பாலகோட் தாக்குதலையடுத்து காஷ்மீரின் கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டு பகுதியில் இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், NurPhoto
பாலகோட் தாக்குதலையடுத்து காஷ்மீரின் கட்டுப்பட்டு எல்லைக்கோட்டு பகுதியில் இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம்
கட்டுப்பாட்டு எல்லை கோடு பகுதியில் சண்டை நிறுத்தத்தை மீறி துப்பாக்கிச் சூடு மூலம் பாகிஸ்தான் சண்டையை தூண்டியது என இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறியதாக ராய்ட்டர்ஸ் முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
பயங்கரவாத முகாம்களை அழிப்பதற்காக இந்திய விமான படை தாக்குதல் நடத்திய பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் படை வீரர்கள் காஷ்மீரின் சர்ச்சைக்குரிய பிராந்தியத்தின் எல்லையில் துப்பாக்கிச்சூடு சண்டையில் ஈடுபட்டதாக ராய்ட்டர்ஸ் முகமை கூறுகிறது.
காஷ்மீரின் கட்டுப்பாட்டு எல்லை கோடு பகுதியில் இதனால் பதற்றம் அதிகரித்து வருகிறது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
கிம் ஜாங் உன் உடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று சந்திப்பு

பட மூலாதாரம், Reuters
வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையிலான இரண்டாவது உச்சிமாநாடு இன்று மற்றும் நாளை (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது.
இந்த சந்திப்பில் பங்கேற்பதற்காக வியட்நாமுக்கு வருகை தந்துள்ளார் அதிபர் டிரம்ப். முன்னதாக வடகொரிய தலைவர் வியட்நாம் தலைநகருக்கு ரயில் மற்றும் கார் வழியாக வந்து சேர்ந்தார்.
கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற மண்டலமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து இரு தலைவர்களும் கலந்தாலோசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
செவ்வாய்க்கிழமையன்று வியட்நாமின் டோங் டாங் எல்லை நிலையத்துக்கு ரயில் மூலம் வந்த கிம் ஜாங் உன்னுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

பட மூலாதாரம், FACEBOOK SEARCH
தவறான காணொளியை ஒளிபரப்பும் இந்திய ஊடகங்கள்
பாகிஸ்தான் மீது இந்தியா வான் தாக்குதல் நடத்துவது போல ஒரு காணொளி வைரலாக பரவி வருகிறது. பெரும்பாலான தொலைக்காட்சி ஊடகங்களும் அதனை ஒளிப்பரப்பின, சமூக ஊடக பயனர்களும் அதனை பகிர்ந்து வருகின்றனர்.
அந்த காணொளியில், இருளில் போர் விமானம் பறப்பது போலவும், நெருப்பை உமிழ்வது போலவும் காட்சிகள் உள்ளன. அந்த காணொளி குறித்து நாங்கள் ஆய்வொன்றை மேற்கொண்டோம்.
எங்கள் ஆய்வில், இந்த காணொளி செவ்வாய்க்கிழமைக்கு முன்பே எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது. அதாவது, பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாமை குறி வைத்து செவ்வாய்க்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தியதாக இந்தியா குறிப்பிடும் சம்பவத்தின்போது அந்தக் காணொளி எடுக்கப்படவில்லை.
"#Surgicalstrike2, #IndianAirForce and #Balakot" ஆகிய ஹாஷ்டாகுகள் டிவிட்டரில் டிரெண்ட் ஆகின.
இந்த காணொளி இந்த ஹாஷ்டாக்களுடன் சமூக ஊடகத்தில் பகிரப்பட்டது. தொலைக்காட்சிகளும் இதனை ஒளிப்பரப்பின.
ஆனால், இதில் விந்தை என்னவென்றால் இதே காட்சி 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டுள்ளது.

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் குடும்பம் பாலகோட் தாக்குதலுக்கு வரவேற்பு
பாலகோட் விமானத் தாக்குதல் பற்றி புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரி பாதுகாப்பு படை வீரர் சுப்ரமணியனின் மனைவி மற்றும் உறவினர்கள் பிபிசி தமிழிடம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
"புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்பு படையினர் தியாகத்திற்கு கிடைத்த பரிசு" என்றும், "இந்திய விமானபடை வீரர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்" என்றும் தெரிவித்தார் சுப்பிரமணியனின் மனைவி கிருஷ்ணவேணி.
"தொடர்ச்சியாக இது போன்ற தாக்குதல் நடத்தி தீவிரவாதத்தை இந்திய முழுவதும் ஒழிக்க வேண்டும். எதிர்காலத்தில் தீவிரவாதிகளால் எனது கணவர் போன்று எந்தவொரு இந்திய வீரரும் மரணமடைய கூடாது" என விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
''காத்திருங்கள். எங்கள் பதிலடி வித்தியாசமாக இருக்கும்'' - எச்சரிக்கும் பாகிஸ்தான்.
"எங்கள் பதிலடி வித்தியாசமாக இருக்கும். காத்திருங்கள்" என பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர் இந்தியாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாமை குறி வைத்து செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்தியா தாக்குதல் நடத்தியதாக இந்திய வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே தெரிவித்தார்.
இதனை அடுத்து, பாகிஸ்தான் பாதுகாப்பு படைகளின் மக்கள் தொடர்பு (ஐ.எஸ்.பி.ஆர்) இயக்குநர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபார் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார்.
அதில் பேசிய அவர், "நாங்கள் உங்களை (இந்தியா) திகைப்புக்கு உள்ளாக்குவோம். எங்கள் பதிலடிக்கு காத்திருங்கள். நாங்கள் ஆச்சரியப்படவில்லை. எங்கள் பதிலடி வேறு விதமாக இருக்கும். அதை நீங்களே பார்க்கப் போகிறீர்கள். ஆனால், எங்களுக்கு அமைதியின் மீது நம்பிக்கை உள்ளது" என்று கூறியுள்ளார்.
"ஆனால், பாகிஸ்தான் இந்தத் தாக்குதலால் திகைத்துப் போய்விடவில்லை. தயாராகவே இருந்தோம். அதற்கு சரியாக பதிலடியும் கொடுத்தோம்" என்று அவர் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












