சிரியாவில் கடைசி கோட்டையில் நின்று போராடும் ஐ.எஸ் தீவிரவாதிகள் - தற்போதைய நிலை என்ன?

சிரியா

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, சிரியாவின் கடைசி ஐ.எஸ் பகுதியில் இருந்து வெளியேறும் குடும்பம்.

சிரியாவில் இஸ்லாமிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கடைசி பகுதிகளில், ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள், இராக் எல்லை அருகே கடுமையான எதிர்த் தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்க ஆதரவு பெற்ற படைகளைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில மணி நேரமாக நடந்து வரும் சண்டையில், இஸ்லாமிய அரசின் நிலைகள் மீது அமெரிக்கா தலைமையிலான படைகள் வான் மற்றும் தரை வழியாகத் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.

சிரியாவின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள இந்த சிறிய பகுதியில் ஐ.எஸ் அமைப்பினர் சுமார் 600 பேர் சண்டையிட்டு வருகின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை இராக் மற்றும் சிரியாவின் பெரும்பாலான பகுதிகளை ஐ.எஸ் அமைப்பினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

அவர்கள் பலம் உச்சத்தில் இருந்த 2014 காலகட்டத்தில், ஐ.எஸ் கட்டுப்பட்டுப் பிராந்தியத்தில் இரு நாடுகளையும் சேர்ந்த சுமார் 77 லட்சம் மக்கள் வசித்து வந்தனர். அப்பிராந்தியத்தின் பரப்பளவு பிரிட்டனின் பரப்பளவுக்கு நிகரானதாக இருந்தது.

ஒரு வாரத்துக்கும் மேலாக நிலவிய சண்டை நிறுத்தம் காரணமாக, சுமார் 20,000 குடிமக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேறியபின், 'ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான இறுதித் தாக்குதல்' தொடங்கும் என சிரியா ஜனநாயகப் படைகள் எனப்படும் கூட்டணிப் படைகளின் செய்தித்தொடர்பாளர் முஸ்தஃபா பாலி கூறியிருந்தார்.

IS

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஐ.எஸ் கட்டுப்பட்டுப் பிராந்தியத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேறியுள்ளனர்.

சண்டை நடக்கும் பகுதியில் இன்னும் சில குடிமக்கள் சிக்கியிருப்பதாகக் கருதப்படுகிறது.

ஐ.எஸ் அமைப்பினர் பெரும்பாலும் ஒடுக்கப்பட்டுவிட்டதாகவும், சிரியாவிலுள்ள 2,000 அமெரிக்கப் படையினரும் திரும்ப அழைத்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருந்தார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

"ஐ.எஸ் வசமிருந்த பிராந்தியங்கள் 100% மீட்கப்பட்டபின், அடுத்த வாரம் படைகள் திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பு வரும்," என்று புதன்கிழமை அவர் தெரிவித்தார்.

ஐ.எஸ் அமைப்பின் தற்போதைய நிலை என்ன?

கடுமையான தோல்விகளைச் சந்தித்த பின்னரும், இராக் மற்றும் சிரியாவில் இன்னும் 14,000 முதல் 18,000 பேர் வரை ஐ.எஸ் அமைப்பினர் இருக்கலாம் என்று ஐ.நா கணக்கிடுகிறது. அவர்களில் 3,000 பேர் வரை வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள்.

Islamic State

ஐ.எஸ் அமைப்பின் கிளை அமைப்புகளைச் சேர்ந்த தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான், எகிப்து, லிபியா, மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ளனர்.

சோமாலியா, யேமன், சினாய் தீபகற்பம் மற்றும் ஆப்பிரிக்காவிலுள்ள சாஹெல் பகுதி ஆகிய இடங்களிலும் அவர்கள் குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர்.

ஐ.எஸ் அமைப்பில் உறுப்பினராக இல்லாதபோதும், அதன் கொள்கைகளால் உந்தப்பட்டவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :