சுபாஷ் சந்திர போஸின் ரகசிய காதல் வாழ்க்கையின் சுவாரஸ்ய தகவல்கள்

பட மூலாதாரம், Netaji Research Bureau
- எழுதியவர், பிரதீப் குமார்
- பதவி, பிபிசி
சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளான இன்று, அவரது ரகசிய காதல் வாழ்க்கையில் சுவாரஸ்ய தகவல்கள் சிலவற்றை அறிய தருகிறோம்.
காங்கிரஸ் கட்சியில் இருந்த சுபாஷ் சந்திர போஸ், உடல்நிலை காரணமாக 1934 ஆம் ஆண்டு ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவிற்கு செல்ல நேரிட்டது.
ஒத்துழையாமை இயக்கத்தின் செயல்பாட்டின்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போஸின் உடல்நிலை 1932 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மோசமான நிலைக்கு சென்றது.
எனவே, போஸ் குடும்பத்தின் கோரிக்கையை ஏற்ற அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் அவரை மேல் சிகிச்சைக்காக ஐரோப்பாவுக்கு அழைத்து செல்ல அனுமதித்தது.
வியன்னாவில் சிகிச்சை பெற்றுக்கொண்டு இருந்தபோதிலும் ஐரோப்பாவில் உள்ள இந்திய மாணவர்களை ஒன்றிணைந்து சுதந்திரத்திற்காக போராடுவதற்கு அவர் முடிவு செய்தார்.
அதே சமயத்தில், போஸை அணுகிய ஐரோப்பிய பதிப்பாளர் ஒருவர் "இந்தியாவின் துயரம்" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுத்துவதற்கு பணித்தார். அதை ஏற்றுக்கொண்ட போஸ் இந்த புத்தகத்தை உடனிருந்து எழுதுவதற்கு உதவியாகவும், அதை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதற்கும் ஒரு உதவியாளரை தேர்ந்தெடுப்பதற்கு முடிவு செய்தார்.
போஸின் நண்பரான டாக்டர் மாத்தூர் என்பவர் இதற்காக இரண்டு நபர்களை பரிந்துரைத்தார். அதிலுள்ள முதல் நபரை அழைத்து நேர்காணல் செய்த போஸுக்கு திருப்தியில்லை.
எனவே, இரண்டாவதாக 23 வயதான எமிலி சென்கல் என்ற பெண் நேர்காணலுக்காக அழைக்கப்பட்டார். எமிலியின் பேச்சில் நம்பிக்கை கொண்ட போஸ், அவரை 1934 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியில் சேர்த்துக்கொண்டார்.
1934 ஆம் ஆண்டு இந்த சந்திப்பு நடப்பதற்கு முன்புவரை 37 வயதான சுபாஷ் சந்திர போஸின் முழு கவனமும் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிலிருந்து இந்தியாவை விடுவிப்பதிலேயே இருந்தது. அதுவரை, எமிலி என்பவர் தனது வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த போகிறார் என்பதை அறியாமல் இருந்தார் போஸ்.
போஸின் வாழ்க்கையை தாக்கிய காதல் புயல்
சுபாஷ் சந்திர போஸின் இளைய சகோதரரான சரத் சந்திரா போஸின் பேரனான சுகித் போஸ், 'அவரது மாட்சிமை பொருந்திய நியமனம் - சுபாஷ் சந்திர போஸ் மற்றும் பேரரசுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம்' என்ற தலைப்பில் புத்தகமொன்றை எழுதியுள்ளார். அதில், எமிலியை சந்தித்த பிறகு போஸின் வாழ்க்கை தலைகீழாக மாற்றமடைந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Netaji Research Bureau
சுபாஷ் சந்திர போஸுக்கு பல காதல் விருப்பங்களும், திருமணத்திற்கான பல வாய்ப்புகளையும் கொண்டிருந்தார். ஆனால், அவர் யாரையும் ஆர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், எமிலியின் அழகு அவரை கவர்ந்துவிட்டது என்று அப்புத்தகத்தில் சுகித் போஸ் குறிப்பிட்டுள்ளார்.
சுபாஷ் சந்திர போஸே காதலை வெளிப்படுத்தியதாகவும், அவர் 1934 ஆம் ஆண்டின் இடைப்பகுதிலிருந்து 1936 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஆஸ்திரியா மற்றும் செக்கோஸ்லோவேக்கியாவில் தங்கியிருந்த காலகட்டத்தில் அவர்களின் காதல் சிறப்பான நிலையை அடைந்தது என்றும் அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுபாஷ் சந்திர போஸ் மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோரின் வாழ்க்கையை ஒப்பீட்டு புகழ்பெற்ற கல்வியாளரான ருத்ரநாஷூ முகர்ஜி ஒரு புத்தகம் எழுதினார். பென்குயின் பதிப்பகம் வெளியிட்ட அப்புத்தகத்தில் போஸ் மற்றும் நேருவின் வாழ்க்கையில் அவர்களின் மனைவிகள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
சுபாஷ் சந்திர போஸ் எழுதிய காதல் கடிதம்
"தங்கள் காதலின் தொடக்க கட்டத்திலேயே இது மிகவும் வேறுபட்ட ஒன்று. கடினமான ஒன்று என்றும் அவர்கள் அறிந்திருந்தனர் என்பது அவர்கள் இருவரும் எழுதிக்கொண்ட கடிதத்திலிருந்து தெரிய வருகிறது. எமிலி அவரை திரு.போஸ் என்றும், போஸ் அவரை திருமதி. சென்கல் அல்லது ஷெல்லி என்று அழைத்தார்" என்று அப்புத்தகத்தில் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதங்கள் முன்னர் சுபாஷ் சந்திர போஸால் எமிலிக்கு எழுதப்பட்ட கடிதங்களின் தொகுப்பில் சேர்க்கப்படவில்லை. இந்த கடிதங்களை சரத் சந்திர போஸின் மகனான ஷிஷிர் போஸின் மனைவியான கிருஷ்ணா போஸிடம் எமிலியே நேரடியாக அளித்தவையாகும்.

