ஐ.எஸ் அமைப்பில் சேர 15 வயதில் தப்பிய சிறுமி; பிரிட்டன் திரும்ப விருப்பம்

British IS schoolgirl

பட மூலாதாரம், PA

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் குழுவில் சேர்வதற்காக 2015-ஆம் ஆண்டு கிழக்கு லண்டனை விட்டு கிளம்பிய மூன்று பள்ளி மாணவிகளில் ஒருவர், அந்த அமைப்பில் சேர்ந்ததில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் அதேவேளையில் மீண்டும் தான் பிரிட்டன் திரும்ப விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இராக்கில் உள்ள மொசூல், சிரியாவில் உள்ள ரக்கா ஆகிய நகரங்கள் உள்பட தங்கள் வசம் இருந்த பெரும்பாலான பகுதிகளை இழந்துள்ள இஸ்லாமிய அரசு அமைப்பு, வடகிழக்கு சிரியாவில் குர்திஷ் இனத்தவர் தலைமையிலான சிரியா ஜனநாயக படைகள் எனும் கூட்டணிப் படைகளுடன், தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் மிகச்சிறிய பகுதியில் சண்டையிட்டு வருகின்றது.

பிரிட்டனில் இருந்து தன் இரு தோழிகளுடன் ஐ.எஸ் அமைப்பில் சேரத் தப்பிச் சென்றார் ஷமீமா பேகம். தற்போது 19 வயதாகும் ஷமீமா பேகம், டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் துண்டிக்கப்பட்ட தலைகளை தான் பார்த்துள்ளதாகவும், அதனால் தனக்கு எந்த அச்சமும் இல்லை என்றும் தெரிவித்தார்.

சிரியாவில் உள்ள ஓர் அகதிகள் முகாமில் இருந்து பேசிய ஷமீமா, தான் ஒன்பது மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும், தனது குழந்தைக்காக தான் பிரிட்டன் வர விரும்புவதாகவும் கூறினார்.

தனக்கு இதற்கு முன்னர் இரண்டு குழந்தைகள் பிறந்ததாகவும், அவை இறந்துவிட்டதாகவும் ஷமீமா குறிப்பிட்டார்.

சிரியா பயணம்

பிப்ரவரி 2015இல் பெத்நல் கிரீன் அகாடமி என்ற பள்ளியைச் சேர்ந்த ஷமீமா பேகம், அமீரா அபேஸ் ஆகியோர் லண்டனைவிட்டு சிரியா சென்றபோது அவர்களுக்கு வயது 15. அவர்களுடன் சென்ற கதீசா சுல்தானாவுக்கு வயது 16.

Islamic State

பட மூலாதாரம், Met police

படக்குறிப்பு, கதீசா சுல்தானா, அமீரா அபேஸ் மற்றும் ஷமீமா பேகம் (இடமிருந்து வலம்)

நண்பர்களுடன் வெளியில் செல்வதாகப் பெற்றோரிடம் சொல்லிவிட்டு, துருக்கியின் கட்விக் விமான நிலையம் சென்ற அவர்கள், அங்கிருந்து சிரியா சென்றனர்.

ரக்கா நகரை அடைந்தபின் புதிய மணப்பெண்கள் இருக்கும் வீட்டில் அவர்கள் தங்கினார்கள் என்று டைம்ஸ் செய்தி கூறுகிறது.

ஷமீமா அங்கு 20 - 25 வயதுள்ள, ஆங்கிலம் தெரிந்த மணமகனை மணமுடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். பின்பு நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 27 வயதாகும், இஸ்லாமிய மதத்துக்கு மாறிய நபரை அவர் மணமுடித்தார்.

இந்த தம்பதி இரு வாரங்களுக்கு முன் ஐ.எஸ் அமைப்பின் வசம் கடைசியாக இருக்கும் பாகூஸ் நகருக்கு சென்றுள்ளது.

அவரது கணவர் சிரியாவிடம் சரணடைந்த நிலையில், அகதிகள் முகாமில் உள்ள 39,000 பேருடன் இருக்கிறார் ஷமீமா. தம் கணவர் சிறையில் சித்திரவதைக்கு உள்ளாவதாக ஷமீமா டைம்ஸ் இதழிடம் கூறியுள்ளார்.

டைம்ஸ் ஊடகவியலாளர் ஆண்டனி லாய்டு உடனான உரையாடலில், ஐ.எஸ் வசம் இருந்த பகுதிகளில் வாழ்ந்தது அவர்கள் பிரசாரக் காணொளிகளில் காட்டியதைப் போல இயல்பாகவே இருந்தது எனக் கூறியுள்ளார்.

"முதல் முறை போர்க்களத்தில் சிறைபிடிக்கப்பட்டு தலை துண்டிக்கப்பட்ட இஸ்லாமின் எதிரியின் தலையைப் பார்த்தபோது, இவர் உயிருடன் இருந்தால் இஸ்லாமியப் பெண்களுக்கு என்ன நடந்திருக்கும் என நினைத்தேன். இப்போதும் நான் அதே 15 வயது பெண் அல்ல. இங்கு வந்ததற்கு கவலைப்படவில்லை," என்று ஷமீமா கூறியுள்ளார்.

