ரஷ்யாவில் குழந்தைகளை பெற்ற தாய்களே கொல்லும் கொடுமை - காரணம் என்ன?

சித்தரிப்பு
    • எழுதியவர், ஒலேஸ்யா கெரசிமெங்கோ மற்றும் ஸ்வெட்லானா ரெய்டர்
    • பதவி, பிபிசி ரஷ்யா

ரஷ்யாவில் தாங்கள் பெற்ற பிள்ளைகளையே கொன்றுவிட்டதாக ஆண்டுதோறும் பல டஜன் தாய்மார்கள் மீது வழக்கு விசாரணைகள் நடைபெறுகின்றன. நிறைய குழந்தைகள் உள்ள இல்லத்தரசிகள் முதல் தொழில் செய்து வரும் மேலாளர்கள் வரை குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

இது ரஷ்யாவில் மட்டும் உள்ள பிரச்சினை கிடையாது தான். அமெரிக்காவில் 4ல் 1 தாய்மாருக்கு தன்னுடைய குழந்தைகளைக் கொன்றுவிடும் எணணம் இருந்திருக்கிறது என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆனால், மற்ற பல நாடுகளைப் போல, ரஷியாவில் உயிர்வாழ்வற்கு நீங்கள் கடுமையாக இருக்க வேண்டும் என்ற கலாச்சாரம் உள்ளது. மன ரீதியிலான பிரச்சனைகள் பற்றிப் பேசாமல் இருப்பது நல்லது - இருக்கிற சூழ்நிலையில் வாழ்ந்துவிட்டுப் போக வேண்டும் - என்று கருதப்படுகிறது.

குழந்தைப் பிறப்புக்குப் பிறகு ஏற்படும் மன அழுத்தம் தான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. பல சமயங்களில் இது கண்டறியப்படாமல் அல்லது உரிய காலத்தில் சிகிச்சை தரப்படாமல் போகிறது. சோகத்தை ஏற்படுத்தும் வகையில், தாமதமாகிவிடுவதற்கு முன்னதாக இதை நெருங்கிய உறவினர்களே கூட புரிந்துகொள்ளத் தவறிவிடுகின்றனர்.

சமூகக் கட்டுப்பாடுகள்

பிபிசியின் ரஷிய செய்தியாளர்கள் ஒலெஸ்யா ஹெராசிமென்கோ, ஸ்வெட்லனா ரெய்ட்டர் ஆகியோர், பெற்ற பிள்ளைகளை தாய்மார்கள் ஏன் கொல்ல முயற்சிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள பெண்களிடம் பேசியுள்ளனர்.

தாய்மை குறித்த மூட நம்பிக்கைகளை எப்படி நாம் உடைக்க வேண்டியுள்ளது என்பதை இது வெளிப்படுத்தியுள்ளது. சிசுக் கொலையைத் தவிர்ப்பதற்கு நல்ல வாய்ப்பை உருவாக்கும் வகையில், அதிக மன அழுத்தம் பற்றி வெளியில் பேசுவதற்கு உள்ள சமூகக் கட்டுப்பாடுகளை உடைக்க வேண்டிய அவசியமும் இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

சித்தரிப்பு

அலியோனா

அலியோனா என்ற பொருளாதார நிபுணர், பியோட்டர் என்பவரை மணந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். ஒரு குழந்தை பிறக்கப் போகிறது என்பதை எதிர்பார்த்து உற்சாகத்தில் இருந்தனர்.

குழந்தைக்கான துணிகள், தள்ளுவண்டி ஆகியவற்றை அவர்கள் வாங்கினர். பிரசவத்துக்கு முந்தைய வகுப்புகளுக்கு அலியோனா சென்றார். ஆனால் புதிதாகத் தாய்மை அடையும் பெண்களுக்கு ஏற்படக் கூடிய உளவியல் பிரச்சினைகள் பற்றி யாரும் சொல்லவில்லை.

குழந்தை பிறந்த பிறகு அலியோனாவுக்கு தூக்கமின்மை குறைபாடு வந்துவிட்டது. அதை சமாளிக்க முடியவில்லை என்று அவர் கூறினார்.

அவர் கடந்த காலத்தில் உளவியல் பிரச்சினையில் இருந்திருக்கிறார். இப்போது அவருக்கு உளவியல் நிபுணர் சில மருந்துகள் கொடுத்தது, அவருக்கு சிறிது உதவியாக உள்ளது.

ஒரு நாள் பியோட்டர் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது, தங்களின் 7 மாதக் குழந்தை குளியல் தொட்டியில் இறந்து கிடந்ததைக் கண்டார். மாஸ்கோவின் புறநகர்ப் பகுதியில் ஒரு ஏரி அருகே பின்னர் அலியோனா கண்டுபிடிக்கப்பட்டார். குழந்தையை நீரில் மூழ்கடித்துக் கொன்றுவிட்டு அவர் ஒரு பாட்டில் வோட்கா குடித்திருக்கிறார். தன்னையும் நீரில் மூழ்கடித்துக் கொள்ள வேண்டும் என்று அப்படி செய்திருக்கிறார். அதில் அவர் சுயநினைவை இழந்துவிட்டார்.

சித்தரிப்பு

இப்போது அவர் விசாரணையை எதிர்நோக்கியுள்ளார்.

மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள பியோட்டர், அலியோனா வழக்கின் ஒவ்வொரு விசாரணைக்கும் செல்கிறார். அலியோனா விசாரணைக் கூண்டில் இருக்கும்போது அவரை ஆசுவாசப்படுத்த பியோட்டர் முயற்சி செய்கிறார்.

பிரசவத்துக்குப் பின்பு ஏற்படும் மன அழுத்தம் பற்றி யாராவது அலியோனாவிடம் சொல்லியிருந்தால், நிச்சயமாக இதைத் தவிர்த்திருக்க முடியும் என்று பியோட்டர் நம்புகிறார்.

``அவளுக்கு கெடுதலான எண்ணம் எதுவும் கிடையாது. அவள் மன ரீதியில் பாதிக்கப்பட்டிருக்கிறாள்'' என்று அவர் கூறுகிறார்.

``சரியான டாக்டரை அவள் பார்த்திருந்தால், அவள் என்னிடம் கேட்டபோது நான் டாக்டரிடம் அழைத்துச் சென்றிருந்தால், இது ஒருபோதும் நடந்திருக்காது'' என்கிறார் அவர்.

இந்த வழக்குகளை எதிர்கொண்டிருக்கும் பெண்களில் 80 சதவீதம் பேர், குழந்தையைக் கொல்வதற்கு முந்தைய நாட்களில் தலைவலி, தூக்கமின்மை அல்லது சீரற்ற மாதவிடாய் கோளாறு போன்ற பிரச்சினைகளுக்காக டாக்டர்களிடம் சென்றிருக்கிறார்கள் என்று ரஷிய குற்றவியல் ஆய்வு நிபுணர்கள் கூறுகின்றனர்.

சித்தரிப்பு

யார் அவர்கள்?

ரஷிய சட்டத்தின்படி, சமூகக் கட்டுப்பாட்டால். சரியாக ஆய்வு செய்யப்படாத இந்தக் கொலைகள், பிலிசைடு எனப்படுகிறது. அதாவது பெற்ற குழந்தையை அதன் தாயாரே கொலை செய்வது இவ்வாறு கூறப்படுகிறது.

நியோநேட்டிசைடு என்பதும் இருக்கிறது - பிறந்தவுடன் குழந்தையைக் கொல்வது அல்லது சிசுக் கொலை (குழந்தை பிறந்து இரண்டு வயதாவதற்குள் கொன்றுவிடுவது) இவ்வாறு கூறப்படுகிறது.

2018 ஆம் ஆண்டில் ரஷியாவில் இதுபோன்ற 33 வழக்குகள் விசாரிக்கப் பட்டுள்ளன.

