You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மக்களைவை தேர்தல் 2019: இந்தியா முழுவதும் மின்மயமாக்கப்பட்டு விட்டதா? #RealityCheck
- எழுதியவர், ஷதாப் நஸ்மி
- பதவி, பிபிசி ரியாலிட்டி செக்
இந்திய மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதியில் இருந்து நடைபெற இருக்கிறது. இந்நிலையில், முக்கிய அரசியல் கட்சிகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார்களா என பிபிசியின் ரியாலிட்டி செக் தொடர் ஆய்வு செய்கிறது.
கடந்த ஆண்டு, தனது அரசின் மைல்கல் சாதனை ஒன்றினை பிரதமர் நரேந்திர மோதி கொண்டாடினார். அதாவது இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கும் இலக்கை அடைந்துவிட்டதாக அரசு கூறியது.
"நேற்று, நாங்கள் ஒரு முக்கிய பொறுப்பை நிறைவேற்றியிருக்கிறோம். இதனால் பல இந்தியர்களின் வாழ்க்கை மாறும்" என்று அப்போது பிரதமர் நரேந்திர மோதி ட்வீட் செய்திருந்தார்.
அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்க வேண்டும் என்பது மோதி அரசாங்கத்தின் முன்னுரிமை விஷயங்களில் ஒன்றாக இருந்தது.
நரேந்திர மோதியின் வாக்குறுதி என்னானது? முதலில் கிராமங்களில் இருந்து நம் ஆய்வை தொடங்குவோம்.
ஒரு கிராமத்தில் 10 சதவீத வீடுகள், பள்ளிகள், சுகாதார மையங்கள் ஆகியவற்றுக்கு மின்சாரம் வழங்கப்பட்டால் அக்கிராமத்தை முழுவதுமாக மின்சாரம் வழங்கப்பட்ட கிராமம் என்று அரசு கூறுகிறது.
2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் ஆறு லட்சம் கிராமங்கள் உள்ளன.
தற்போது அரசாங்கத்தின் கூற்றுப்படி அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டுவிட்டது.
எனினும், இதற்கான பெரும்பாலான வேலைகள் முந்தைய அரசாங்கங்களால் செய்யப்பட்டவையாகும்.
நரேந்திர மோதி பிரதமராக பதவி ஏற்கும்போதே இந்தியாவில் 96 சதவீத கிராமங்கள் மின்மயமாக்கப்பட்டன. குறிப்பாக சொல்லப்போனால், 18 ஆயிரம் கிராமங்கள் மட்டுமே மீதமிருந்தது.
இந்தியாவின் சாதனை உலக வங்கியால் புகழப்பட்டது.
சுமார் 85 சதவீத மக்களுக்கு மின்வசதி இருப்பதாக உலக வங்கி கணக்கிட்டது. இது அரசு கணக்கிட்ட 82 சதவீதத்தைவிட அதிகம்.
பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, உலகில் மின் பற்றாக்குறை மிகுந்த நாடாக இந்தியா இருந்தது - 270 மில்லியன் மக்களுக்கு மினவசதி இல்லாமல் இருந்தது.
வீடுகளின் நிலை என்ன?
2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், மோதி இது தொடர்பாக ஒரு திட்டத்தை தொடங்கி வைத்தார். டிசம்பர் 2018க்குள் அனைத்து இந்தியக் குடும்பங்களுக்கு மின்வசதி ஏற்படுத்தித் தருவதே அதன் இலக்காக இருந்தது. இதில் இந்திய கிராமங்களில் வசிக்கும் நான்கு கோடி குடும்பங்களும் அடங்கும்.
அரசாங்கத்தின் தரவுகள் படி, இந்தியாவின் அனைத்து குடும்பங்களுக்கும் மின்வசதி இருக்கிறது. கடந்த மார்ச் மாதம் வரை வெறும் 19,573 வீடுகள் மட்டுமே விடுபட்டிருக்கின்றன.
முந்தைய அரசாங்கத்தை விட, தற்போதைய அரசாங்கம் கிராமங்களை மின்மயமாக்கிய விகிதம் வேகமாக இருந்ததாக கூறுகிறது.
எனினும் மத்திய மின்சார ஆணையத்தின் தரவுகள்படி, முந்தைய காங்கிரஸ் அரசாங்கத்தில் ஆண்டுக்கு சராசரியாக 9,000 கிராமங்கள் மின்மயமாக்கப்பட்டன. மோதி அரசாங்கத்தின் கீழ் சராசரியாக ஆண்டுக்கு 4000 கிராமங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளன.
மின்தடை சிக்கல்கள்
இந்திய கிராமங்களுக்கு மின்வசதி ஏற்பாடு செய்து தருவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் உள்ளன. ஆனால், மின்தடை என்பது ஒரு முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. குறிப்பாக கிராமப்புறங்களில்.
இந்திய நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய அரசு, மொத்தமுள்ள 29 மாநிலங்களில், ஆறு மாநிலங்களில் மட்டும்தான் 24 மணி நேர தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது என்று கூறியது.
அரசாங்கத்தின் தரவுகள்படி, பாதிக்கும் குறைவான கிராமங்களில் நாள் ஒன்றுக்கு 12 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் வழங்கப்படுகிறது. மூன்றில் ஒரு பங்கு கிராமங்களில் எட்டில் இருந்து 12 மணி நேரம் வரை மின்சாரம் இருக்கிறது.
வட கிழக்கு மாநிலங்கள்தான் மோசமான மின்வசதி உடைய மாநிலங்களாக இருக்கின்றன.
ஜார்கண்ட், மிசோரம் மற்றும் அருணாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு ஒரு நாளைக்கு ஒன்றிலிருந்து நான்கு மணி நேர மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்