ஏணியின் இடுக்கில் சிக்கிக்கொண்ட தலை: 5 நாட்கள் தவித்த முதியவர் மற்றும் பிற செய்திகள்

ஏணி

பட மூலாதாரம், Getty Images

பிரான்ஸில் ஒருவர் தனது கழிவறையை அலங்காரப்படுத்திக் கொண்டிருந்தபோது, அவரது தலை ஏணியின் இடுக்கில் மாட்டிக் கொண்டது. எதுவும் செய்ய முடியாமல், அப்படியே ஐந்து நாட்களை கழித்துள்ளார் அந்த மனிதர்.

கிட்டத்தட்ட 60 வயதான அந்த ஆண் நபர், 5 நாட்களுக்கு பிறகு மருத்துவர்கள் வந்தபோது சுயநினைவுடனே இருந்தார் என்று பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஏணியில் உள்ள இரு படிகட்டுகளுக்கு இடையே அவரின் தலை மாட்டிக் கொள்ள வெளியே வர முடியாமல் தலை வீங்கிப்போனது. அவரால் போனையும் எடுக்க முடியவில்லை.

தலைக்கு ரத்த ஓட்டம் செல்வது குறைந்து, உடலில் நீர்சத்து குறைபாடும் ஏற்பட்டது.

தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Presentational grey line

டிரம்ப் - நரேந்திர மோதி சந்திப்பு

டிரம்ப் - நரேந்திர மோதி சந்திப்பு

பட மூலாதாரம், ANI

பிரான்ஸில் ஜி7 மாநாடு நடந்துவரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்பை இந்திய பிரதமர் நரேந்திர மோதி சந்தித்து பேசியுள்ளார்; இருவரும் காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதித்தனர்.

இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி முகமை வெளியிட்டுள்ள செய்தியில், ஜி7 மாநாட்டில், இருதரப்பு சந்திப்பின் ஒரு பகுதியாக இந்திய பிரதமர் நரேந்திர மோதியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்தித்து பேசியுள்ளார் என்று தெரிவித்துள்ளது.

"நாங்கள் காஷ்மீர் குறித்து நேற்றைய சந்திப்பில் பேசினோம். காஷ்மீரில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக பிரதமர் மோதி எண்ணுகிறார். அவர்கள் (இந்தியா) பாகிஸ்தானுடன் இது தொடர்பாக பேசி வருகிறார்கள். நிச்சயமாக இது நல்ல விஷயமாக முடிவடையும் என்று நம்புகிறேன்." என்று டிரம்ப் தெரிவித்துள்ளது குறித்து ஏஎன் ஐ செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.

Presentational grey line

தமிழ்நாட்டில் மின்சாரப் பேருந்துகள்

தமிழ்நாட்டில் மின்சாரப் பேருந்துகள்

தமிழ்நாட்டில் முதல்முறையாக சென்னையில் சோதனை அடிப்படையில் மின்சாரத்தில் இயங்கும் பேருந்து சேவை துவங்கப்பட்டுள்ளது.

FAME INDIA - 2 திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள 65 நகரங்களில் 5595 மின்சாரப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, ஈரோடு, திருப்பூர், சேலம், வேலூர், தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் 595 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படவிருக்கின்றன.

முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மயிலாப்பூர், அடையாறு வழியாக திருவான்மியூர் வரை காலை இரண்டு முறையும் மாலை இரண்டு முறையும் இந்தப் பேருந்துகள் இயக்கப்படும்.

Presentational grey line

ஜாகீர் நாயக் - பினாங்கு துணை முதல்வர் ராமசாமி இடையே வலுக்கும் மோதல்

ஜாகீர் நாயக்

பட மூலாதாரம், Getty Images

மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமிக்கும், மத போதகர் ஜாகிர் நாயக்கிற்கும் இடையேயான மோதல் வலுவடைந்து வருகிறது.

இந்திய தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தன்னைப் பற்றி ராமசாமி தெரிவித்துள்ள கருத்துகளுக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் வகையில் அவருக்கு சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளார் ஜாகிர் நாயக்.

ஜாகிர் சார்பில் அவரது வழக்கறிஞர் அனுப்பியுள்ள அந்த நோட்டீசில், தொலைக்காட்சிப் பேட்டியில் தெரிவித்துள்ள கருத்துகளுக்காக அடுத்த 48 மணி நேரத்தில் பேராசிரியர் ராமசாமி மன்னிப்பு கோர வேண்டும் என்றும், இனி ஜாகிர் குறித்து கருத்து தெரிவிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக மலேசிய ஊடகம் தெரிவித்துள்ளது.

Presentational grey line

இம்ரான் கான்: பாகிஸ்தானின் கடினமான உண்மைகளை எதிர்கொண்ட ஓராண்டு காலம்

இம்ரான் கான்

பட மூலாதாரம், Getty Images

கிரிக்கெட் சூப்பர் ஸ்டாராக இருந்து அரசியல்வாதியாக மாறிய இம்ரான் கான், பிரதமராகப் பதவியேற்று ஓராண்டு காலம் ஆகிறது.

இம்ரான் கான் 2018 தேர்தலில் ஒருபோதும் வெற்றி பெற முடியாது என்று சிலர் நினைத்திருந்தனர். இருபது ஆண்டு காலப் போராட்டத்தின் தொடர்ச்சியாக அவருக்கு வெற்றி கிடைத்தது. போராட்டத்தின் பெரும் பகுதி அரசியலில் துறவுக் காலமாக இருந்தது.

பாகிஸ்தான் எதிர்கொண்டுள்ள அடுக்கடுக்கான சவால்களையும் கருத்தில் கொண்டு பார்த்தால், இம்ரானின் முதலாவது ஆண்டு ஆட்சிக் காலம் அமைதியாக அமைந்திருக்கிறது என்று தெரிகிறது. அவர் உலகிற்கு ஒரு முகத்தைக் காட்டுகிறார், பாகிஸ்தானுக்குள் வேறு முகத்தைக் காட்டுகிறார் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Presentational grey line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: