துரியன் பழம் 33 லட்சம் ரூபாய்க்கு விற்பனையான பாங்காங் ஏலம் மற்றும் பிற செய்திகள்

முன்னெப்போதும் இல்லாத வகையில், தாய்லாந்தில் நடைபெற்ற ஏலத்தில், பழங்களின் அரசன் என்றழைக்கப்படும் துரியன் பழம் இந்திய மதிப்பில் சுமார் 33 லட்சம் ரூபாய்க்கு விலைபோயுள்ளது.

ஒரு சிலருக்கு பழங்களின் அரசனாக இருக்கும் துரியன் பழங்கள், பிறருக்கு நினைத்து பார்க்கமுடியாத அளவுக்கு அதிக துர்நாற்றத்தை வெளிப்படுத்தும் பழமாக இருக்கிறது.

உலகின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் ஆசிய நாடுகளில் போட்டி மிக்க சந்தையை கொண்டுள்ள துரியன் பழங்கள், பொதுப் போக்குவரத்து, உணவகங்கள் மற்றும் சில நாடுகளில் விமானங்களில் எடுத்து செல்வதற்கும் தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.

சமீபத்தில் தாய்லாந்தில் நடைபெற்ற 'கிங் ஆஃப் துரியன் பெஸ்டிவல்' எனும் நிகழ்வின் ஒருபகுதியாக நடத்தப்பட்ட ஏலத்தில், மரத்திலிருந்து பறிக்கப்பட்டு ஒரே நாளான இந்த துரியன் பழம் இந்திய மதிப்பில் சுமார் 33 லட்சம் ரூபாய்க்கு விலைபோயுள்ளது.

உலகக்கோப்பை 2019 : ஆஸ்திரேலியாவை இந்தியா வென்றது

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் மூன்றாமிடம் பிடித்தது இந்தியா.

புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா இருவரும் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ரோகித் ஷர்மா, கோலி அரை சதம் அடித்தனர், ஷிகர் தவான் சதமடித்தார். ஹர்டிக் பாண்ட்யா 48 ரன்கள் எடுத்தார்.

அதிமுக தேர்தலுக்கு பின்னான உட்கட்சி குழப்பமும், அன்பான அறிக்கையும்

கடந்த இரண்டு நாட்களாக மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மூத்த கட்சி உறுப்பினரான ராஜன் செல்லப்பா கட்சியில் ஒற்றை தலைமை தேவை என்றும் கட்சியில் மக்களவை தேர்தலில் அதிமுக தோற்றது குறித்து கட்சி கூட்டத்தை ஏன் நடத்தவில்லை என்று கேட்டும் ஊடகங்களில் பேசி வருகிறார்.

ராஜன் செல்லப்பாவை தொடர்ந்து கட்சியில் உள்ள பிற மூத்த தலைவர்களும், அமைச்சர்களும் ராஜன் செல்லப்பாவின் கருத்துக்கு ஆதரவாகவும், அதனை மறுத்தும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர். இதனை அடுத்து, அதிமுகவின் அதிகாரப்பூர்வ அறிக்கையை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் வெளியிட்டுள்ளனர்.

புயல் வந்தாலும் அசராத வீடு

ஐம்பதுக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளையும், பல லட்சக்கணக்கான மரங்கள் மற்றும் வீடுகள் அழிவதற்கும் காரணமான கஜ புயல் தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை நம்மால் எளிதில் மறந்துவிட முடியாது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்கள் பலத்த சேதமடைந்தன.

இந்த நிலையில், கஜ புயலால் வீடுகளை இழந்த மக்களுக்கு குறைந்த செலவில் வீடுகள் கட்டித்தரும் திட்டத்தை உருவாக்கும் போட்டியை யூடியூப் சேனல் ஒன்று சில மாதங்களுக்கு முன்பு நடத்தியிருந்தது. இந்த போட்டியில் பங்கேற்ற பிறகு இதன்மூலம் கிடைத்த உந்து சக்தியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறைந்த செலவில் அதிக வீடுகளை கட்டித்தருவதை தனது இலக்காகக் கொண்டு செயலாற்றி வருகிறார் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மதன் ராஜ் என்ற இளைஞர்.

இலங்கையில் மோதி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கொடுத்த வாக்குறுதி என்ன?

இலங்கை மீதான பயங்கரவாதத் தாக்குதலினால் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமைக்கு மத்தியில் தனது நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டது, இலங்கையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதாக உலகிற்கு வழங்கிய நற்செய்தி என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் நரேந்திர மோதியிடம் தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமராக இரண்டாவது முறையாக பதவி பிரமாணம் செய்து கொண்ட நரேந்திர மோதி, தனது முதலாவது வெளிநாட்டு விஜயமாக மாலத்தீவிற்கு நேற்று முன்தினம் சென்று, அடுத்த கட்டமாக நேற்று இலங்கைக்கு சென்றிருந்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :