You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்க அரசுத்துறை முடக்கம்: சமரசக் கரம் நீட்டிய டிரம்ப் - முற்றாக நிராகரித்த எதிர்க்கட்சி
அமெரிக்க வரலாற்றிலேயே நீண்ட அரசுத் துறை முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவர தாம் முன்வைத்த யோசனைகளை நிராகரித்ததற்காக, எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினரை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விமர்சித்துள்ளார்.
தமது யோசனைகள் என்ன என்பதைத் தெரியப்படுத்தும் முன்னரே, அவை நிராகரிக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் பகுதியளவு அரசாங்க முடக்கம் ஏறத்தாழ ஒரு மாதமாக தொடர்ந்து வரும் சூழலில் சமரசத்திற்கு இறங்கி வந்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
மெக்சிகோ எல்லை சுவருக்கான நிதியில் அவர் உறுதியாக இருந்தாலும், 'டிரீமர்ஸ்' என்று அழைக்கப்படும் சிறு வயதில் அமெரிக்கவிற்கு வந்த குடியேறிகள் தொடர்பாக ஒரு சமரசத்தை முன் வைக்கிறார் டிரம்ப்.
எல்லைச் சுவர் கட்டுவதற்கான 5.7 பில்லியன் டாலர் நிதியில் அவர் எந்த சமரசத்தையும் செய்து கொள்ளவில்லை.
ஜனநாயகக் கட்சியினரும் எல்லைச் சுவருக்கு நிதி தர முடியாது என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறார்கள்.
அவரது சமரசத் திட்டங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என ஜனநாயக கட்சி கூறியுள்ளது.
அமெரிக்காவில் நடந்து வரும் இந்த பகுதியளவு அரசாங்க முடக்கம்தான், அதன் வரலாற்றிலேயே ஒரு நீண்ட அரசு முடக்கமாகும். இதனால் ஏறத்தாழ 8 லட்சம் ஊழியர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அரசு முடக்கம் என்றால் என்ன?
ஒரு விஷயத்துக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிதி ஒதுக்க அமெரிக்க காங்கிரஸ் ஒப்புக்கொள்ளவில்லையென்றாலோ அல்லது அதிபர் கையெழுத்திட மறுத்தாலோ பகுதியளவு அரசாங்க முடக்கம் நடைபெறுகிறது.
தற்போதைய பகுதியளவு முடக்கம் கடந்த டிசம்பர் 22-ம் தேதி துவங்கியது. இதனால் 25% அரசு பணிகள் முடங்கின மேலும் கிட்டதட்ட 8 லட்சம் அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு தற்காலிக விடுப்பை போல குறிப்பிட்ட காலத்திற்கு பணிக்கு வர வேண்டாமென சுமார் 3.5 லட்ச அரசு ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டனர். மற்றவர்கள் ஊதியமின்றி வேலை செய்கின்றனர்.
பொதுவாக அரசாங்க முடக்கம் ஏற்பட்டால், நிலைமை மீண்டும் சரியானபிறகு முன்பு கொடுக்க வேண்டிய ஊதியம் திருப்பியளிக்கப்பட்டுவிடும். ஆனால் இது மூன்றாம் தரப்பு ஒப்பந்ததாரர்களாக வேலை செய்பவர்களுக்கு பொருந்தாது. மேலும் காங்கிரஸ் சபை ஒப்புதல் அளித்தால் மட்டுமே நிலுவை தொகை திருப்பியளிக்கப்படும்.
பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் சிலரிடம் பிபிசி பேசியது. நிலைமையை சமாளிக்க அவர்கள் வேறு சில நடவடிக்கை எடுத்துள்ளனர். சிலர் வேறு வேலையை எடுத்துச் செய்கிறார்கள், சிலர் கிரெடிட் கார்டு எனும் கடன் அட்டையை நம்பியிருக்கிறார்கள். சிலர் சேமிப்பு நிதியை செலவு செய்கிறார்கள். இன்னும் சிலர் தங்களின் தேவையான தொகையை செலவழிக்க அதிக வட்டிக்கு கடன் வாங்கியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வேலையில்லாதவர்களுக்கு கொடுக்கப்படும் சலுகைக்கு விண்ணப்பித்துள்ளனர்.
டிரம்ப் சொல்லும் சமரச தீர்வு என்ன?
டிரம்ப் நிகழ்த்திய உரையில், குடியேறிகளை வரவேற்பதில் அமெரிக்காவுக்கு ஒரு பெருமைமிகு வரலாறு உள்ளது என்றும் ஆனால் கடந்த பல காலமாக நமது குடியேற்ற அமைப்பு முறை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறி உள்ளார்.
இப்போது உள்ள நிலையை சரிசெய்யவும், பகுதி நேர அரசு முடக்கத்திற்கு ஒரு தீர்வு காணவும் நான் இங்கு இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ஏன் நான் இந்த எல்லை சுவரை கட்ட விரும்புகிறேன் என்று காரணங்களை அடுக்கிய அவர், இந்த எல்லை சுவரானது தொடர்ச்சியான கட்டுமான அமைப்பில் இருக்காது என்றும், எங்கு தேவையோ அங்கு மட்டும் எஃகு தடுப்பு கொண்டு கட்டப்படும் என்றும் அவர் கூறினார்.
ஆனாலும், எல்லை சுவருக்கான 5.7 பில்லியன் டாலர் நிதியில் அவர் மிகவும் உறுதியாக இருந்தார்.
குடியேறிகள் குறித்து
அமெரிக்காவில் இப்போது சிறு வயதில் குடியேறிய ஏழு லட்சம் குடியேறிகள் இருக்கிறார்கள்.
அவர்கள் ஒரு திட்டத்தின் கீழ் இப்போது பாதுகாக்கப்படுகிறார்கள். அதாவது, அவர்கள் அமெரிக்காவில் பணி புரியலாம். ஆனால் குடியுரிமை கேட்க முடியாது. டிரம்ப் இந்த திட்டத்தைதான் ரத்து செய்ய இதுனால் வரை முயற்சித்து வந்தார்.
சமரச முயற்சியின் ஒரு பகுதியாக இப்போது இந்த திட்டத்தை மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
அதுபோல தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்தையும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க ஒப்பு கொண்டுள்ளார்.
போரினாலும், இயற்கை பேரிடரினாலும் பாதிக்கப்பட்டு அமெரிக்காவிற்குள் வந்தவர்களுக்கு இந்த தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்தானது வழங்கப்படுகிறது. இதன் கீழ் இப்போது 3 லட்சம் மக்கள் இருக்கிறார்கள்.
இவர்களுக்கான இந்த அந்தஸ்தையும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க அவர் ஒப்பு கொண்டுள்ளார்.
ஜனநாயகக் கட்சியினர் எதிர்வினை
டிரம்ப்பின் பேச்சு வெளி வருவதற்கு முன்பே ஜனநாயகக் கட்சியின் எதிர்வினையாற்ற தொடங்கிவிட்டனர்.
ஜனநாயகக் கட்சியை சேர்ந்த பிரதிநிதிகள் சபை உறுப்பினர் நான்ஸி, "முன்பே நிராகரிக்கப்பட்ட திட்டங்களை இப்போது தொகுத்துள்ளார். அதனை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்