You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நியூசிலாந்து மசூதி தாக்குதலில் 49 பேர் பலி: உயிரிழந்தவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள்?
நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு மசூதிகளில் துப்பாக்கித்தாரிகள் நடத்திய தாக்குதலில் 49 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
28 வயதான நபர் ஒருவர் கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ளார் அவர் சனிக்கிழமையன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். மேலும் இரண்டு பேர் மீது விசாரணை நடந்து வருகிறது.
கொல்லப்பட்டவர்களில் பலர் குடியேறிகள். அதில் குழந்தைகளும் உண்டு. இருபதுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் கடுமையான காயங்களோடு உயிருக்கு போராடிவருகின்றனர்.
இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் சிக்கியவர்களின் விவரங்கள் வெளிவரத் துவங்கியுள்ளன. நியூஸிலாந்திலுள்ள வங்கதேச அதிகாரிகள் தமது நாட்டைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.
இந்திய தூதரகமும் தமது நாட்டைச் சேர்ந்த சில உயிரிழந்துள்ளதாக நம்புவதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்தியர்களில் எத்தனை பேர் இறந்தனர் என்ற விவரங்கள் உறுதி செய்யப்படவில்லை.
பிபிசியிடம் பேசிய நியூசிலாந்தின் இந்திய தூதர் சஞ்சீவ் கோலி கூறுகையில், 'ஆரம்பகட்ட தகவல்களில்படி, இந்த துப்பாக்கிசூடு சம்பவத்தில் இரண்டு இந்தியர்களும், இந்திய வம்சாவளியை சேந்த இருவரும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது' என்று தெரிவித்தார்.
ஆனால், இந்த தகவல் அதிகாரபூர்வமானது இல்லை என்றும், இதனை இன்னமும் நியூசிலாந்து அரசு உறுதி செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
நியூசிலாந்தில் இன்று நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் தொடர்புடைய நபராக ப்ரெண்டன் டெரன்ட் எனும் ஒரு ஆஸ்திரேலியர் அதிகாரப்பூர்வமற்ற முறையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தன்னுடைய நாட்டைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார். கைது செய்யப்பட்ட நபரை கடும் போக்கு வலது சாரி, வன்முறை எண்ணம் கொண்ட பயங்கரவாதி என ஆஸ்திரேலிய பிரதமர் விவரிக்கிறார். முன்னதாக அந்த சந்தேக நபர் ஆன்லைனில் குடியேற்றத்துக்கு எதிரான எண்ணம் கொண்ட ஒரு பிரசாரத்தை பதிவு செய்திருக்கிறார்.
அவர் துப்பாக்கிச்சூட்டு தாக்குதலை 17 நிமிடங்களை நேரடியாக ஒளிபரப்பியதாக கூறப்படுகிறது. இந்த காணொளியை சமூக வலைதள நிறுவனங்கள் உடனடியாக நீக்காததால் நியூசிலாந்தில் விமர்சனம் எழுந்தது. முன்னதாக அக்காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கிரைஸ்ட்சர்ச்சில் உள்ள அல் நூர் என்னும் மசூதியில் துப்பாக்கிச்சூடு நடந்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் இன்று காலை செய்தி வெளியிட்டிருந்தன.
இந்த தாக்குதல் இரண்டு மசூதிகளில் நடைபெற்றது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு காவல்துறையினர் பொது மக்களை வலியுறுத்தியுள்ளனர்.
"இது நியூசிலாந்தின் கருப்பு தினங்களில் ஒன்றாக இருக்கும்" என்று அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார்.
இன்னும் எத்தனை துப்பாக்கித்தாரிகள் உள்ளனர் என்பது இறுதி செய்யப்படவில்லை என்றாலும், துப்பாக்கித்தாரிகளில் ஒருவர் ஆஸ்திரேலியர் என்பதும், அவர் குடியேற்றத்துக்கு எதிரான கொள்கையை கொண்டவர் என்றும் கூறப்படுகிறது.
மேலும், இந்த துப்பாக்கித்தாரி தாக்குதல் தொடுக்கும்போது எடுத்ததாக கூறப்படும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இந்நிலையில், இந்த உறுதிப்படுத்தப்படாத, கவலையேற்படுத்தக்கூடிய காணொளியை யாரும் பகிர வேண்டாமென்று அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.
கிரைஸ்ட்சர்ச்சில் உள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாக அந்நகர காவல்துறை ஆணையர் மைக் புஷ் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கித்தாரியிடமிருந்து தப்பிப்பதற்காக தாங்கள் அவ்விடத்தை விட்டு ஓடி வந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
"முதலில் நாங்கள் மின்சார ஷாக் என்று நினைத்தோம். பிறகு சூழ்நிலையை புரிந்து கொண்டு அனைவரும் அங்கிருந்து ஓடத்தொடங்கினோம்" என்று சம்பவ இடத்திலிருந்து தப்பித்த மோஹான் இப்ராஹிம் என்பவர் நியூசிலாந்து ஹெரால்டிடம் தெரிவித்துள்ளார்.
"என்னுடைய நண்பர்கள் இன்னமும் அங்குதான் உள்ளனர். கூட்ட நெரிசல் அதிகம் இருந்ததால் என் நண்பர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களுக்கு என்ன நேர்ந்திருக்கும் என்று பயமாக உள்ளது."
கிரைஸ்ட்சர்ச் நகரத்தின் மைய பகுதியில் அமைந்துள்ள இந்த மசூதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டிலிருந்து தப்பித்தவர்கள், நிகழ்விடத்தில் இறந்த உடல்களை பார்த்ததாக கூறினாலும், அது இன்னும் காவல்துறையினரால் உறுதிப்படுத்தப்படவில்லை.
துப்பாக்கிச்சூடு நடைபெற்று வரும் பகுதிக்கு அருகேயுள்ள கதீட்ரல் சதுக்கம் என்ற இடத்தில் பருவநிலை மாற்றம் குறித்த பேரணியை நடத்தி வந்த ஆயிரக்கணக்கான சிறுவர்களை காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
"கிரைஸ்ட்சர்ச்சில் நிலவி வரும் சூழ்நிலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு காவல்துறையினர் முழு வீச்சில் செயல்பட்டாலும், நிலைமை இன்னும் அபாயகரமானதாகவே உள்ளது" என்று அந்நகர காவல்துறை ஆணையர் மைக் புஷ் தெரிவித்துள்ளார்.
"மறு அறிவிப்பு வரும்வரை கிரைஸ்ட்சர்ச் நகரவாசிகள் தங்களது வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
கிரைஸ்ட்சர்ச்சின் ஹாகிலே பூங்காவுக்கு அருகிலுள்ள மற்றொரு மசூதியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டிலிருந்து, நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணியினர் பத்திரமாக வெளியேறிவிட்டாக பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
"நாங்கள் அனைவரும் துப்பாக்கித்தாரிகளிடமிருந்து காப்பாற்றப்பட்டுவிட்டோம். இந்த பயமுறுத்தும் அனுபவத்திலிருந்து மீண்டு வருவதற்கு எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்" என்று வங்கதேச கிரிக்கெட் அணியின் வீரர் தமீம் இக்பால் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்