மக்களவை தேர்தல் 2019: அரசு சொன்னபடி 100 ஸ்மார்ட் நகரங்கள் உருவாகிவிட்டனவா?

    • எழுதியவர், வினித் கரே
    • பதவி, உண்மை பரிசோதிக்கும் குழு, பிபிசி

கூற்று: ஐந்து வருடங்களில் 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்குவோம் என 2015ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் உறுதியளித்தது.

உண்மை: ஒரே நேரத்தில் அனைத்து நகரங்களும் ஒன்றாக தேர்வு செய்யப்படவில்லை என்பதால் இந்த திட்டத்துக்கான காலம் தாமதப்படுத்தப்பட்டது. மேலும், இதுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் சிறிய பங்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஏப்ரல் 11ஆம் தேதி இந்தியாவில் மக்களவை தேர்தல் தொடங்கவுள்ளதால் பிபிசி உண்மை பரிசோதிக்கும் குழு முக்கிய அரசியல் கட்சிகள் கொடுத்த வாக்குறுதிகளை ஆராய்ந்து உண்மை நிலையை விளக்குகிறது.

2014ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது ஸ்மார்ட் நகரங்களில் முதலீடு செய்யப்படும் என அரசாங்கம் வாக்குறுதி அளித்தது. அதன்பின் அடுத்த ஆண்டு அது தொடங்கப்பட்டது.

ஆனால் இது விளம்பரத்துக்காக செய்யக்கூடிய ஒன்று என எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்தனர்.

இந்திய நகரங்களின் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வருகிறது. அடுத்த தசாப்தத்தில் அது 600 மில்லியனை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் நகரங்கள் மோசமான உள்கட்டமைப்பாலும், போதிய அளவு பொதுச் சேவைகள் இல்லாத நிலையாலும் தத்தளித்து வருகின்றன.

ஸ்மார்ட் நகரம் என்றால் என்ன?

ஸ்மார்ட் நகரம் என்றால் என்ன என்பது குறித்த தெளிவான விளக்கத்தை அரசு இதுவரை வழங்கவில்லை.

ஆனால் இந்த திட்டத்தின்படி சமீபத்திய தொழில்நுட்ப வளர்ச்சிகளை கொண்டு 100 தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களின் தரத்தை மேம்படுத்துவதற்காக நிதி ஒதுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.

தேந்தெடுக்கப்பட்ட நகரங்களில் ஆற்றல் மேம்பட்ட கட்டடங்கள் மட்டுமின்றி, நீர் மேலாண்மை, கழிவு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றுக்கு தொழில்நுட்பத்தின் உதவியோடு தீர்வு காணப்படும்.

இந்த திட்டத்திற்காக முதலில் நாடுமுழுவதும் 100 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதற்கான கடைசி தேர்வு 2018ஆம் ஆண்டு நடைபெற்றது.

இதனால் இந்த திட்டம் 2023ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு நகரத்துக்கும் ஆண்டு தோறும் மத்திய அரசின் உதவியும், மாநிலம் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் உதவியும் கிட்டும்.

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டதா?

இந்த அறிக்கை அதற்கு மேல் எந்த விவரங்களையும் அளிக்கவில்லை.

இந்த திட்டத்துக்கு வழங்கப்படும் நிதி பெரும் அளவு குறைக்கப்பட்டது என அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

2015 ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டிற்குள் சுமார் 166பில்லியன் ரூபாய் இந்த திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி எவ்வாறு செலவழிக்கப்படுகிறது என்பது குறித்தும் கவலைகள் எழுந்தன.

இந்த திட்டத்தின்கீழ் நகரம் முழுவதையும் மேம்படுத்துவதை விடுத்து, நகரத்துக்குள் உள்ள பகுதிகளை மேம்படுத்த 80%நிதி செலவழிக்கப்படுகிறது.

ஹவுசிங் மற்றும் லேண்ட் ரைட்ஸ் நெட்வொர்க் இது `ஸ்மார்ட் நகரம் இல்லை ஸ்மார்ட் என்க்லேவ்` அதாவது நகரமல்ல ஒரு சிறிய வசிப்பிடம் என்று தெரிவித்துள்ளது

நகரப்பகுதிகளில் உள்ள சிறிய தொகுதிகளை மேம்படுத்துவதை விடுத்து இந்த திட்டம் புதிய இடங்களை குறி வைப்பதாக சிலர் தெரிவிக்கின்றனர்.

"இந்த திட்டத்தை செயல்படுத்தும் முகமைகள் ஒருங்கிணைந்து செயல்படவில்லை என்பதால் இந்த திட்டத்தின் பலன்களை மக்களால் உணரமுடியவில்லை" என நாடாளுமன்ற கமிட்டியின் அறிக்கை தெரிவிக்கிறது.

மொத்த நகரத்தையும் மேம்படுத்துவது எப்படி என்று திட்டமிடுவதை தவிர்த்து சைகிள் வழங்குவது, பூங்கா கட்டுவது போன்ற நடவடிக்கைகள் பலனிளிக்காது என்று தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே உள்ள உள்ளாட்சி தொகுதிகளை மேம்படுத்த பயிற்சிகள் வழங்கப்பட்டன என அரசாங்கம் தெரிவிக்கிறது. ஆனால், அது எந்த அளவு வெற்றி பெற்றுள்ளது என்பது தெரியவில்லை.

’வேகமாக நடைபெறுகிறது’

2017ஆண்டு தொடங்கி 479% வேகமாக இந்த திட்டம் முடிக்கப்பட்டுள்ளது என டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் அரசு தெரிவித்தது

இந்த திட்டத்தின்கீழ், 13 ஒருங்கிணைந்த மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் நடைமுறையில் ஏற்கனவே உள்ளன. டிசம்பர் 2019ஆம் அண்டிற்குள் 50 நகரங்களாவது முழுமை அடைந்தால், உலகிலேயே வேகமாக செயல்படுத்தப்பட்ட திட்டம் இதுவாக தான் இருக்கும் என வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பிபிசியிடம் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :