயது சூழலியல் செயற்பாட்டாளரான கிரேட்டா டூன்பெர்க்.
ஒருவர் தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துக் கொண்டிருக்கும் தலைவர். மற்றொருவர் பூமியின் அழிவு பற்றிய ஆபத்துகளால் ஈர்க்கப்பட்டு, உலகெங்கும் பருவநிலை மாற்றத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் மற்றும் இயக்கங்களின் முகமாக மாறி இருப்பவர். இப்போது கடந்த வாரத்தின் நிகழ்வுகளை திரும்ப பார்ப்போம்.

நம்ம வீட்டுப் பிள்ளை: சினிமா விமர்சனம்

பட மூலாதாரம், Twitter
மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களுக்குப் பிறகு, இயக்குனர் பாண்டிராஜும் சிவகார்த்திகேயனும் ஒன்றுசேர்ந்திருக்கும் மூன்றாவது படம் நம்ம வீட்டுப் பிள்ளை. வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல் போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தராத நிலையில், சிவகார்த்திகேயன் மிகவும் எதிர்பார்த்திருந்த படம் இது.
கிட்டத்தட்ட கடைக்குட்டி சிங்கம் படத்தை பார்ப்பதுபோல இருக்கிறது. பெரிய குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் இருக்க அவர்களையெல்லாம் ஒன்றிணைக்கும் இளைஞனுக்கு என்னென்ன அவமானங்கள் அந்தப் படத்தில் வந்ததோ, அதே அவமானங்கள் இந்தப் படத்திலும் கதாநாயகனுக்கு ஏற்படுகின்றன.
விரிவாக படிக்க:நம்ம வீட்டுப் பிள்ளை: சினிமா விமர்சனம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