இதுபோன்ற நிகழ்வுகளில் நீதிமன்றத்துக்கு வராமல் இருப்பவை எட்டு மடங்கு அதிகமாக இருக்கும் என்று குற்றவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

``எங்கள் மருத்துவமனையில் இருபது படுக்கைகள் கொண்ட பெண்கள் வார்டில் மாதந்தோறும் மூன்று அல்லது நான்கு படுக்கைகளில், தங்கள் பிள்ளைகளைக் கொன்ற தாய்மார்கள் பிடித்துக் கொள்கிறார்கள்'' என்று தடயவியல் உளவியலாளரும், மாஸ்கோவில் உள்ள செர்பிஸ்கை உளவியல் கல்வி நிலைய ஆராய்ச்சியாளருமான மார்கரிட்டா கச்சேவா கூறுகிறார்.

ஒரு அக்கவுண்டன்ட், ஓர் ஆசிரியை, வேலைக்குச் செல்லாத ஒரு பெண்மணி, சமூக நல ஆலோசகர் ஒருவர், ஓட்டல் அலுவலர் ஒருவர், வடிவமைப்புப் பள்ளியில் பட்டம் பெற்ற ஒருவர், பெரிய குடும்பத்தின் தாயார் ஒருவர், கடை அலுவலர் ஒருவர் - என பிபிசி ரஷியா பிரிவு ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட சுமார் முப்பது பெண்களின் கதைகளும் வித்தியாசமானவை.

ஒரே மாதிரியாக இருந்தவற்றிலும், தங்கள் குழந்தைகளைக் கொன்ற பெண்களுக்கு கணவர், வீடு, வேலை இருந்துள்ளது, எந்த கெட்டப் பழக்கத்திற்கும் அடிமையாக இல்லை.

குழந்தை பிறந்தவுடன், மன அழுத்தம் திடீரென அதிகமாகும் என்று டாக்டர்களுக்குத் தெரியும்.

பெண்களுக்கு நீண்டகால பாதிப்பு இருக்கலாம். தினசரி வாழ்க்கையில் அது வெளிப்படாமல் இருக்கலாம். ஆனால், பெண்களின் உயிரியல் செயல்பாட்டில் அழுத்தத்தை ஏற்படும் மூன்று செயல்பாடுகளால் - கருத்தரித்தல், குழந்தை பெறுதல் அல்லது மாதவிடாய் தொடர்பான சமயங்களில் இது தூண்டப்பட்டு வெளிப்படலாம்.

சித்தரிப்பு

``பாருங்கள், குழந்தையைக் கொன்றுவிட்டேன் போலத் தெரிகிறது''

அன்னா என்ற ஆசிரியைக்கு வயது 38. அவருடைய 18 மற்றும் 10 வயது மகன்கள், தங்கள் பெற்றோர் விரும்பிய குட்டித் தங்கையின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் 2018 ஜூலை 7 ஆம் தேதி அன்னா தானாகவே ஆம்புலன்ஸ் கேட்டு போன் செய்திருக்கிறார். அவருக்கு அதிகமான வலி இருந்திருக்கிறது. பிரசவத்துக்குப் பின்பு அது இன்னும் அதிகரித்திருக்கிறது.

தன்னால் தாங்க முடியாது என்று அன்னா நினைத்திருக்கிறார்; ரிலாக்ஸ் செய்து கொள்ளுமாறு உளவியல் நிபுணர் கூறியிருக்கிறார். அவருடைய கணவர் மாஸ்கோவில் வேலைக்குச் சென்ற பிறகு, தன் குழந்தைகளை ஒரு நண்பர் வீட்டில் விட்டுவிட்டு, ஒரு படுக்கை வாங்கச் செல்வதாகக் கூறிவிட்டு அன்னா சென்றிருக்கிறார்.

ஆனால் அவர் தன்னுடைய தாயாரின் கல்லறைக்குச் சென்றிருக்கிறார். மறுநாள் அவர் வெறும் காலுடன் குழந்தையை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றிருக்கிறார். காவல் துறையினர் அவரைத் தடுத்து நிறுத்தி விசாரித்தபோது, அவரால் சரியாகப் பதில் சொல்ல முடியவில்லை.

அவருடைய மாமியார் அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். நீதிமன்றத்தில் விசாரணை நடந்தபோது, தலையணையால் முகத்தில் அழுத்தி குழந்தையைக் கொலை செய்ய அன்னா முயற்சி செய்திருக்கிறார் என்பது போல தெரிய வந்திருக்கிறது.

ஜூலை 7 ஆம் தேதி ஆம்புலன்ஸ் வந்தபோது, ``பாருங்கள், நான் குழந்தையைக் கொன்றுவிட்டேன் போலத் தெரிகிறது'' என்று டாக்டரிடம் அன்னா கூறியிருக்கிறார்.

குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய டாக்டர்கள், அன்னாவை மருத்துவமனையில் சேர்த்தனர்.

அன்னாவுக்கு தீவிர மனச் சிதைவுக் கோளாறு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

``அது முழுக்க பித்துப் பிடித்த நிலை இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மனநிலை பாதித்த போது குழந்தையைக் கொன்ற ஒரு பெண், அதற்கு முன்பு இயல்பான வாழ்க்கை வாழ்ந்திருப்பார்'' என்று கச்சேவா விவரிக்கிறார்.

``ஓ கடவுளே, டாக்டர், நான் என்ன செய்திருக்கிறேன்? இப்போது நான் எப்படி வாழ்வேன்?''

அரினா என்ற 21 வயதுப் பெண் தன் குழந்தையைக் கைகளில் ஏந்தியபடி 9வது மாடியில் இருந்து கீழே குதித்துவிட்டார்.

குழந்தை பிறந்த போது அவருடைய கணவர் ராணுவப் பணியில் இருந்தார். அவர் திரும்பி வந்தபோது மனைவியிடம் கடுமையாக நடந்து கொண்டிருக்கிறார். மனைவி மன அழுத்தத்தில் இருப்பதைப் பார்த்திருக்கிறார்.

ஓராண்டு காலம் அரினா தன் பெற்றோருடன் வாழ்ந்தார். தற்கொலை மற்றும் பிலிசைடுக்கு முயற்சி செய்ததற்கு முந்தைய நாள், காவல் துறையினரை தொலைபேசியில் அழைத்த அவர், தன்னைக் கொல்வதற்காக தனது கணவர் கத்தியைத் தீட்டிக் கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார்.

அதிர்ஷ்டவசமாக, மாடியில் இருந்து குதித்த சம்பவத்தில் தாயும், குழந்தையும் உயிர் பிழைத்தனர். அரினாவை மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு காவல் துறையினரின் காவலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அவருக்கு மனச் சிதைவு நோய் இருப்பதாக உளவியலாளர்கள் கண்டறிந்தனர்.

மனச் சிதைவு மற்றும் மன அழுத்த நோய்க்கு ஆளான தாய்மார்கள், தங்கள் குழந்தையைக் கொல்வதற்கு ஒரே மாதிரியான காரணங்களைக் கூறுகின்றனர்.

``அவருக்கு அது நல்லது. நான் ஒரு கெட்ட தாயாகிவிட்டேன்,'' ``இது கொடூரமான உலகம், இதில் வாழாமல் இருப்பது என் குழந்தைக்கு நல்லது'' என்று அவர்கள் சொல்கின்றனர்.

``குற்றமிழைத்த பிறகு அவர்கள் ஒருபோதும் அமைதியடைவதில்லை. முதலாவது, இரண்டாவது அல்லது மூன்றாவது முயற்சியில் தற்கொலை செய்து கொள்கிறார்கள்'' என்று டாக்டர் கச்சேவா கூறினார்.

குடும்பத்தில் யாராவது ஒருவர் தலையீடு செய்த பிறகு, பெண்கள் தனது கல்வி நிலையத்துக்கு அழைத்து வரப்படுகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

அவர்களுக்கு சிகிச்சை தொடங்கியதும், ஆறு மாதங்களில் முழுமையாகக் குணமடைவார்கள்.

சித்தரிப்பு

அமெரிக்காவில் உள்ளதைப் போல, ரஷியாவிலும் தன் குழந்தையைக் கொன்ற தாய்மார்களுக்கு என்ன வகையிலான தண்டனை கொடுப்பது என்பதை நீதிமன்றங்கள் முடிவு செய்கின்றன.

அந்தத் தாயாருக்கு பித்துப் பிடிக்கவில்லை என்று தடயவியல் உளவியலாளர்கள் கண்டறிந்தால், அவருக்கு நீண்டகால சிறைத் தண்டனை கிடைக்கலாம்.

இதில் பெரும்பாலான பெண்கள், குழந்தைப் பருவத்தில் இருந்தபோது அடக்குமுறைக்கு ஆளானவர்கள்.

சிசுக் கொலையில் ஈடுபட்ட பெண்களில் 80 சதவீதம் பேர் ஏழைக் குடும்பங்களில் வளர்ந்தவர்கள் என்றும், அவர்களில் 85 சதவீதம் பேருக்கு திருமணங்களில் மோசமான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்றும் ரஷிய தடயவியல் உளவியலாளர்கள் நடத்திய ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

பின்வரும் அம்சங்களுக்கு இதில் நேரடித் தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்: பொய்கள், வாக்குவாதங்கள், சண்டைகள், கருத்து முரண்பாடுகள் மற்றும் குடிப்பழக்கங்கள் டீன் ஏஜ் பருவத்தில் பெண்களின் பிரிக்க முடியாத விஷயங்களாக இருக்கும்போது, பெரியவர் ஆன பிறகும் தொடர்கிறது.

பெற்றோருடன் உறவு நிலை மோசமாவதும், குழந்தையின் மீது வெறுப்பு ஏற்படுவதற்கு மூலகாரணமாக அமைந்துவிடுகிறது.சிசுக் கொலை செய்யும் பெண்கள் அதிகமான பாசத்தால் அதை மூடி மறைக்கிறார்கள்.

``குடும்ப வன்முறைக்கு ஆளாவதும், எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்கள் நடைபெறுவதற்கு முக்கியக் காரணமாக இருக்கலாம்'' என்று கச்சேவா கூறுகிறார்.

``குழந்தையாக இருந்த போது இதில் பெரும்பாலான பெண்கள் - உணர்வு ரீதியாக, பாலியல் ரீதியில் அல்லது உடல் ரீதியாக - துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர்.''

சித்தரிப்பு

தங்கள் குழந்தைகளைக் கொலை செய்த பெண்களுக்கு ஆதரவாக வாதாட பல வழக்கறிஞர்கள் முன்வருவது இல்லை.

``அது ஒருபோதும் எனக்கு நடக்கக் கூடாது என்று நினைத்தேன்''

``தங்கள் குழந்தைகளைக் கொன்றதால் தண்டனை அனுபவிக்கும் பெண்களைப் பற்றிய தகவல்களை சிறை அதிகாரிகள் வழக்கமாக ரகசியமாக வைத்துக் கொள்கிறார்கள்'' என்று வேறு குற்றச் செயலுக்காக தண்டனை அனுபவித்து வரும் நடிகை மரினா கிளெஸ்ச்செவா கூறுகிறார்.

``அவர்களை நான் அறிந்திருக்கிறேன். ஆனால் அவர்களுடைய ஊரைச் சேர்ந்தவர்கள் சொன்னால் தவிர, அவர் என்ன குற்றத்துக்காக தண்டனை அனுபவிக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. சிறை முகாமில் அவர்களுக்கு நண்பர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அவர்கள் அமைதியாக இருந்து, தங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஏனென்றால் ஏதாவது வாக்குவாதத்தில் ஈடுபட்டால், யாராவது அவர்களைத் தாக்கக் கூடும்.''

பெண்கள் தங்களுடைய கொலை சிந்தனையை நிராகரித்து, தற்காப்பு வழிமுறையாக மற்றவர்கள் மீது கோபத்தைக் காட்டுவார்கள் என்று மாஸ்கோ உளவியல் சிகிச்சையாளர் யகோவ் கொச்செட்டோவ் கூறுகிறார்.

