புதிய மன்னரை தேர்ந்தெடுக்கும் முனைப்பில் மலேசியா

திடீரென பதவி விலகிய மன்னர் ஐந்தாம் சுல்தான் முஹம்மத்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, திடீரென பதவி விலகிய மன்னர் ஐந்தாம் சுல்தான் முஹம்மத்

தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே முன்னெப்போதும் இல்லாத வகையில் திடீரென மலேசியாவின் மன்னர் ஐந்தாம் சுல்தான் முஹம்மத் பதவி விலகியதை தொடர்ந்து அந்நாட்டின் புதிய மன்னரை தேர்ந்தெடுக்க அரச குடும்பத்தினர் வாக்களிக்க உள்ளனர்.

பொதுவாக ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை யாங் டி- பெர்துவன் அகாங் என்று அழைக்கப்படும் ஒரு புதிய ஆட்சியாளர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

ஆனால் மன்னராக பொறுப்பேற்ற இரண்டே ஆண்டுகளில், மலேசிய வரலாற்றில் முதல்முறையாக மன்னர் ஐந்தாம் சுல்தான் முஹம்மத் இந்த ஜனவரி மாதத்தின் துவக்கத்தில் திடீரென பதவி விலகினார்.

மலேசியாவில் அரசியலமைப்பு முடியாட்சி அமைப்பு அமலில் உள்ளது. இருப்பினும், ஆட்சியாளர்கள் தினசரி நிர்வாகத்தில் பங்கேற்பதில்லை.

வரும் ஜனவரி 31 ஆம் தேதி ஒரு புதிய மன்னர் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐந்தாம் சுல்தான் முஹம்மத், யங் டி- பெர்துவன் அகாங்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, ஐந்தாம் சுல்தான் முஹம்மத், யங் டி- பெர்துவன் அகாங்

சம்பிரதாயமாக அரசராக பணியாற்றும் அந்நபருக்கு குறைவான சட்ட அதிகாரங்களே உள்ளன. ஆனால் கலாசாரரீதியாக அவருக்கு மிகப்பெரிய அரசியல் செல்வாக்கு இருக்கும்.

வெவ்வேறு மாகாணங்களில் இந்த மன்னர் இஸ்லாமின் தலைவராகவும் அங்கீகரிக்கப்படுவார்.

மலேசியாவின் ஒன்பது மாகாணங்களுக்கும் பரம்பரை அரச குடும்பங்கள் உள்ளன. இவர்கள் தான் நாட்டின் அகாங்கை தேர்வு செய்வார்கள்.

அதாவது இந்த அரச குடும்ப சபையில் இருந்து ஒருவரை ஐந்தாண்டு பதவிக்காலத்துக்கு ஆட்சியாளராக தேர்ந்தெடுப்பார்கள்.

கடந்த நவம்பர் மாதத்தில், ஐந்தாம் சுல்தான் முஹம்மத் மன்னர் மருத்துவ விடுப்பில் சென்றார். அந்த மாதத்தின் பிற்பகுதியில், ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் ஒரு முன்னாள் மிஸ் மாஸ்கோ அழகியுடன் அவருக்கு திருமணம் நடந்ததாக சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் வெளியானது.

முன்னாள் மாடல் ஓக்சானா வியோவொடினா

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, முன்னாள் மாடல் ஓக்சானா வியோவொடினா

மலேசியாவின் அரசர்கள் அயல்நாட்டினரை மணப்பதோ, முஸ்லீம் அல்லாதவர்களை மணப்பதோ புதிது அல்ல.

அரண்மனையோ, அரசோ, அரசரோ இதுவரை ஐந்தாம் முகமது பதவி இறங்கியதற்கான காரணத்தை வெளியிடவில்லை.

கடந்த 2016-ம் ஆண்டு தனது 47 வயதில் ஐந்தாம் முகமது அரசராக முடியேற்றுக்கொண்டார். மிக இளம் வயதில் மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர்.

தனது பதவிக்காலம் முடியும் முன்னரே பதவியை ராஜினாமா செய்த முதல் அரசரும் இவர்தான்.

ஏற்கனவே பிரதமர் மஹாதீர் முகமதுடன் பதற்றமான உறவு நிலவிய நிலையில், திருமண விவகாரம் மோதல் முற்றிய புள்ளியாக அமைந்தது என பலர் நம்புகின்றனர்.

மஹாதீர் கடந்த மே மாதம் ஐந்தாம் முகமது முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார். அவர் பிரதமராக பதவியேற்கும் நிகழ்வு எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிக நேரம் எடுத்தது. இதற்கு அகாங் காரணம் எனப் பலர் கூறினாலும், அரண்மனை இதனை மறுத்தது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :