ஜாகீர் நாயக் - பினாங்கு துணை முதல்வர் ராமசாமி இடையே வலுக்கும் மோதல்: மீண்டும் நோட்டீஸ்

ஜாகீர் நாயக்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜாகீர் நாயக்

மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமிக்கும், மத போதகர் ஜாகிர் நாயக்கிற்கும் இடையேயான மோதல் வலுவடைந்து வருகிறது.

இந்திய தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தன்னைப் பற்றி ராமசாமி தெரிவித்துள்ள கருத்துகளுக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் வகையில் அவருக்கு சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளார் ஜாகிர் நாயக்.

ஜாகிர் சார்பில் அவரது வழக்கறிஞர் அனுப்பியுள்ள அந்த நோட்டீசில், தொலைக்காட்சிப் பேட்டியில் தெரிவித்துள்ள கருத்துகளுக்காக அடுத்த 48 மணி நேரத்தில் பேராசிரியர் ராமசாமி மன்னிப்பு கோர வேண்டும் என்றும், இனி ஜாகிர் குறித்து கருத்து தெரிவிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக மலேசிய ஊடகம் தெரிவித்துள்ளது.

அவமானம் ஏற்படுத்தியதாக ஜாகிர் நாயக் குற்றச்சாட்டு

மேலும் தொலைக்காட்சி பேட்டி மூலம், ஜாகிர் நாயக்கிற்கு தர்ம சங்கடம் மற்றும் அவமானம் ஏற்படுத்தியதற்காக குறிப்பிட்ட தொகையை நஷ்ட ஈடாக தர வேண்டும் என்றும் அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருப்பதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

இது ஜாகிர் நாயக் தரப்பால் பேராசிரியர் ராமசாமிக்கு அனுப்பப்பட்டுள்ள இரண்டாவது நோட்டீஸ் ஆகும்.

ராமசாமி

பட மூலாதாரம், Facebook

படக்குறிப்பு, ராமசாமி

முன்னதாக, மலேசிய மனிதவளத் துறை அமைச்சர் குலசேகரன், கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு, பாகான் டாலம் தொகுதி உறுப்பினர் சதீஷ் முனியாண்டி, முன்னாள் தூதர் டென்னிஸ் இக்னேஷியஸ் ஆகியோருக்கும் ஜாகிர் நாயக் குறித்து அவதூறு கருத்துக்கள் தெரிவித்ததாகக் கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து ஐந்து பேரும் ஜாகிர் நாயக்கை நீதிமன்றத்தில் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

துணை முதல்வர் ராமசாமிக்கு இரண்டாவது நோட்டீஸ்

இந்நிலையில் பேராசிரியர் ராமசாமிக்கு இரண்டாவது நோட்டீஸ் அனுப்பியுள்ளார் ஜாகிர் நாயக். தமது பேட்டிகள், அறிக்கைகளில் ஜாகிர் நாயக்கை தொடர்ந்து விமர்சித்து வருகிறார் பேராசிரியர் ராமசாமி.

இந்நிலையில் ஜாகிர் நாயக் தமக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பது வருத்தம் அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

"துணை முதல்வர் பதவியை நான் முறைகேடாக பயன்படுத்துவதாக நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. நான் சார்ந்துள்ள கட்சியில் எனது செல்வாக்கு சரிவதால் ஜாகிர் நாயக்கை தாக்குவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

"கடந்த சனிக்கிழமை பிரிக் ஃபீல்ட்ஸ் பகுதியில் நடைபெறுவதாக இருந்த ஜாகிர் நாயக் எதிர்ப்பு பேரணிக்கும் நான் தான் காரணம் என்று தெரிவித்திருப்பது வருத்தம் அளிக்கிறது," என்று பேராசிரியர் ராமசாமி கூறியுள்ளார்.

இந்நிலையில், ஜாகிர் நாயக் மீது காவல் துறையில் புகார் அளிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்திருப்பது பரபரப்பை அதிகப்படுத்தி உள்ளது.

மலேசியாவின் உள்நாட்டு அரசியலில் தலையிட்டதாக குறிப்பிட்டு, இந்தப் புகாரை அளிக்கப் போவதாக பேராசிரியர் ராமசாமி தெரிவித்துள்ளார்.

"சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் என்று யாரும் இல்லை"

ஜாகீர் நாயக் - பினாங்கு துணை முதல்வர் இடையே வலுக்கும் மோதல்

பட மூலாதாரம், Getty Images

இதற்கிடையே, மலேசியாவில் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் என்று யாரும் இல்லை என்றும், மத போதகர் ஜாகிர் நாயக் உள்ளிட்ட அனைவருக்கும் இது பொருந்தும் என்றும் உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், மலேசியாவில் எவரும் சட்டரீதியான விளைவுகள் இல்லாமல் சட்டவிரோதமாக செயல்பட முடியாது என்று குறிப்பிட்டார்.

எந்த விஷயத்திலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: