வறுமையில் காங்கோ மக்கள்: அமைச்சர்களுக்கு வாழ்நாள் ஊதியம்

காங்கோ

பட மூலாதாரம், Getty Images

அமைச்சர்களுக்கு வாழ்நாள் ஊதியம் மற்றும் பிற சலுகைகளை வழங்குவதை காங்கோ ஜனநாயக குடியரசு ஆதரித்துள்ளது.

"இந்த ஊதியம் அதிகாரிகளை வளப்படுத்துவதற்காக இல்லை" என அரசு அறிக்கையில் அறிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர்களுக்கு குறைந்தது 2000 அமெரிக்க டாலர்கள் வரை சலுகைகளை வழங்கும் அந்த அரசு ஆணை பெரிதும் விமர்சனத்துக்குள்ளானது.

காங்கோவில் பெரும்பாலான மக்கள் வறுமையில் வாழ்கின்றனர்.

ஆனால் அமைச்சர்களுக்கு அவர்களின் அடிப்படை தேவைகளான உணவு, மருத்துவம், மற்றும் தங்கும் வசதிக்காகவே இந்த ஊதியம் வழங்கப்படுகிறது என அரசு தெரிவித்துள்ளது.

மேலும் அமைச்சர்கள் வறுமையில் வாடக்கூடாது என்றும் அரசு தெரிவித்துள்ளது.

Presentational grey line

நாடுகடத்த அனுமதி

விஜய் மல்லையா

பட மூலாதாரம், AFP/GETTY IMAGES

இந்தியாவால் மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள விஜய் மல்லையாவை நாடு கடத்த பிரிட்டன் உள்துறை செயலர் சஜித் ஜாவித் அனுமதி அளித்துள்ளார்.

அவரை விசாரணைக்கு இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய இரண்டு மாதங்களுக்குபின் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கிங் ஃபிஷர் நிறுவனத்தின் அதிபராக இருந்த மல்லையா, ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனுடன் மார்ச் மாதம் 2016ஆம் தேதி இந்தியாவைவிட்டு வெளியேறினார்.

இந்தியாவைவிட்டு தப்பி வந்ததாக கூறப்படுவதை மறுத்த விஜய் மல்லயா தனது கடன்களை தான் திருப்பி செலுத்தவதாகவும் கடந்த வருடம் ஜூலை மாதம் தெரிவித்திருந்தார்.

கிங் ஃபிஷர் பியர் மூலம் பெரும் பணம் சம்பாதித்த விஜய் மல்லையா பின் கிரிக்கெட் மற்றும் ஃபார்முலா 1 ரேஸ் போட்டிகளிலும் கால் பதித்தார். அவரை கடனாளியாக மாற்றிய கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸை 2005ஆம் ஆண்டு நிறுவினார் விஜய் மல்லையா.

Presentational grey line

சீனாவின் "பன்றி ஆண்டு"

சீனா

பட மூலாதாரம், SOPA Images

மில்லியன் கணக்கான சீன மக்கள், பன்றி ஆண்டு தொடங்க சீனப் புத்தாண்டை கொண்டாட தயாராகி வருகின்றனர். சீன கலாசாரத்தில் இந்த பண்டிகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பிப்ரவரி 5ஆம் தேதி அவர்களின் புத்தாண்டு தொடங்குகிறது.

சீன காலண்டரில் உள்ள 12 விலங்கு ராசிகளில் பன்றியும் ஒன்று.

வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும், அதாவது பணி, உடல்நிலை, காதல் மற்றும் பல விஷயங்கள் குறித்த அதிர்ஷ்டத்தை கணிக்க இந்த ராசிபலன்கள் அவசியமாகிறது என்று சிலர் நம்புகின்றனர். ஒருவரின் பிறந்த ஆண்டுடன், பன்றி ஆண்டு ஒப்பிடப்படும்.

சீனப் புத்தாண்டு என்பது அவர்களுக்கு, ஒரு பெரிய விழா போன்றதாகும். குடும்ப உறவினர்கள் ஒன்று சேர்வது, குழந்தைகளுக்கு பெரியவர்கள் பணம் அன்பளிப்பாக அளிப்பது என்று நாடே கோலாகலமாக இருக்கும்.

Presentational grey line

வெனிசுவேலா சர்ச்சை: ஹ்வான் குவைடோவை அதிபராக ஐரோப்பிய நாடுகள் அங்கீகரிப்பு

வெனிசுவேலா

பட மூலாதாரம், Getty Images

வெனிசுவேலாவின் எதிர்க்கட்சி தலைவர் ஹ்வான் குவைடோவை வெனிசுவேலாவின் இடைக்கால அதிபராக சில ஐரோப்பிய நாடுகள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளன. பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் இதில் அடங்கும்.

தங்களது நிலைப்பாட்டை மாற்றியமைத்துக்கொண்டு இந்த நாடுகள் குவைடோவை அங்கீகரித்துள்ளன.

புதிதாக தேர்தலை நடத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் விடுத்த கோரிக்கையை அதிபர் நிக்கோலஸ் மதுரோ நிராகரித்ததையடுத்து சில நாடுகள் கூட்டு முடிவு எடுத்துள்ளன.

அமெரிக்கா மற்றும் சில லத்தீன் அமெரிக்க நாடுகள் ஏற்கனவே குவைடோவை ஆதரித்துள்ளன. மதுரோவின் முக்கிய ஆதரவாளர்களில் ஒருவரான ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளின் முடிவை, வெனிசுவேலாவின் உள் விவகாரங்களில் அயல்நாடுகளின் தலையீடு என விமர்சித்துள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வெனிசுவேலாவில் அதிகாரத்தை பிடுங்கப்பார்ப்பதாக கூறி ரஷ்யா கண்டித்துள்ளது.

Presentational grey line

யார் இந்த ராஜிவ் குமார்?

கொல்கத்தா

பட மூலாதாரம், KOLKATA POLICE

சாரதா நிதி நிறுவன மோசடி மற்றும் ரோஸ் வேலி ஆகிய வழக்குகளில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்திற்கு சி.பி.ஐ அதிகாரிகள் நேற்று மாலை சென்றனர். அங்கு, சி.பி.ஐ அதிகாரிகளை கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர், சி.பி.ஐ அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர்.

இதனையடுத்து, காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டில் ஆலோசனை நடத்திய முதல்வர் மம்தா , கூட்டாட்சி முறையை பாதுகாக்க வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். உடனடியாக, கொல்கத்தா மெட்ரோ சாலைப் பகுதியில் தர்ணாவையும் தொடங்கினார். அவருடன் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் உள்ளிட்டோர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

ராஜீவ் குமார்

ராஜிவ் குமார் 1989ஆம் ஆண்டு, மேற்கு வங்க பிரிவை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி. அவர் தற்சமயம் கொல்கத்தா போலீஸ் ஆணையராக பணியாற்றுகிறார்.

ராஜிவ் குமார் உத்தர பிரதேச மாநில அஜாம்கார்க் மாவட்டத்தில் பிறந்தவர். ஐ.ஐ.டி கான்பூரில் கணினி துறையில் பொறியியல் படித்தவர்.

இந்த தொழிற்நுட்ப அறிவை அவர் தனது போலீஸ் பணியில் பெரிதும் பயன்படுத்தி இருக்கிறார். தொழில்நுட்பத்தை திறமையாக பயன்படுத்தி கண்காணிப்பு பணியை மேற்கொண்டவராகவே அவர் மேற்கு வங்கத்தில் அறியப்படுகிறார்.

நிலக்கரி சுரங்க மாஃபியாக்களுக்கு எதிராக 90களில் அவர் மிகத்திறமையாக பணியாற்றினார். அவர் பிர்பும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது சுரங்க மாஃபியாக்களுக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டிருக்கிறார்.

அவர் பல சுரங்க மாஃபியாக்களை கைது செய்திருக்கிறார். அந்த சமயத்தில் அதிகாரிகள் யாரும் நிலக்கரி சுரங்க மாஃபியாக்களுக்கு எதிராக செயல்பட்டதில்லை.

Presentational grey line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :