வங்கி கொள்ளை முயற்சி: குழந்தை உட்பட பலர் பலி

பட மூலாதாரம், Reuters
கடந்த சில மணிநேரங்களில் நிகழ்ந்த சில முக்கிய உலக நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
வங்கி கொள்ளை

பட மூலாதாரம், Getty Images
வட கிழக்கு பிரேசிலில் நடந்த ஒரு வங்கி கொள்ளை முயற்சியில், போலீஸூக்கும் கொள்ளையர்களுக்கும் நடந்த சண்டையில் குழந்தை உட்பட ஐந்து பணைய கைதிகள் பலியாகி உள்ளனர்.
வட கிழக்கு பிரேசிலில் இரண்டு இடங்களில் வங்கிக் கொள்ள முயற்சி நடந்தது. மிலாகிரஸ் பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் வேறு ஆறு பேர் மரணித்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மரணித்தவர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களா அல்லது காவல் துறை அதிகாரிகளா என்று தெளிவாக தெரியவில்லை.

ரசாயன ஆயுதம் பயன்படுத்தப்பட்டதா?

பட மூலாதாரம், AFP
கிளர்ச்சியாளர்கள் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தியதாக பொய்யான கதையை ஜோடித்ததாக சிரியா மற்றும் ரஷ்யா மீது அமெரிக்காவும், பிரிட்டனும் குற்றஞ்சாட்டி உள்ளன.
இட்லிப் மாகாணத்தில் இருந்த யுத்த நிறுத்தத்தை சிதைப்பதற்காக இவ்வாறான குற்றச்சாட்டுகள் ஜோடித்ததாக அமெரிக்கா கூறுகிறது. அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் அலெப்போ மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட க்ளோரின் வாயு தாக்குதலில் 100 பேர் காயமடைந்ததாக சிரியாவும் ரஷ்யாவும் கூறி இருந்தன. இதற்காக சிகிச்சை அளிக்கப்படும் புகைப்படங்களையும் சிரியா அரசு ஊடகம் வெளியிட்டு இருந்தது.

சாலை விபத்துகள்

பட மூலாதாரம், Getty Images
சர்வதேச அளவில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் சாலை விபத்துகளால் இறப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.
உலகளவில் சாலை விபத்துகளால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆப்ரிக்காவிலேயே அதிகமாக இருப்பதாக அந்த அமைப்பின் தரவுகள் விவரிக்கின்றன. இரண்டாம் இடத்தில் தென் கிழக்கு ஆசிய நாடுகள் உள்ளன. கார் விபத்துகளால் 2016ஆம் ஆண்டில் 1.35 மில்லியன் மக்கள் மரணித்து இருப்பதாக அந்தத் தரவு கூறுகிறது.


அமெரிக்க தேர்தலில் ரஷ்ய ஆதிக்கம்

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க தேர்தலில் டிரம்புக்கு ரஷ்யா உதவியதாக உள்ள குற்றச்சாட்டை விசாரித்துவரும் ராபர்ட் முல்லரின் சட்ட குறிப்பாணை, அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கொஹனனிடம் விசாரிக்கப்பட்டதை விவரிக்கிறது. அமெரிக்க 2016ஆம் ஆண்டு தேர்தலில் ஆதிக்கம் செலுத்த ரஷ்யர்களுக்கு மைக்கேல் உதவியதாக அந்த குறிப்பாணை தெரிவிக்கிறது.

நிலாவில் புதிய தடத்தில் சீனா

பட மூலாதாரம், CNSA
நிலவில் ரோபோவை நிலைநிறுத்தி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வகையிலான தனது முதல் திட்டத்தை சீனா வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதுவரை பூமியை நோக்கி காணப்படாத நிலவின் மற்றொரு மூலையாக கருதப்படும் வோன் கர்மான் என்னும் பகுதியில் சாங்'இ-4 என்னும் இந்த செயற்கைக்கோள் தரையிறங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.சீனாவிலுள்ள ஷிசாங் விண்வெளி நிலையத்திலிருந்து லோங் மார்ச் 3பி என்னும் ராக்கெட்டில் இந்த ரோபோ நிலவை நோக்கி செலுத்தப்பட்டது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