பட மூலாதாரம், Netaji Research Bureau
1936 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் தேதி எழுதப்பட்டுள்ள கடிதமொன்று இவ்வாறு தொடங்குகிறது, "என் அன்பே, தக்க நேரம் வரும்போது உறைந்த பனி உருக ஆரம்பிக்கிறது. ஆனால், இம்முறை எனது இதயம் உருகுவதை போன்று உணருகிறேன். நான் உன்னை எவ்வளவு விரும்புகிறேன் என்பதை உனக்கு கடிதங்கள் மூலமாக தெரிவிப்பதை நாம் நேரில் உரையாடுவதை போல என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை. என் அன்பே, எனது இதயத்தின் ராணி நீதான். ஆனால், நீ என்னை விரும்புகிறாயா?."
"எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று எனக்கு தெரியவில்லை. ஒருவேளை நான் எனது மீதி வாழ்க்கையை சிறையில் செலவிட நேரிடலாம், நான் சுட்டுக் கொல்லப்படலாம் அல்லது தூக்கில் தொங்கவிடப்படலாம். அதனால், நான் உன்னை நேரில் சந்திக்க முடியாமல் போக நேரிடலாம் அல்லது மீண்டும் கடிதத்தை எழுத முடியாமலும் போகலாம். இருப்பினும், நீ எப்போதுமே எனது இதயத்திலும், எண்ணத்திலும், கனவிலும் நிறைந்திருப்பாய். இந்த ஜென்மத்தில் நாம் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழமுடியாவிட்டாலும், அடுத்த ஜென்மத்தில் உன்னுடன்தான் இருப்பேன்" என்று சுபாஷ் சந்திர போஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஆன்மாவின் அன்பு
அந்த கடிதத்தின் கடைசியில், "நான் உன்னுள் இருக்கும் பெண்ணையும், ஆன்மாவையும் காதலிக்கிறேன். நான் நேசிக்கும் முதல் பெண்மணி நீதான்" என்று போஸ் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதை படித்ததும் கடிதத்தை அழித்துவிடுமாறு எமிலியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், எமிலி அதை பாதுகாப்பாக சேகரித்து வைத்துக்கொண்டார்.

பட மூலாதாரம், Netaji Research Bureau
எமிலி மீதான காதலில் சுபாஷ் சந்திர போஸ் தன்னை முழுவதுமாக இழந்துவிட்டார். இதுகுறித்து சுகித்திடம் பேசிய போஸின் நெருங்கிய நண்பரும் அரசியல் கூட்டாளியுமான ஏசிஎன் நம்பியார், "சுபாஷ் ஒரு யோசனையுடன் இருந்தவர், இந்தியாவின் சுதந்திரத்தை பெறுவதில் மட்டுமே அவரது கவனம் இருந்தது." போஸின் அந்த எண்ணத்திலிருந்து திசை திரும்புவதற்கு ஒரே ஒரு வாய்ப்பு அவர் எமிலியை நேசிக்கும்போதுதான் ஏற்பட்டது. அவர் எமிலியை மிகவும் விரும்பினார்.
திருமணம் நடந்ததா?
அதற்கடுத்த முறை சந்திக்கும்போது போஸும், எமிலியும் திருமணம் செய்துகொண்டனர். தனக்கு 27 வயதிருக்கும்போது 1937 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் நாள் தங்களது திருமணம் நடைபெற்றதாக கிருஷ்ணா போஸிடம் பேசிய எமிலி தெரிவித்தார். அவர்கள், தங்கள் இருவருக்கும் விருப்பமான ஆஸ்திரியாவிலுள்ள இடத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
ஆனால், இருவரும் தங்களது திருமணம் பற்றிய தகவலை ரகசியமாக வைத்துக்கொள்ள முடிவு செய்தனர். எமிலி தங்களது திருமணத்தை தவிர வேறெந்த தகவலையும் கிருஷ்ணாவிடம் பகிர்ந்து கொள்ளவில்லை.
தனது அரசியல் வாழ்க்கையில் எவ்வித தாக்கத்தையும் சந்திக்க விரும்பாத காரணத்தினால் போஸ் தனது திருமண வாழ்க்கையை மறைந்திருக்கலாம் என்று முகர்ஜி நினைக்கிறார். வெளிநாட்டு பெண்ணை போஸ் திருமணம் செய்து கொண்டது அவரை பற்றிய மற்றவர்களின் பார்வையை மாற்றியிருக்கலாம்.

பட மூலாதாரம், Getty Images
இந்திய பத்திரிகைகளுக்கு எழுதிய எமிலி
இந்தியாவிலுள்ள சில செய்தித்தாள்களுக்கும், இதழ்களுக்கும் வியன்னாவில் இருந்தபடியே எமிலி எழுதவேண்டுமென்று போஸ் விரும்பியதாக கிருஷ்ணா போஸ் கூறுகிறார். தி இந்து, மாடர்ன் ரிவ்யூ ஆகிய பத்திரிகைகளுக்கு எமிலி எழுதியிருந்தாலும் அக்கட்டுரைகள் தனக்கு திருப்தியளிக்கவில்லை என்று போஸ் பலமுறை கூறியதாக தெரிகிறது.
1937 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 12 ஆம் தேதி எமிலிக்கு சுபாஷ் எழுதிய கடிதத்தில், "இந்தியாவைப் பற்றி சில கட்டுரைகளை நீ எழுதியுள்ளாய். ஆனால், இந்த புத்தகங்களை உனக்கு வழங்குவதற்கு தேவையுள்ளதென்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால், நீ அவற்றை படிப்பதேயில்லை" குறிப்பிட்டுள்ளார்.
"நீ தீவிரமாக இருக்காத வரை, வாசிப்பதில் ஆர்வம் வராது. வியன்னாவில் நீ பல தலைப்பிலான நூல்களை பெற்றிருக்கிறாய். ஆனால், அவற்றை நீ தொடர்ந்து பார்க்கவில்லை என்று எனக்குத் தெரியும்."

பட மூலாதாரம், Netaji Research Bureau
மூன்று ஆண்டுகள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்தனர்
இருவரின் அன்பின் விளைவாக 1942 ஆம் ஆண்டு நவம்பர் 29 இல் இவர்களின் மகளான அனிதா பிறந்தாள். இத்தாலியின் புரட்சிகர தலைவர் கேரிபால்டியின் மனைவியான பிரேசிலை பூர்விகமாக கொண்ட அனிதா கேரிபால்டி நினைவாக அந்த பெயரிடப்பட்டது.
அனிதா தனது கணவருடன் பல போர்களில் ஈடுபட்டிருந்ததுடன், துணிச்சலான வீரர் என்ற அடையாளத்தை பெற்று விளங்கினார். சுபாஷ் சந்திர போஸ் 1942 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வியன்னாவிற்கு சென்று எமிலியையும், அனிதாவையும் சந்தித்ததே அவர்களின் கடைசி சந்திப்பாகும்.
ஆனால், சுபாஷ் சந்திர போஸின் நினைவுகளுடன் 1996 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த எமிலி, தங்களது மகள் அனிதா போஸை ஜெர்மனியின் பிரபலமான பொருளாதார வல்லுனராக வளர்த்தெடுத்தார்.
இந்த கடினமான பயணத்திலும், சுபாஷ் சந்திர போஸின் குடும்பத்திலிருந்து எந்த உதவியும் பெறுவதற்கு அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












