You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ராகுல் காந்தியின் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு கல்லூரியில் அனுமதியளிக்கப்பட்டது ஏன்?
சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மாணவிகளுடன் கலந்துரையாடல் நடத்திய நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது ஏன் என கல்லூரி கல்வி இணை இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சி இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மார்ச் 13ஆம் தேதியன்று சென்னை வந்தபோது அங்குள்ள பிரபல மகளிர் கல்லூரியான ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். சுமார் 3,000 கல்லூரி மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இதில் மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதிலளித்தார். ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ராகுல் காந்தி "கல்லூரி மாணவிகளிடம் எதிர்மறை அரசியலைக் கொண்டுசெல்கிறார்" என்று கூறினார். கல்லூரியை அரசியல் களமாக மாற்றியிருப்பதாகவும் நரேந்திர மோதி குறித்து மாணவர்கள் மத்தியில் தவறாக சித்தரித்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் அடுத்த நாளே சென்னை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநருக்கு கல்லூரிக் கல்வி இயக்குநர் சாருமதி விளக்கம் கேட்டு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த நோட்டீஸில், "சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் மார்ச் 13ஆம் தேதி நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்றதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. 2019ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், நடத்தை விதிகள் அமலில் உள்ள சூழலில் எவ்வாறு இந்த நிகழ்வுக்கு அனுமதி வழங்கப்பட்டது என்ற விவரத்தினை உடனடியாக ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நோட்டீஸிற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி விடுத்திருக்கும் அறிக்கையில், "ராகுல் காந்தியை அழைப்பது என்ற முடிவு ஒரு சில மாதங்களுக்கு முன்பே கல்லூரி மாணவிகள் சங்கம் எடுத்ததாகும்.
அந்த அடிப்படையில் அவர் சென்னை வருகிறபோது அந்த நிகழ்ச்சி நடத்தப்படும் என்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதன்படி கடந்த 13 ஆம் தேதி இந்த நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் அழைக்காமல் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில்தான் அழைத்தனர். இது தேர்தல் நடத்தை விதிமுறைளை மீறிய செயலா என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் அன்று மாலையே கேட்கப்பட்டது.
அதற்கு அவர், 'இதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டது. இது போன்ற நிகழ்ச்சிகளில் ராகுல் காந்தி கலந்து கொண்டதில் தேர்தல் நடத்தை விதிமீறல் இல்லை, முன் அனுமதி பெற்று நடத்துவதில் எந்த தவறும் இல்லை" என்று தெளிவாக கூறியிருக்கிறார்." என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரியே இதில் தேர்தல் நடத்தை விதிமீறல் இல்லை எனக் கூறிவிட்ட பிறகு, கல்லூரி கல்வி இயக்குநர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாகக் கூற என்ன உரிமை இருக்கிறது எனறு கேள்வியெழுப்பியிருக்கும் கே.எஸ். அழகிரி, கல்லூரி கல்வி இயக்குநர் அ.தி.மு.க. அரசின் கைப்பாவையாக செயல்பட்டு இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைக்கு துணை போனால் அதற்குரிய விளைவுகளை எதிர்காலத்தில் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் நடக்கவுள்ளன. இந்த அறிவிப்பு வெளியான மார்ச் 10ஆம் தேதி முதல் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்தன. தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ஆம் தேதி வாக்குப் பதிவு நடக்கவிருக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்