You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நியூசிலாந்து மசூதிகளில் 49 பேர் கொலை - ஆஸ்திரேலிய நபர் நீதிமன்றத்தில் ஆஜர்
நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு மசூதிகளில் நேற்று (வெள்ளிக்கிழமை) துப்பாக்கித்தாரிகள் நடத்திய தாக்குதலில் 49 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரென்டன் டர்ரன்ட் என்னும் 28 வயதான ஆஸ்திரேலியர் ஒருவர் இன்று (சனிக்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அதையடுத்து, பிரென்டனை காவலில் வைப்பதற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஏப்ரல் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இவர் மீது மற்ற குற்றச்சாட்டுகள் விரைவில் பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பேசிய நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன், துப்பாக்கி உரிமத்தை முன்னரே பெற்றிருந்த பிரென்டன் கைதுசெய்யப்பட்டபோது ஐந்து துப்பாக்கிகளை வைத்திருந்ததாகவும், "நியூசிலாந்தின் துப்பாக்கி பயன்பாட்டு விதிமுறைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது" என்றும் தெரிவித்துள்ளார்.
இவரை தவிர்த்து இன்னும் இரண்டு பேர் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், அவர்கள் இதற்கு முன்னர் குற்றம் புரிந்ததற்காக பதிவு ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலானவர்கள் குடியேறிகள்
இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து நியூசிலாந்துக்கு குடியேறியவர்கள் என்று தெரியவந்துள்ளது.
இதுவரை உயிரிழந்தவர்களில் முதலாவதாக அடையாளம் காணப்பட்டவர் 1980களில் ஆப்கானிஸ்தானிலிருந்து நியூசிலாந்துக்கு குடியேறிய 71 வயதான தாவூத் நபி என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஏனையவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் இரண்டு மற்றும் 13 வயதான இரண்டு சிறுவர்கள் உள்பட மொத்தம் 48 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் சிக்கியவர்களின் விவரங்கள் வெளிவரத் துவங்கியுள்ளன. நியூஸிலாந்திலுள்ள வங்கதேச அதிகாரிகள் தமது நாட்டைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.
இந்திய தூதரகமும் தமது நாட்டைச் சேர்ந்த சில உயிரிழந்துள்ளதாக நம்புவதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்தியர்களில் எத்தனை பேர் இறந்தனர் என்ற விவரங்கள் உறுதி செய்யப்படவில்லை.
பிபிசியிடம் பேசிய நியூசிலாந்தின் இந்திய தூதர் சஞ்சீவ் கோலி கூறுகையில், 'ஆரம்பகட்ட தகவல்களில்படி, இந்த துப்பாக்கிசூடு சம்பவத்தில் இரண்டு இந்தியர்களும், இந்திய வம்சாவளியை சேந்த இருவரும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது' என்று தெரிவித்தார்.
ஆனால், இந்த தகவல் அதிகாரபூர்வமானது இல்லை என்றும், இதனை இன்னமும் நியூசிலாந்து அரசு உறுதி செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த தாக்குதலில் காயமடைந்த தனது சகோதரர் அஹ்மத் ஜஹாங்கீரை உடனடியாக இந்தியாவுக்கு கொண்டுவருவதற்கு இந்திய அரசு உதவ வேண்டுமென்று கோரிக்கை விடுக்கிறார் ஹைதராபாத்தில் வசிக்கும் குர்ஷித் ஜஹாங்கீர்.
"எனது சகோதரர் கடந்த 15 ஆண்டுகளாக குடும்பத்துடன் நியூசிலாந்தில் வசித்து வருகிறார். உலகிலேயே மிகவும் பாதுகாப்பான நாடாக நாங்கள் கருதிய நியூசிலாந்தில் நடந்துள்ள இந்த தாக்குதலை எங்களால் நம்ப முடியவில்லை. இந்த தாக்குதலில் படுகாயமடைந்துள்ள என்னுடைய சகோதரருக்கு சிறியளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது."
"மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் தவித்துக்கொண்டிருக்கும் எனது சகோதரரை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுகிறேன்" என்று குர்ஷித் ஜஹாங்கீர் பிபிசியிடம் கூறினார்.
என்ன நடந்தது?
முன்னதாக, கிரைஸ்ட்சர்ச்சில் உள்ள அல்-நூர் என்னும் மசூதியில் தொழுகை நடத்துபவர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடந்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் இந்திய நேரப்படி நேற்று (வெள்ளிக்கிழமை) காலை செய்தி வெளியிட்டிருந்தன.
தாக்குதல் நடப்பது குறித்து உறுதிசெய்யப்பட்ட 15 நிமிடங்களில் அந்நகரம் முழுவதுமுள்ள பள்ளிகள், கல்லூரிகள், அலுவவலகங்கள் என அனைத்தும் மாணவர்கள், ஊழியர்களை வெளியேற்றாமல் மூடப்பட்டன. மேலும், இரண்டு மசூதிகளுக்கு அருகிலுள்ள வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டுகள் காவல்துறையினரால் செயலிழக்க வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கிரைஸ்ட்சர்ச்சின் ஹாகிலே பூங்காவுக்கு அருகிலுள்ள மற்றொரு மசூதியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டிலிருந்து, நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணியினர் பத்திரமாக வெளியேறிவிட்டாக பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
"நாங்கள் அனைவரும் துப்பாக்கித்தாரிகளிடமிருந்து காப்பாற்றப்பட்டுவிட்டோம். இந்த பயமுறுத்தும் அனுபவத்திலிருந்து மீண்டு வருவதற்கு எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்" என்று வங்கதேச கிரிக்கெட் அணியின் வீரர் தமீம் இக்பால் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
நியூசிலாந்தில் துப்பாக்கி உரிமம் பெறுவது எளிதானதா?
நியூசிலாந்தில் 16 வயதான ஒருவர் சாதாரண துப்பாக்கிக்கும், 18 வயதானவர் பகுதியளவு தானியங்கி துப்பாக்கிக்கும் உரிமத்தை பெற முடியும்.
எல்லா துப்பாக்கி உரிமையாளர்களும் உரிமம் பெற்றிருக்க வேண்டும், ஆனால் பெரும்பாலான தனிப்பட்ட ஆயுதங்கள் பதிவு செய்யப்பட வேண்டியதில்லை. இதுபோன்ற விதிமுறைகளை கொண்ட உலகின் ஒரு சில நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று.
ஒருவருக்கு துப்பாக்கி உரிமம் கொடுக்கப்படுவதற்கு முன்பு, அவரது குற்றப் பின்னணி, உடல் மற்றும் மனநிலை குறித்து பரிசோதனை செய்யப்படும்.
தக்க பரிசோதனைகளுக்கு பிறகு, துப்பாக்கி உரிமம் வழங்கப்படும். அதைத்தொடர்ந்து ஒருவர் எத்தனை துப்பாக்கிகளை வேண்டுமானாலும் வாங்கி கொள்ளலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்