அவருடன் சென்ற கதீசா சுல்தானா 2016இல் ரஷ்யாவின் ஒரு வான் தாக்குதலில் இறந்ததாகக் கூறுகிறார் ஷமீமா. அமீரா அபேஸ் ஒரு தாக்குதலில் உயிரிழந்ததாக ஷமீமா கூறினாலும், அவரது நிலை என்ன என்று உறுதியாகத் தெரியவில்லை.

ஐ.எஸ்

பட மூலாதாரம், Met police

இரண்டு குழந்தைகளின் இறப்பு

முதலில் எட்டு மாதமாகியிருந்த ஷமீமாவின் இரண்டாவது குழந்தை, ஊட்டச்சத்துக் குறைபாட்டால் மூன்று மாதங்களுக்கு முன் உயிரிழந்தது.

பின்னர், ஒன்றேமுக்கால் வயதாகி இருந்த அவரது முதல் குழந்தை பாகூஸ் நகரில் ஒரு மாதத்துக்கு முன் இறந்தது.

போதிய மருத்துவ ஊழியர்கள் மற்றும் மருந்துகள் இல்லாமல் தமது முதல் இரு குழந்தைகளும் இறந்ததால், தனது மூன்றாவது குழந்தை குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார் ஷமீமா.

"போர்க்களத்தில் தங்கி இருக்கும் கொடுமைகளை நான் மீண்டும் அனுபவிக்க விரும்பவில்லை. பிரிட்டன் திரும்பினால் என் குழந்தைக்கு குறைந்தபட்சம் மருத்துவ வசதிகள் கிடைக்கும் என நம்புகிறேன். என் குழந்தையுடன் அமைதியான ஒரு வாழ்க்கை வாழ எதையும் செய்யத் தயாராக உள்ளேன், " என்று டைம்ஸ் இதழிடம் அவர் கூறியுள்ளார்.

காணொளிக் குறிப்பு, சிரியாவில் ஐ.எஸ்-க்கு எதிரா சண்டை - பிபிசி பிரத்யேக காணொளி

தங்களுக்கு என்ன நடந்தது என்பதை உணர்ந்து பதில் நடவடிக்கை மேற்கொள்ளத் தங்களுக்கு நேரமும், வெளியும் தேவை என்று சிரியா சென்ற மாணவிகளின் குடும்பத்தினர் கூறுவதாக அவர்கள் வழக்கறிஞர் தஸ்னீம் அகுன்ஜீ கூறுகிறார்.

'விசாரணைக்குத் தயாராக இருக்க வேண்டும்'

சட்டக் காரணங்களுக்காக ஷமீமா வழக்கு குறித்து கருத்து கூறாத பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் பென் வாலெஸ் கூறுகிறார், தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட நாட்டைவிட்டு வெளியேறியவர்கள் விசாரணைக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

"பிரிட்டனைவிட்டு வெளியேறியபோது ஷமீமா, சட்டபூர்வமாக ஒரு குழந்தையாகவே இருந்தார். இப்போதும் அவர் அந்த வயதிலேயே இருந்தால், அவரது குழந்தையின் நலன் கருதி அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ளும். ஆனால், அவர் சட்டபூர்வ வயதை அடைந்துள்ளார் என்பதால், அவரது செயல்களுக்கு அவரே பொறுப்பேற்க வேண்டும்," என்கிறார் பிரிட்டனில் உள்ள பிபிசியின் உள் விவகாரங்களுக்கான செய்தியாளர் டோமினிக் காசியானி.

கோப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

நாட்டம் செலுத்தாத அரசு

அந்த மாணவிகள் தப்பியபோது தீவிரவாத தடுப்பு திட்டத்தின் தலைவராக இருந்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரி சர் பீட்டர் ஃபாகி, "ஷமீமா பிரிட்டன் திரும்பினால், அவரிடம் விசாரித்து அவர் மீது வழக்குத் தொடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளனவா என ஆராய வேண்டும்," என்கிறார்.

"அவரை மீண்டும் பிரிட்டன் கொண்டுவர அரசு அதிக நாட்டம் செலுத்தாமல் இருக்க காரணம், அவர் முழுமனதுடன் தன் செயல்களுக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை. அவரைக் கொண்டுவருவதும் அதிகம் செலவுமிக்க காரியம், " என்கிறார் அவர்.

ஷமீமா பிரிட்டன் திரும்பினாலும் தீவிர வலதுசாரிக் குழுக்கள் மற்றும் இஸ்லாமியவாத தீவிரவாத எண்ணம் உள்ளவர்களைத் தூண்டக்கூடியவராக இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார் பீட்டர் ஃபாகி.

இதனிடையே ஐ.எஸ் அமைப்பில் சேர்வதற்காக, சிறு வயதில் சிரியாவுக்கு தப்பி சென்ற ஷமீமா மீண்டும் பிரிட்டன் திரும்பினால் அவர் தடுத்து நிறுத்தப்படுவார் என்று பிரிட்டனின் உள்நாட்டுதுறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ''இது குறித்து நான் தெளிவாகவும், உறுதியாகவும் கூறுகிறேன். வெளிநாட்டில் உள்ள தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவளித்த ஒருவர் நாடு திரும்ப நினைத்தால் அவரது முயற்சி தடுத்து நிறுத்தப்படும்'' என்று பிரிட்டனின் உள்நாட்டுதுறை செயலரான சஜித் ஜாவிட் தெரிவித்தார்.

தற்போது 19 வயதாகும் ஷமீமா பேகம் நாடு திரும்பினாள் அவர் மீது வழக்கு தொடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :