You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
“உலகம் சுற்றும் பிரதமர்“ - கொல்கத்தாவில் ஸ்டாலின் கூறியவை மற்றும் பிற செய்திகள்
பாஜகவிற்கு எதிராக ஓரணியில் திரண்ட எதிர்க்கட்சிகள்
பாஜக ஒவ்வொரு மாநிலமாக ஆட்சியை இழந்து வருகிறது. மோதி அரசில் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளன. மக்கள் இந்த அரசு மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள். பிரதமர் மோதியை தூக்கி எறிய மக்கள் தயாராகி வருகிறார்கள் என்று நேற்று கொல்கத்தாவில் நடந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் மனதில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.
மக்களவைத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், இப்போதே தேசிய, பிராந்திய அளவில் கூட்டணிகளை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த மாநாட்டில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் தேவ கௌடா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் போன்ற பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினார்கள்.
"பெட்ரோல் விலை, டீசல் விலை, சிலிண்டர் விலை, மளிகைச்சாமான் விலை, காய்கறிவிலை உயர்ந்தது. வேலை வாய்ப்பின்மை உயர்ந்தது, குடிசைகளின் எண்ணிக்கை உயர்ந்தது. இதுதான் உலகம் சுற்றும் பிரதமரின் சாதனைகள். இவர்தான் இந்தியாவை ஆள துடித்துக் கொண்டிருக்கிறார்" என்று தனது உரையின்போது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
அமெரிக்கா, ரஷ்யாவைப் போன்றே இஸ்ரோவின் வழியும் தனிவழி
உலகின் சில முன்னணி நாடுகளைப் போலவே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது இஸ்ரோ. அதற்கான சோதனை முயற்சியில் விலங்குகளுக்கு பதிலாக மனித ரோபோக்களை அனுப்பலாம் என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ முடிவு செய்துள்ளது.
'ககன்யான் மிஷன்' திட்டத்தின் கீழ் இந்திய பயணிகளை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் தீவிரமாக இருப்பதாக இந்திய அரசும் இஸ்ரோவும் தெளிவாக கூறியிருக்கின்றன.
2021ஆம் ஆண்டின் இறுதிவாக்கில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
பிபிசியிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், "விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் சோதனை முயற்சிகள் சிக்கலான செயல்முறைகளை உள்ளடக்கியவை. அதில், பலவீனமான விலங்குகளை பயன்படுத்தும் எண்ணம் இஸ்ரோவிடம் இல்லை" என்று தெரிவித்தார்.
ரஃபேல் போர் விமான விவகாரம் - இந்து என். ராம் பேட்டி
பிரான்சிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்திய பிரதமர் நரேந்திர மோதி எடுத்த முடிவு, ஒவ்வொரு போர் விமானத்தின் விலையும் 41% உயர காரணமாயிற்று என்று மூத்த ஊடகவியலாளரான 'தி இந்து' குழுமத்தின் சேர்மன் என்.ராமின் பிரத்யேக கட்டுரை தி ஹிந்து (ஆங்கிலம்) இணையதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியானது.
இது பற்றி பிபிசி தமிழ் உடன் அவர் உரையாடினார். அவரது பேட்டியின் கருத்துகளை தொகுத்து வழங்குகின்றோம்.
126 ரஃபேல் போர் விமானங்களை வாங்காமல் 36 மட்டுமே வாங்க இந்திய பிரதமர் எடுத்த முடிவு ஒவ்வொரு விமானமும் 41 சதவீத விலை உயர வழிவகுத்தது என்று எவ்வாறு கூறுகிறீர்கள் என்று கேட்டபோது, என். ராம் நீண்ட விளக்கமளித்தார்.
எமது புலனாய்வின் கவனம் என்னவென்றால், போர் விமானத்தின் விலை என்ன என்பதே என்று என்.ராம் குறிப்பிட்டார். அது பற்றிய முழு தகவல்களையும் கொடுக்க முடியாது என்று அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது.
எமது புலனாய்வின் கவனம் என்னவென்றால், போர் விமானத்தின் விலை என்ன என்பதே என்று என்.ராம் குறிப்பிட்டார். அது பற்றிய முழு தகவல்களையும் கொடுக்க முடியாது என்று அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது.
"தாயிடமிருந்து குழந்தைக்கு எச்ஐவி பரவுவதைத் தடுப்பது சாத்தியமே"
விருதுநகரில் எச்.ஐ.வி. தொற்று இருந்த ரத்தம் ஏற்றப்பட்டதால், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு எச்.ஐ.வி பரவும் வாய்ப்பு மிகக் குறைவு என்கிறார்கள் மருத்துவர்கள். தாய்க்கு எச்ஐவி இருந்தால், குழந்தைக்குப் பரவாமல் தடுக்க முடியுமா?
விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு ரத்தசோகை இருந்ததால் சில நாட்களுக்கு முன்பாக ரத்தம் ஏற்றப்பட்டது. ஆனால், அடுத்த சில நாட்களில் அந்த ரத்தத்தை தானமளித்த இளைஞர், தனக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பதாகக் கூறினார். இதையடுத்து தானம் பெற்ற பெண்ணை சோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அந்தப் பெண்ணுக்கும் எச்ஐவி தொற்று ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர்.
இந்த நிலையில், அந்தப் பெண்ணுக்கு வியாழக்கிழமை இரவில் பெண் குழந்தை பிறந்தது. தாயும் குழந்தையும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் குழந்தை ஒரு கிலோ 700 கிராம் எடை இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். "தற்போது தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர்," என பிபிசியிடம் தெரிவித்தார் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் டீன் டாக்டர் சண்முகசுந்தரம்.
விரிவாக படிக்க: "தாயிடமிருந்து குழந்தைக்கு எச்ஐவி பரவுவதைத் தடுப்பது சாத்தியமே"
பணிகிறாரா டிரம்ப்?
அமெரிக்காவின் பகுதியளவு அரசாங்க முடக்கம் ஏறத்தாழ ஒரு மாதமாக தொடர்ந்து வரும் சூழலில் சமரசத்திற்கு இறங்கி வந்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.
மெக்சிகோ எல்லை சுவருக்கான நிதியில் அவர் உறுதியாக இருந்தாலும், சிறு வயதில் அமெரிக்கவிற்கு வந்த குடியேறிகள் தொடர்பாக ஒரு சமரசத்தை முன் வைக்கிறார் டிரம்ப்.
எல்லைச் சுவர் கட்டுவதற்கான 5.7 பில்லியன் டாலர் நிதியில் அவர் எந்த சமரசத்தையும் செய்து கொள்ளவில்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்