``ஒரு பெண்ணைப் புரிந்து கொண்டு அவர் மீது பரிவு காட்டினால், அவருடைய உணர்வுகளை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். யாரும் அந்த உணர்வுகளை சந்திக்க விரும்புவதில்லை.''

சித்தரிப்பு

``அதுபோன்ற தாய்மார்களை நான் கண்டிப்பது வழக்கம். அதுபோல எனக்கு ஒருபோதும் நடக்கக் கூடாது என்று நினைப்பேன்'' என்று 33 வயதான டாட்டியானா கூறினார். பெரிய தொலைத்தொடர்பு நிறுவனத்தில் கார்ப்பரேட் வாடிக்கையாளர் தொடர்பு அலுவலராக அவர் பணியாற்றுகிறார்.

விற்பனை, தொழில்முறைப் பயணங்கள், நண்பர்கள் இத்துடன் நான் உண்மையில் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினேன். அது சாத்தியமாகும் போது நாங்கள் தயாராக இருந்தோம். ஆனால் அது வேறு மாதிரியாகிவிட்டது.''

``பிரசவம் உண்மையில் கஷ்டமானதாக இருந்தது. செவிலியர்கள் கடுமையாக நடந்து கொண்டார்கள். அதன்பிறகு பிரசவம் பற்றிய நினைவுகளை திரும்பிப் பார்த்தேன். பிரகாசமான மற்றும் வலியான கனவுகளை நினைத்துப் பார்ப்பேன். மன வலியுடன் எழுந்து கொள்வேன். மார்பக அழற்சி, உடல் எடை அதிகரிப்பு, அல்சர், முடி உதிர்தல் போன்ற விஷயங்களால் என் குழந்தை மீது எனக்கு கோபம் அதிகரித்தது - ஏதோ என் வாழ்க்கையை அந்தக் குழந்தை திருடிவிட்டதைப் போல நினைத்தேன்.''

இரவில் குழந்தை தூங்காத போது அல்லது பல் துலக்கும்போது அழுதால், டாட்டியானா உடைந்து போவார்.

``நீங்கள் தாய் அல்லவா? மற்றவர்களால் அதைச் செய்ய முடியும்போது உங்களால் ஏன் முடியாது?''

``அந்த அழுகை உங்களுக்கு தலையில் பிரச்சினையை ஏற்படுத்தும். உங்கள் குழந்தைப் பருவத்தில் இருந்து அனைத்துப் பிரச்சினைகளையும் அது நினைவுபடுத்தும்'' என்று டாட்டியானா நினைவுகூர்கிறார். ``எல்லாவற்றையும் நான் சமாளித்தாக வேண்டும் என்று நினைத்தேன். குழந்தையை தூங்க வைக்க முயற்சிக்கும் போது நான் வெறி கொண்டவளைப் போல, குழந்தையை கடுமையாக குலுக்குவேன். குழந்தை இன்னும் பயந்து போய், அதிகமாக அழத் தொடங்கும். அப்போது முழு பலத்துடன் குழந்தையை படுக்கை மீது வீசுவேன். ``நீ செத்துவிட்டால் நல்லது!'' என்று அலறுவேன். அதைவிட மோசமாகவும் அலறுவேன். தாய்மையை அனுபவிக்க முடியாதவள் என்று பிறகு நான் அவமானத்தாலும், குற்ற உணர்வாலும் துடித்தேன்.''

சித்தரிப்பு

மன ரீதியாக குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறாய் என்று கணவர் கூறியதாக டாட்டியானா தெரிவித்தார். தாம் கூறும் புகார்களை அவர் எடுத்துக் கொண்டதில்லை என்கிறார். ``நீ ஒரு தாய் தானே. இல்லையா? மற்றவர்களால் செய்ய முடியும் போது உன்னால் ஏன் செய்ய முடியாது? முதலில் நீ எதற்கு குழந்தை பெற்றுக் கொண்டாய்'' என்று அவர் சொல்வார்.

ஓராண்டு கழிந்தது. நிலைமை இன்னும் மோசமானது. தற்கொலை செய்து கொள்ள யோசித்த டாட்டியானா உளவியல் நிபுணரிடம் சென்றார். ``என்னைப் போன்ற கொடூரமான, இழிவான தாய் இந்த உலகத்திலேயே இருக்கக் கூடாது என்று நினைத்தேன். ஒரு தாயாக இருக்கவே தகுதியற்றவள் என்று நினைத்தேன். மன ரீதியாக வலியில் இருப்பதைவிட தற்கொலை செய்து கொள்வது எனக்கு எளிதான விஷயம். அதுபோன்ற பல பிரச்சினைகள் எனக்கு உண்டு. உளவியலாளர் நேரடியாக சிகிச்சை அளித்து எனக்கு உதவி செய்தார்.''

வருமுன் காத்தல்

தன்னுடைய குழந்தைகளையே கொலை செய்யும் குற்றங்களைத் தடுக்கும் பிரச்சினை எழுந்தபோது, கருத்தடை சாதனம் பயன்படுத்துதலை ஊக்குவித்தல் மற்றும் குழந்தை பெட்டிகள் பற்றி நாம் பேச வேண்டியுள்ளது. ஆனால் தாய்மார்களின் உளவியல் பிரச்சினைகள் பற்றி எச்சரிக்க வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி ரஷிய மற்றும் மேற்கத்திய நாடுகளின் டாக்டர்கள் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக பிரசவத்துக்குப் பிந்தைய மன அழுத்தம் பற்றி எச்சரிக்க வேண்டும் என்கின்றனர். ``குழந்தை பிறப்பதற்கு முன்பு அனைத்து சூழ்நிலைகளையும் நீங்கள் யோசிப்பீர்கள். உங்கள் தாயாருடன் உள்ள உறவுகள் பற்றி பேசுவீர்கள். நீங்கள் எப்படி உணர்கிறீர்கள், உங்கள் துணைவர் எப்படி உணர்கிறார், குழந்தை பிறந்த பிறகு அது எந்த வகையில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்றெல்லாம் யோசிப்பீர்கள்'' என்று உளவியலாளர் மரினா பிலோபிராம் கூறுகிறார். ```குழந்தையுடன் புன்னகைத்துக் கொண்டிருக்கும் தாய்மார்களின் போஸ்டர்கள் வைக்க வேண்டியது மட்டுமின்றி, வேறு மாதிரியாகிவிட்டால் என்னவாகும் என்பதையும் விவரிக்க வேண்டும்.''

``மாஸ்கோவிலும், மற்ற பிராந்தியங்களிலும் நெருக்கடியில் உள்ள பெண்களுக்காக நாங்கள் மையங்கள் நடத்தி வருகிறோம். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட, மன அழுத்தத்திற்கு ஆளான பெண்களுக்காக அவை செயல்படுகின்றன. அங்கு சென்று தங்கள் பிரச்சினைகள் பற்றிப் பேசினால், தங்கள் குழந்தைகளை எடுத்துச் சென்றுவிடுவார்கள் என்ற அச்சம் பெண்களுக்கு இருப்பதால், அந்த மையங்கள் பாதி காலியாகவே உள்ளன. உள்ளூரில் உளவியலாளரிடம் செல்லாமல் தவிர்ப்பதற்கும் இதே அச்சம் தான் காரணமாக உள்ளது. கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் கூறினாலும், வாயை மூடிக் கொண்டு அமைதியாக இரு என்று சொல்வார்களோ என்றும் பெண்களுக்கு அச்சம் இருக்கிறது'' என்று டாக்டர் கச்சேவா கூறுகிறார்.

பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உரிமைகள் பாதுகாப்பு கருதி இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள பெயர்கள் அனைத்தும் மாற்றி எழுதப் பட்டுள்ளன.

சித்தரிப்பு படங்கள் டாட்டியானா ஓஸ்பென்னிகோவா

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :