இஸ்லாமிய மதகுருவின் போராட்டங்களை சித்தரிக்கும் படத்துக்கு பாகிஸ்தானில் தடை மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், INSTAGRAM/KHOOSAT FILMS
மதகுரு ஒருவரின் போராட்டங்களை சித்தரிக்கும் விருது பெற்ற திரைப்படம் ஒன்றுக்கு இஸ்லாமியவாத கட்சி ஒன்று எதிர்ப்பு தெரிவித்ததால் பாகிஸ்தான் அரசு அந்த திரைப்படத்தை வெளியிடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இந்த திரைப்படத்தால் மக்கள் இஸ்லாம் மற்றும் முகமது நபிகளின் பாதையிலிருந்து விலகிப் போகலாம் என்று அந்த கட்சி தெரிவித்துள்ளது.
'ஜின்தகி டமாஷா' (வாழ்க்கையின் நகைச்சுவைகள்) என்னும் அந்த திரைப்படம் திருமணம் ஒன்றில் நடனம் ஆடும் வீடியோ வைரல் ஆனதால் ஒதுக்கப்பட்ட மனிதரின் கதை.
அந்த திரைப்படத்தின் இயக்குநர் யாரையும் புண்படுத்துவது தனது நோக்கம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
புகழ்பெற்ற பாகிஸ்தான் இயக்குநர் சர்மத் கூசத்தான் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தால் அவருக்கும், அவரது குடும்பம் மற்றும் குழுவிற்கும் பல அச்சுறுத்தல்கள் வருவதாக தெரிவித்துள்ளார்.
"மதத்தின் பெயரால் வெறுப்பு, அச்சம் மற்றும் கோபத்தை பரப்பாதீர்கள்," என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஹெஹ்ரீர்-இ-லபைக் கட்சியின் செய்தி தொடர்பாளர் இந்த திரைப்படத்தின் கதை 'தெய்வநிந்தனை' செய்வதுபோல் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
புசான் சர்வதேச திரைப்பட விழாவில், 'ஜின்தகி டமாஷா' திரைப்படம் திரையிடப்பட்டு, சிறந்த கற்பனை திரைப்பட பிரிவில் விருது வாங்கியது.
செவ்வாயன்று, பிரதமரின் தகவல் மற்றும் ஒளிபரப்பு ஆலோசகர் ஃபிடஸ் ஆஷிக் அவான், இஸ்லாமிய கருத்தியல் கவுன்சிலுடன் சென்சார் போர்ட் ஆலோசனை செய்யும்வரை படத்தை நிறுத்தி வைக்குமாறு தயாரிப்பாளரிடம் கேட்டுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

'பெரியார் மீது நடந்த தாக்குதல்கள் குறித்து ரஜினிகாந்த் ஏன் பேசவில்லை?'

பட மூலாதாரம், Facebook
தமிழ், தமிழர்களின் வரலாறு குறித்தெல்லாம் ஏதும் தெரிந்து கொள்ளாத நடிகர் ரஜினிகாந்த் தேவையற்ற விஷயங்களைப் பேசி தன்னைத் தானே அசிங்கப்படுத்திக் கொள்வதாக மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி தெரிவித்துள்ளார்.
பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்துள்ளார் பேராசிரியர் ராமசாமி.
அண்மையில் துக்ளக் பத்திரிகை ஆண்டு விழாவில் ரஜினி தெரிவித்த சில கருத்துகளுக்காக அவரை குற்றவாளி எனச் சாட இயலாது என்றபோதிலும், தமிழர்களின் கலாசாரம், வழக்கம் மற்றும் மரபுகள் ஆகியவற்றைத் தொடும் விஷயங்கள் தொடர்பாக கருத்து தெரிவிப்பதை அவர் தவிர்ப்பது நல்லது என்றார் ராமசாமி.

நாகையில் மீட்கப்பட்ட கோயில் சிலைகள் திருடப்பட்டது எங்கே?

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமீபத்தில் 10 சிலைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். ஜனவரி மாதத் துவக்கத்தில் சோழர் காலச் சிலை ஒன்றும் கடத்தல்காரர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.
ஜனவரி 14ஆம் தேதியன்று நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் செல்வம், பைரவசுந்தரம் என்ற இருவர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 10 சிலைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் கைப்பற்றினர்.
இந்த பத்து சிலைகளில் ஒன்றரை அடி உயரமுள்ள சிவகாமசுந்தரி சிலையும் ஒன்று. இந்தச் சிலையை கைதுசெய்யப்பட்ட செல்வம் என்பவர், சுமார் ஒரு கோடியே இருபது லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்றுவந்தார்.
இந்தத் தகவல், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினருக்குத் தெரிந்ததையடுத்து செல்வம் முதலில் கைதுசெய்யப்பட்டார். அதற்குப் பிறகு, அவருடைய கூட்டாளியான பைரவசுந்தரமும் கைதுசெய்யப்பட்டார்.

'கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில் இலங்கை முஸ்லிம்களுக்கு ஆபத்து'

"இலங்கையில் மன்னர் ஆட்சிக் காலங்களிலிருந்து முஸ்லிம்களுக்கென இருந்து வரும் நடைமுறைகளையும் சட்டங்களையும் இல்லாதொழிப்பதற்கு தற்போதைய ஆட்சியாளர்கள் முயற்சிப்பது, இந்த நாட்டை அழிவை நோக்கிக் கொண்டு செல்வதற்கான ஓர் ஆரம்பமாகும்" என்று முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
பிபிசி தமிழுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போதைய 'மைனாரிட்டி' அரசாங்கத்தைக் கொண்டுள்ள ஆட்சியாளர்கள், எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பங்கு பெரும்பான்மையினைப் பெறுவார்களாயின், அதன் பின்னர் சிறுபான்மை சமூகங்களுக்கு, அவர்களால் முடிந்த அத்தனை அநியாயங்களையும் செய்வார்கள் என்றும் அவர் இதன்போது அச்சம் தெரிவித்தார்.
விரிவாக படிக்க: நாகையில் மீட்கப்பட்ட கடவுள் சிலைகள் திருடப்பட்ட கோயில்கள் எவை?

தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது சாத்தியமா?

பட மூலாதாரம், Getty Images
தஞ்சாவூரில் உள்ள பெருவுடையார் ஆலயத்தில் பிப்ரவரி மாதம் நடக்கவிருக்கும் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. வழக்குகளும் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. ஆனால், அது சாத்தியமா?
தஞ்சாவூரில் உள்ள பெருவுடையார் ஆலயம் எனப்படும் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் பிப்ரவரி ஐந்தாம் தேதி குடமுழுக்கு நடத்த கோவில் நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து அந்தக் கோயிலில் பெருமளவில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. குடமுழுக்கிற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், இந்தக் குடமுழுக்கு விழாவைத் தமிழில் நடத்த வேண்டுமென தமிழ் அமைப்புகளும் சைவ மத அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டிருக்கின்றன. இதற்கு முன்பாக இக்கோயிலுக்கு 1980, 1997 ஆகிய ஆண்டுகளில் குடமுழுக்கு செய்யப்பட்டிருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













