You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புவி வெப்பமயமாதல்: பூமியைக் காக்கப் போராட்டம் நடத்திய பள்ளி மாணவர்கள் மற்றும் பிற செய்திகள்
உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் பருவநிலை மாற்றத்தைத் தடுக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, நேற்று ஒருநாள் தங்கள் வகுப்புகளைப் புறக்கணித்து அடையாளப் போராட்டம் நடத்தினர்.
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளின் பல்வேறு பகுதிகளில் இருந்த மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர்.
சமூக வலைத்தளங்கள் மூலம் கடந்த சில மாதங்களாகவே இந்தப் போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.
சுவீடனைச் சேர்ந்த பள்ளி மாணவி கிரேட்டா தன்பர்க், தங்கள் நாட்டின் நாடாளுமன்றம் முன்பு வாரம் தோறும் இதற்காகப் போராட்டம் நடத்தி வருகிறார்.
கடந்த வியாழன்று, இந்த ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசுக்கு அவர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
2017இல் கையெழுத்திடப்பட்ட பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில், தொழில் வளர்ச்சி தொடங்கிய காலகட்டத்தில் நிலவிய வெப்பநிலையைவிட இரண்டு டிகிரி செல்ஸியஸ் (2.0C) வெப்பத்துக்கு மிகாமல், புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த 200க்கும் மேலான உலக நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.
இந்த இலக்கை அடைய கடுமையான முயற்சிகள் தேவை என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
நியூசிலாந்து மசூதி தாக்குதல்
நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு மசூதிகளில் துப்பாக்கித்தாரிகள் நடத்திய தாக்குதலில் 49 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கொல்லப்பட்டவர்களில் பலர் குடியேறிகள். அதில் குழந்தைகளும் உண்டு. இருபதுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் கடுமையான காயங்களோடு உயிருக்கு போராடிவருகின்றனர்.
விரிவாகப் படிக்க - நியூசிலாந்து மசூதி தாக்குதலில் 49 பேர் பலி: உயிரிழந்தவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள்?
பொள்ளாச்சி மனித சங்கிலி போராட்டம்
''பொள்ளாச்சியில் பிறந்து வளர்ந்த ஒரு திருநங்கையாக கூறுகிறேன். இது போல ஒரு அவலம் இங்கு நடைபெறும் என்று நான் நினைத்து பார்த்ததில்லை'' என்று தனது ஆதங்கத்தை திருநங்கை செயற்பாட்டாளரான கல்கி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
இதனிடையே, இந்த வழக்கில் பிரதானமாக குற்றம்சாட்டப்பட்ட திருநாவுக்கரசை 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ராகுல் காந்தியின் நிகழ்ச்சி - அனுமதியளிக்கப்பட்டது ஏன்?
சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மாணவிகளுடன் கலந்துரையாடல் நடத்திய நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது ஏன் என கல்லூரி கல்வி இணை இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சி இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மார்ச் 13ஆம் தேதியன்று சென்னை வந்தபோது அங்குள்ள பிரபல மகளிர் கல்லூரியான ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். சுமார் 3,000 கல்லூரி மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
விரிவாகப் படிக்க - ராகுல் காந்தியின் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு கல்லூரியில் அனுமதியளிக்கப்பட்டது ஏன்?
200 தீவிரவாதிகள் உயிரிழந்ததை பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதா?
பாலகோட்டில் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதியன்று இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் 200 தீவிரவாதிகள் உயிரிழந்ததை பாகிஸ்தான் கர்னல் ஒப்புக் கொண்டதை போன்ற காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
புல்வாமா தாக்குதலில் குறைந்தது 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.
ஆனால், இத்தாக்குதல் குறித்து இரு நாடுகளும் இரு வேறு கருத்துகளை வெளியிட்டன. இத்தாக்குதலில் யாரும் உயிரிழக்கவில்லை என்று பாகிஸ்தான் கூறி வரும் நிலையில், இந்திய அமைச்சர்கள் பலர் இந்த தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறி வருகின்றனர்.
விரிவாகப் படிக்க - பாலகோட் தாக்குதலில் 200 தீவிரவாதிகள் உயிரிழந்ததை பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்