You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்: உறுதிமொழியை நிறைவேற்றினாரா நரேந்திர மோதி? #BBCRealityCheck
- எழுதியவர், சரோஜ் சிங்
- பதவி, உண்மை பரிசோதிக்கும் குழு, பிபிசி
கூற்று: தற்போது மத்தியில் ஆட்சியிலுள்ள நரேந்திர மோதி தலைமையிலான பாஜக அரசாங்கம் வரும் 2022ஆம் ஆண்டுக்குள் நாட்டிலுள்ள அனைவருக்கும் சொந்த வீடு தருவதாக உறுதிமொழி அளித்திருந்தது.
அதாவது, 2019ஆம் ஆண்டுக்குள் நாட்டின் ஊரக பகுதிகளில் 10 மில்லியன் வீடுகளும், 2022ஆம் ஆண்டிற்குள் நாட்டின் நகர்ப்புறப் பகுதியில் 10 மில்லியன் வீடுகளும் கட்டித் தரப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
உண்மை: இந்தியாவின் நீண்டகால பிரச்சனைகளில் ஒன்றான வீடற்றவர்களின் பிரச்சனையை சமாளிக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இருந்தபோதிலும், அரசாங்கத்தின் கூற்றுப்படி அதிக அளவில் பணிகள் நிறைவடையவில்லை.
அதே வேளையில், காங்கிரஸ் தலைமையிலான முந்தைய அரசாங்கத்தை விட பாஜக அரசு விரைந்து செயல்படுவது தெரியவந்துள்ளது.
2015ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்ட 'அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் குறித்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, "நமது இலக்கை திட்டமிட்டபடி வரும் 2022ஆம் ஆண்டிற்குள் அடைவோம்" என்று தெரிவித்தார்.
2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளில் இந்தியாவிலுள்ள 120 கோடி மக்களில் 17.7 லட்சம் பேர் வீடின்றி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட தரவுகள் வெளியாகி எட்டாண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தற்போது இந்தியாவிலுள்ள வீடற்றவர்களின் எண்ணிக்கை குறித்து எவ்வித தரவும் இல்லை. வீடற்றவர்களின் எண்ணிக்கை குறித்த இந்த அதிகாரபூர்வ புள்ளிவிவரம் வீடற்றவர்களின் எண்ணிக்கையை மிகவும் குறைத்துக் காட்டுவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான மும்பையில், 57,416 பேர் வீடற்று உள்ளதாக அரசின் தரவுகள் தெரிவிக்கும் நிலையில், உண்மை நிலை அதைவிட நான்கு முதல் ஐந்து மடங்கு வரை இருக்கும் என்று அரசுசாரா அமைப்புகளின் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
எனவே, எத்தனை வீடுகள் கட்டப்பட்டால், நாட்டிலுள்ள அனைவருக்கும் வீட்டு வசதி கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்துவது கடினமாக உள்ளது.
மேலும், இந்த திட்டத்தின் வாயிலாக வீடற்றவர்கள் மட்டுமின்றி, மிகவும் குறைந்த/ தரமற்ற இருப்பிடத்தில் வசித்து வருபவர்களுக்கும் 1,30,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கழிவறை, மின்சாரம், எரிவாயு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கொண்ட குறிப்பிடத்தக்க தரம் கொண்ட வீட்டு வசதியை குடும்பங்கள் அடைவதை இந்த திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.
இதுவரை எத்தனை வீடுகள் கட்டப்பட்டுள்ளது?
இந்தியாவின் நகர்ப்புற பகுதிகளில் 10 மில்லியன் புதிய வீடுகளை கட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, இதுவரை 5.4 மில்லியன் வீடுகளை கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில், 2018ஆம் ஆண்டு டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 6.5 மில்லியன் வீடுகளை கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
2004 முதல் 2014ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசாங்கம் செயற்படுத்திய இதுபோன்ற திட்டத்தை விட, தற்போதைய பாஜக அரசாங்கத்தின் திட்டம் அதிகளவிலான பயனாளர்களை சென்றடைந்துள்ளது தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை, 6.5 மில்லியன் வீடுகளை கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், வெறும் 1.2 மில்லியன் வீடுகளுக்கே மக்கள் குடிபெயர்ந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் நகர்ப்புற பகுதிகளில் 10 மில்லியன் வீடுகளை கட்டும் இத்திட்டத்தில் வெற்றியடைவதற்கு, 2022ஆம் ஆண்டிற்குள் மத்திய அரசு 1,500 பில்லியன் ரூபாய் செலவிட வேண்டியிருக்கும் என்று கிரிஸில் என்னும் நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
இருந்தபோதிலும், அந்த மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த திட்ட மதிப்பீட்டில் இதுவரை 22 சதவீத நிதியே செலவிடப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தாதிருப்பது, நகர்ப்புற பகுதிகளை நிலவும் இடப்பற்றாற்குறை, விண்ணைத்தொடும் விலை போன்ற விடயங்கள் நகர்ப்புற பகுதிகளில் வீடுகளை கட்டுவதற்கு பெரும் தடையை உள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
"நகர்ப்புற பகுதிகளில் தகுந்த இடத்தை தெரிவு செய்வதில் ஏற்படும் பிரச்சனையின் காரணமாக, புறநகர் பகுதிகளை நோக்கி செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறோம்" என்று கியூர் (CURE) என்னும் அரசுசாரா அமைப்பின் இயக்குநரான ரேணு கோஸ்லா கூறுகிறார்.
"போக்குவரத்து வசதி குறைபாடு, வேலையிழப்பு போன்றவற்றின் காரணமாக மக்கள் புறநகர் பகுதிகளில் குடியேறுவதற்கு தயங்குகின்றனர்" என்று அவர் மேலும் கூறுகிறார்.
கிராமப்புற பகுதிகளின் நிலை
2016 முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், இந்தியாவின் கிராமப்புற பகுதிகளில் 10 மில்லியன் வீடுகளை கட்டுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, இந்தியாவின் கிராமப்புற பகுதிகளில் 10 மில்லியன் வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு பயனாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக கூறினார்.
ஆனால், அதிகாரபூர்வ தரவுகளுடன் ஒப்பிட்டு பார்கும்போது, மோதியின் கூற்று தவறானதாக உள்ளது.
அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை கிராமப்புற பகுதிகளில் 7,182,758 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதாவது, திட்டமிட்டபடி பாஜக அரசின் செயல்பாடு இல்லை என்பதையே இது காட்டுகிறது.
அதே வேளையில், காங்கிரஸ் தலைமையிலான 2004 முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான அரசாங்கத்தை விட பாஜக அரசின் செயல்பாடு வேகமாக உள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த 2014ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட தரவுகளின்படி பார்க்கும்போது, அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் ஆண்டிற்கு தலா 1.65 மில்லியன் வீடுகளை கட்டியதாக கூறும் நிலையில், பாஜக அரசு அதை விட அதிகமாக, அதாவது ஆண்டிற்கு 1.86 மில்லியன் என்ற கணக்கில் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்