சாண்ட்விச் திருடியதால் பதவியை இழந்த நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பிற செய்திகள்

சாண்ட்விச் திருடியதால் பதவியை இழந்த நாடாளுமன்ற உறுப்பினர்

பட மூலாதாரம், Getty Images

ஸ்லோவேனியா நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், பல்பொருள் அங்காடி ஒன்றில் சாண்ட்விச் திருடியதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து பதவி விலகியுள்ளார்.

ஸ்லோவேனியாவின் லியூப்லியானா என்ற பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு சாண்ட்விச் வாங்க சென்றதாகவும், அங்கிருந்த ஊழியர்கள் தன்னை கண்டுகொள்ளாததால் ஒரு கட்டத்தில் எரிச்சலுற்றதுடன், அந்த கடையின் பாதுகாப்பை பரிசோதனை செய்யும் விதமாக அங்கிருந்து சாண்ட்விச்சை எடுத்துக்கொண்டு சென்றதாக உள்ளூர் ஊடகங்களிடம் பேசிய தர்ஜ் கிரஜ்க்சிச் என்ற அந்த நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

தர்ஜ் கிரஜ்க்சிச்

பட மூலாதாரம், MIHA KOKOLE/LMS

படக்குறிப்பு, தர்ஜ் கிரஜ்க்சிச்

"நான் குறைந்தது மூன்று நிமிடங்களாவது பணம் செலுத்துவதற்காக பொறுத்திருந்திருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ள 54 வயதாகும் தர்ஜ், தனது செயலுக்கு மன்னிப்புக் கோரியதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகியுள்ளார்.

இலங்கை

காஷ்மீர் குண்டுவெடிப்பு குறித்து முன் கூட்டியே எச்சரித்த உளவுத்துறை

காஷ்மீர் குண்டுவெடிப்பு குறித்து முன் கூட்டியே எச்சரித்த உளவுத்துறை

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், வியாழன்று, இந்தியாவின் மத்திய ரிசர்வ் காவல் படையினர் 34 பேர் கொடூரமாக கொல்லப்பட்ட தாக்குதல் சம்பவம் தடுக்கப்பட்டிருக்கலாம் என்று அம்மாநிலத்தின் உளவுத்துறை நம்புகிறது.

புல்வாமாவில் நடந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஜெய்ஷ்-ஈ-மொஹமத் அமைப்பு, பாதுகாப்பு படைகள் மீது, மிகப்பெரிய அளவில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிருப்பதாக ஏற்கனவே, பிப்ரவரி 12ம் தேதி நாடு முழுதும் உள்ள உளவு அமைப்புகளுக்கு தகவல் தெரிவித்ததாக மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இந்த எச்சரிக்கை குறித்து காவல்துறை தலைவர் தில்பாக் சிங், டெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடம் தெரிவித்ததாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை

பேரன்பு திரைப்படம்: பெண்களின் கருத்து என்ன?

பேரன்பு திரைப்படம்: பெண்களின் கருத்து என்ன?

பட மூலாதாரம், Facebook

ஓர் அப்பாவுக்கும், Spastic Cerebral Palsy எனப்படும் மூளை முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட சிறப்புக் குழந்தைக்கும் இடையிலான உறவினை பேசிய படமாக வெளிவந்துள்ள பேரன்பு திரைப்படம் குறித்து பெண்களிடம் பேசினோம்.

"ஒரு சினிமா ரசிகையாக பேரன்பு எனக்கு பிடித்திருக்கிறது. அதையும் தாண்டி பெண்ணியலாளராக இந்தப் படத்தினை அவசியமான ஒன்றாகப் பார்க்கிறேன். பெண்களின் பாலியல் தேவையை வெளிப்படையாக பேசுவதை இந்த சமூகம் ஏற்றுக்கொள்வதில்லை" என்று எழுத்தாளர் ஷாலின் மரியா லாரன்ஸ் கூறினார்.

மனநல ஆலோசகர் எழில், "உளவியல் ரீதியாக இத்திரைப்படத்தில் நிறைய தவறுகள் இருக்கின்றன. பேரன்பு, கொண்டாடப்பட வேண்டிய திரைப்படமும் அல்ல, பார்க்கவே கூடாது என்று புறக்கணிக்கவும் வேண்டியதில்லை. சராசரியாக இருக்கும் மற்ற பெண்கள் தனது பாலியல் தேவைகளை சரி செய்து கொள்ள முடியும், இந்தப் பெண்கள் என்ன செய்ய முடியும் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது" என்று தெரிவித்தார்.

இலங்கை

'விரைவில் நல்ல செய்தி வரும்' - கூட்டணி குறித்து பாஜக

'விரைவில் நல்ல செய்தி வரும்' - கூட்டணி குறித்து பாஜக

பட மூலாதாரம், Getty Images

பிப்ரவரி 10ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதியும், நேற்று (வியாழக்கிழமை) பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் தமிழகம் வந்த நிலையில், பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பியூஸ் கோயலும் நேற்று தமிழகம் வந்தார்.

இன்றைய பயணத்தின்போது, கூட்டணி குறித்து விரைவில் நல்ல செய்தி வரும் என்று அவர் தெரிவித்தார்.

நேற்று (வியாழக்கிழமை) தமிழகம் வந்த இன்னொரு மத்திய அமைச்சரான ரவிசங்கர் பிரசாத்தும், திமுக, காங்கிரஸ் மற்றும் அம்முக இல்லாத கூட்டணி குறித்து பேச்சு நடந்து வருவதாகவும், நல்ல செய்திக்கு காத்திருக்குமாறும் செய்தியாளர் சந்திப்பில் கூறியது குறிப்பிடத்தக்கது.

சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் விமான நிலையத்தில் பியூஸ் கோயல் ஆலோசனை நடத்தினார்.

இலங்கை

வாசலில் அமர்ந்திருந்த முதல்வர்; கண்டுகொள்ளாமல் காரில் சென்ற ஆளுநர்

கிரண் பேடி

பட மூலாதாரம், KIRAN BEDI

புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடியின் அலுவல்பூர்வ இல்லமான ராஜ் நிவாஸூக்கு முன்னால் நடத்தி வரும் தர்ணா போராட்டத்தை புதுச்சேரி அமைச்சரவை இரண்டாவது நாளாக தொடர்கிறது.

ஆனால், சென்னையில் நடைபெறும் மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக வெளியே வந்த கிரண் பேடி, முதல்வர் வி. நாராயணசாமியிடம் பேசாமல் காரில் சென்றுவிட்டார்.

கடந்த ஆண்டு ஆளுநருக்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேராடியதைப் போல, ராஜ் நிவாஸூக்கு முன்னாலுள்ள சாலையில் முழு அமைச்சரவையும், அமைச்சர்களும் படுத்து இந்த தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஆளுநர் கிரண் பேடி சென்னைக்கு புறப்பட்ட பின்னர், கோபமடைந்த கட்சி தொண்டர்கள் ராஜ் நிவாஸூக்குள் நுழைய முற்பட்னர். ஆனால், அமைதியை குலைக்கின்ற எந்தவொரு முயற்சியிலும் ஈடுபட வேண்டாம் என்று முதல்வர் கூறிவிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :