You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மெக்ஸிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்ததில் உயிரிழப்பு 71 பேராக உயர்வு
வெள்ளிக்கிழமையன்று மெக்ஸிக்கோவில் எரிபொருள் குழாய் வெடித்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 71ஆக உயர்ந்துள்ளது.
மெக்ஸிகோவின் ஹிடால்கோ மாநிலத்தில் எரிபொருளை கொண்டுசெல்லும் குழாயை திருடர்கள் துளையிட்டதன் காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் குழாயிலிருந்து வெளியேறிய எரிபொருளை பிடிப்பதற்காக அங்கு சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வெடிப்பு சம்பவத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் இருபது பேருக்கு மேற்பட்டோரின் உடல்கள் அங்கேயே இன்னமும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மெக்ஸிகோ அதிபர் மானுவல் லோபஸ் ஒபராடோ அறிமுகப்படுத்தியுள்ள புதிய எரிபொருள் கொள்கையால் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாற்குறையாலே இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என்று உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
"பெட்ரோல் நிலையங்களிலேயே பெட்ரோல் இல்லாத சூழ்நிலையில் தங்களது கார்களுக்கு சிறிது பெட்ரோல் கிடைக்குமா என்று பார்ப்பதற்காகவே மக்கள் அந்த இடத்தில் மக்கள் குவிந்தனர்" என்று அந்த பகுதியை சேர்ந்த விவசாயியான இஸ்மாயஸ் கார்சியா ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த 71 பேர்களில் மூன்று பெண்கள், 12 வயது குழந்தையொன்று ஆகியோர் அடக்கம் என்று அம்மாநில கவனர் உமர் பயாத் தெரிவித்துள்ளார்.
விபத்தில் எஞ்சியுள்ளவற்றை தடயவியல் வல்லுநர்கள் ஆய்வுக்காக சேகரித்து வருகின்றனர்.
நடந்தது என்ன?
சட்டவிரோதமாக எரிபொருள் குழாயை துளையிட்டதே இந்த விபத்திற்கு காரணமென்று மெக்ஸிகோ அரசுக்கு சொந்தமான பெட்ரோலிய நிறுவனமான பேமெக்ஸ் கூறியுள்ளது.
எரிபொருள் குழாயை திருடர்கள் துளையிட்டதால், விபத்து நடந்தேறிய இடத்திலிருந்து வெளியான புகைப்படங்களில், வானளாவிய உயரத்துக்கு எரிபொருள் பீய்ச்சி அடிப்பது தெரிகிறது.
எரிபொருள் வழிந்தோட ஆரம்பித்ததும் அங்கிருந்து பொதுமக்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் எச்சரிக்கவில்லை என்று உள்ளூர்வாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
"வெடிப்பு ஏற்படுவதற்கு முன்னதாக பொது மக்களை வெளியேற்றுவதற்கு முன்பு அங்கிருந்து ராணுவ வீரர்கள் வெளியேறினர்" என்று டெலிவிசா என்ற தொலைக்காட்சியிடம் பேசிய டுரசோ என்பவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், மிகப் பெரிய மக்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாததால்தான் ராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறியதாக அதிபர் லோபஸ் தெரிவிக்கிறார்.
தாங்கள் சொல்வதை கேட்காமல் அங்கு கூடியிருந்தவர்கள் எரிபொருளை பிடிப்பதில் தீவிரமாக இருந்ததாலே, ராணுவத்தினர் அங்கிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்று மக்களை நேரடியாக குற்றஞ்சாட்டாமல் அவர் தெரிவித்துள்ளார்.
மெக்ஸிகோ மக்களின் தினசரி குறைந்தபட்ச வருமானத்தைவிட ஒரு சில லிட்டர்கள் பெட்ரோலின் விலை அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்