3500 ரூபாய் கொள்ளையடித்ததற்காக 36 ஆண்டுகள் சிறையில் கழித்த நபர் மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
50 அமெரிக்க டாலர்கள் அல்லது இந்திய மதிப்பில் சுமார் 3500 ரூபாயை அங்காடி ஒன்றிலிருந்து திருடியதற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 36 ஆண்டுகளை சிறையில் கழித்தவரை விடுதலை செய்து அமெரிக்காவின் அலபாமா மாகாண நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை தண்டிக்கும் வகையில் 1970களில் அமல்படுத்தப்பட்ட கடுமையான விதிமுறைகளின் கீழ் கைது செய்யப்பட்ட ஆல்வின் கென்னார்ட்டுக்கு தற்போது 58 வயதாகிறது.
ஆல்வின் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி அறிவித்தவுடன் அங்கு கூடியிருந்த அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உணர்ச்சி மிகுந்து காணப்பட்டனர்.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள அவரது வழக்கறிஞர் கார்லா க்ரவுடர், "இந்த வாய்ப்பைக் கண்டு அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார். ஆல்வின் இனி அவரது குடும்பத்தினரால் கவனிக்கப்படுவார்" என்று கூறினார்.
தான் கைதுசெய்யப்படுவதற்கு முன்பு செய்துகொண்டிருந்த தச்சர் வேலையை மீண்டும் தொடருவதற்கு ஆல்வின் விரும்புவதாக அவர் மேலும் கூறினார்.
1983ஆம் ஆண்டு, அதாவது தனக்கு 22 வயதிருக்கும்போது, கையில் கத்தியுடன் அங்காடி ஒன்றில் கொள்ளையடித்த குற்றத்திற்காக ஆல்வினுக்கு பிணையில்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவத்தின்போது ஆல்வின் யாரையும் தாக்கவோ அல்லது காயப்படுத்தவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

'எங்களை அடிக்க வேண்டாம்; சுட்டு விடுங்கள்'

இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்க இந்திய அரசு முடிவு எடுத்ததற்கு பிறகு, அங்கு தாக்குதல் மற்றும் சித்ரவதை போன்றவற்றை பாதுகாப்பு படையினர் நடத்தி வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து கேட்டறிந்த பிபிசியிடம், தாங்கள் லத்திகள் மற்றும் கம்பிகளால் தாக்கப்பட்டதாகவும், தங்களுக்கு மின்சார அதிர்ச்சி தரப்பட்டதாகவும் பல கிராமவாசிகள் தெரிவித்தனர்.
பல கிராமங்களில் மக்கள் தங்களின் காயங்களை என்னிடம் காட்டினார்கள். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை பிபிசியால் அதிகாரிகளிடம் உறுதி செய்யமுடியவில்லை.
விரிவாக படிக்க:ராணுவ தேடுதல் வேட்டையில் சித்ரவதை என காஷ்மீர் மக்கள் குற்றச்சாட்டு: மறுக்கும் இந்திய ராணுவம்

தமிழ்க் குடும்பம் ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படுவது நடுவானில் நிறுத்தம்

பட மூலாதாரம், HOMETOBILO/TWITTER
ஆஸ்திரேலியாவில் இருந்து தமிழ்க் குடும்பம் ஒன்று நாடுகடத்தப்படுவதற்காக, வலுக்கட்டாயமாக இலங்கை செல்லும் விமானத்தில் ஏற்றப்பட்டு விமானமும் புறப்பட்ட நிலையிலும் ஆஸ்திரேலிய நாட்டின் செயற்பாட்டாளர்கள் போராடி நாடுகடத்தலைத் தடுத்தனர். பறந்துகொண்டிருந்த விமானம் தரையிறக்கப்பட்டு, அந்த குடும்பம் இறக்கிவிடப்பட்டது.
விமானம் புறப்பட்டபிறகு நீதிபதி ஒருவர் தொலைபேசி மூலம் பிறப்பித்த உத்தரவால் நடேசலிங்கம், பிரியா இவர்களின் இரண்டு பெண் குழந்தைகள் இலங்கைக்கு அனுப்பப்படுவது தடுக்கப்பட்டது. விமானம் தரையிறக்கப்பட்டு இந்தக் குடும்பம் கீழே இறக்கிவிடப்பட்டது.

இந்தியாவின் முக்கிய பொதுத்துறை வங்கிகள் இணைப்பு

பட மூலாதாரம், Getty Images
கடந்த வெள்ளிக்கிழமையன்று சில முக்கிய பொருளாதார அறிவிப்புகளை வெளியிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நேற்று (ஆகஸ்ட் 30) நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் வங்கிகள் இணைப்பு தொடர்பாக சில முக்கிய அறிவிப்புகள் மற்றும் திட்டங்களை வெளியிட்டுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வங்கிகள் இணைப்பு மற்றும் கடன் வசூல் போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
''கடன் வசூலில் மத்திய அரசு சாதனை படைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவு கடன் வசூலின் அளவு மிகவும் அதிகரித்துள்ளது'' என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
வங்கி நிர்வாகத்தில் அரசின் தலையீடு துளியும் இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக நிதி அமைச்சர் எடுத்துரைத்தார்.

சாஹோ - சினிமா விமர்சனம்

பட மூலாதாரம், Twitter
பாகுபலி வரிசை படங்களுக்குப் பிறகு பிரபாஸ் நடித்திருக்கும் படம், இந்திய சினிமாவிலேயே மிகப் பெரும் பொருட்செலவில் உருவாகியிருக்கும் ஆக்ஷன் திரைப்படம் என பல காரணங்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் சாஹோ. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகியிருக்கிறது இந்தப் படம்.
ஒரு மிகப் பெரிய க்ரைம் சிண்டிகேட்டைச் சேர்ந்தவர்கள், தங்கள் தலைவரைப் போட்டுத்தள்ளிவிட்டு, சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் பணத்தை எடுக்க முயற்சிக்கிறார்கள். அதற்கு ஒரு 'ப்ளாக் பாக்ஸ்' தேவைப்படுகிறது. அந்த ப்ளாக் பாக்ஸை வைத்து பணத்தை எடுக்க, பலரும் முயற்சிக்கிறார்கள்.
விரிவாக படிக்க:சாஹோ - சினிமா விமர்சனம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












