சுபஸ்ரீ மரணம்: பேனர் விபத்து வழக்கில் அ.தி.மு.க. பிரமுகர் கைது

சுபஸ்ரீ மரணம்

பட மூலாதாரம், FACEBOOK

சென்னையில் பேனர் விழுந்து மாணவி ஒருவர் உயிரிழந்த வழக்கில் தேடப்பட்ட அ.தி.மு.க. பிரமுகர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பள்ளிக்கரணையைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலரும் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளருமான சி. ஜெயகோபால் என்பவர் துரைப்பாக்கம் - பல்லாவரம் சாலை நெடுக தன் மகனின் திருமணத்திற்கு வருகை தரும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை வரவேற்று பதாகைகளை வைத்திருந்தார்.

கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி சென்னை நெமிலிச்சேரியைச் சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ என்பவர் கந்தன்சாவடியிலிருந்த தன் அலுவலகத்திலிருந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

பள்ளிக்கரணை ரேடியல் சாலை அருகே சுபஸ்ரீ வந்துகொண்டிருந்தபோது, சரியாக கட்டப்படாத ஒரு பதாகை அறுந்து அவர் மீது விழந்தது. நிலைதடுமாறிய சுபஸ்ரீ மீது பின்னால் நெருக்கமாக வந்துகொண்டிருந்த தண்ணீர் லாரி ஏறி இறங்கியது.

அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தபோதும், உயிரிழந்தார் சுபஸ்ரீ.

சுபஸ்ரீ மரணம்

பட மூலாதாரம், FACEBOOK

இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பல அரசியல் கட்சிகள் இனி பேனர் வைக்கக்கூடாது என தங்களது தொண்டர்களுக்கு அறிவுறுத்தின.

இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட லாரியின் டிரைவர் உடனடியாகக் கைதுசெய்யப்பட்டார். பரங்கிமலை போக்குவரத்து ஆய்வாளர், பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர், மாநகராட்சி அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், பேனரை வைத்த ஜெயகோபால் கைதுசெய்யப்படவில்லை.

பேனர்கள் வைப்பதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, ஜெயகோபால் கைதுசெய்யப்படாதது குறித்து நீதிமன்றம் கடுமையாகக் கேள்வியெழுப்பியது. அவர் தேடப்பட்டுவருவதாக காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதையடுத்து ஜெயகோபாலைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்தத் தேடலில் அவர் கிருஷ்ணகிரிக்கு அருகில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு சென்ற தனிப்படையினர் ஒரு தங்கும் விடுதியிலிருந்து அவரைக் கைதுசெய்தனர். அவர் சென்னைக்கு அழைத்துவரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :