You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜி20: உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கம் செலுத்தும் 20 நாடுகள்
- எழுதியவர், பாப்லோ உசோவ்
- பதவி, பிபிசி உலக சேவை
ஜி20 நாடுகள் குழு முடிவுகளை எடுப்பதில் அளவில் சிறியது என்றும் மாற்றங்களைக் கொண்டுவருவதில் அளவில் பெரியது என்றும் கூறப்படுவதுண்டு.
ஜி20 குழுவில் உள்ள ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் 19 நாடுகளுடன் ஐ.நாவின் சுமார் 200 நாடுகளையும் ஒப்பிட்டு பாருங்கள்.
இருப்பினும் இந்த 20 நாடுகள் குழு, உலக பொருளாதாரத்தில் 85 சதவீதத்தையும், முதலீட்டில் 80 சதவீதத்தையும் , மூன்றில் இரண்டு பங்கு மக்கள்தொகையையும் கொண்டுள்ளன.
இதுவரை 10 ஆண்டுகள் நடைபெற்றுள்ள இத்தகைய உச்சி மாநாடுகளில் முதலாவது மாநாடு 2008ம் ஆண்டு வாஷிங்டனில் நடைபெற்றது. உலக அளவில் பொருளாதார கொள்கைகளை பற்றி விவாதிக்கும் இயற்கையான தளமாக இது உருவாகியது.
இந்தக் குழுவின் வெற்றிகள் கடந்த காலங்களில் மட்டுமே கிடைத்தது என்றும் இப்போதோ ஒரு நோக்கம் இல்லாத பன்முக நிறுவனமாக இது மாறியுள்ளது என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர்
தொடுவானத்தைச் சூழ்ந்துள்ள மேகங்கள்
உலகத் தலைவர்கள் அர்ஜெண்டினாவின் தலைநகர் ப்வேனொஸ் ஐரீஸ்-இல் குழுமியுள்ள நிலையில், உலகப் பொருளாதாரம் பற்றிய அச்சுறுத்தல்களில் அவர்கள் அனைவரின் பார்வைகளும் உள்ளன.
அமெரிக்க மற்றும் சீன அதிபர்களுக்கு இடையே நடைபெறும் இருதரப்பு பேச்சுவார்த்தை இந்த மாநாட்டில் அதிக கவனத்தை பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சீன இறக்குமதி பொருட்களின் மீது விதிக்கப்பட்டுள்ள 200 பில்லியன் டாலர் மதிப்பிலான வரியை அதிகரிக்க விரும்புவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.
உலகின் பெரிய பொருளாதாரங்களுக்கு இடையில் நடைபெறும் வர்த்தக மோதல்கள், உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும் என்று பொருளியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
புவி அரசியலை பொறுத்த வரை, பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை விவகாரத்தில் சௌதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை பொறுப்பேற்க செய்ய அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.
வெளிநாட்டு உறவுகள் பற்றிய கவுன்சிலில், உலக இயக்குநராக இருக்கும் ஸ்டூவார்ட் எம் பேட்ரிக், "தற்போது ஜி20 நாடுகளுக்கு இருக்கும் முக்கிய சவால், பொருளாதார பிரச்சனைகளால் அல்ல, ஜனரஞ்சக தேசியவாதத்தால்தான் வரும்,” என்று கூறியுள்ளார்.
நெருக்கடியை போக்குதல்
2007-08ம் ஆண்டு நிகழ்ந்த நிதி நெருக்கடிக்கு எடுக்கப்பட்ட பதில் நடவடிக்கைதான் ஜி20 நாடுகள் குழுவின் மறக்க முடியாத வெற்றியாக அமைந்தது.
உலக வளர்ச்சிக்கு ஒருவருக்கொருவரின் ஆதரவு தேவை என்பதை உணர்ந்து கொண்டு வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் முதல் முறையாகக் கூடின. அதன் விளைவால்தான், நிதி ஊக்குவிப்பு, நுகர்வு அதிகரிப்பு நடவடிக்கைகள் மற்றும் அரசு நிதியுதவி போன்ற கொள்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டன. ஆனால் உலக பொருளாதாரம் வேலை செய்வதை தீவிரமாக மாற்றுவதற்கு இந்த நடவடிக்கைகளால் முடியவில்லை. எனவே முந்தைய நிதி நெருக்கடியைப் போல இன்னுமொரு நிதி நெருக்கடி ஏற்படலாம் என்றே கருதப்படுகிறது.
‘அலைகள் மிகுந்த கடல்கள்‘
உலகப் பொருளாதாரம் அலைகள் மிகுந்த கடலில் செல்வது போன்றதாகும் என்று பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான கூட்டமைப்பால் கடந்த வாரம் வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவிக்கிறது. பல வளரும் சந்தை பொருளாதாரங்கள் முதலீடு வெளியேற்றம் மற்றும் நாணயத்தில் வீழ்ச்சியை சந்தித்து வருகையில் இருதரப்பு வரி விதிப்புகள் அதிகரிப்பதற்கு பின்னால், உலக வர்த்தகம் மற்றும் முதலீடு குறைந்து கொண்டிருக்கிறது.
உலக வளர்ச்சி 3.9 சதவீதம் என்ற அதிகபட்ச விகிதத்தை அடைந்து, அடுத்த சில ஆண்டுகளில் பலவீனமாகும் என்று சர்வதேச நாணய நிதியம் மதிப்பிட்டுள்ளது. வளரும் மற்றும் முன்னேறிய பொருளாதாரங்களில் சீரற்ற வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன.
இந்தியாவும், சீனாவும் உலக வளர்ச்சியின் முன்னோடிகளாக உள்ளன. ஆனால், லத்தீன் அமெரிக்காவின் வளர்ச்சி குறைந்து கொண்டே செல்கிறது. பெரும்பாலான வளரும் நாடுகள் எண்ணெய் விலை உயர்வின் பாதிப்பை உணர்ந்து வருகின்றன.
நிதி ஊக்குவிப்பும், குறைவான வேலைவாய்ப்பும் அமெரிக்க பொருளாதார வளர்ச்சியை தடுத்துள்ளன. ஆனால், இந்த நிலை ஐரோப்பாவிலும், ஜப்பானிலும் மெதுவாகவே உள்ளது.
ஜி20 தலைவர்களின் இலக்கு
சர்வதேச நிதி நெருக்கடி ஏற்பட்டு 10 ஆண்டுகளுக்கு பிறகும், அதிலிருந்து மீளும் வகையில் கொண்டுவரப்பட்ட ஒருங்கிணைந்த கொள்கைகளும் உலக பொருளாதாரத்தை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டுவர இயலவில்லை.
தங்கள் உரிமைகள் மறுக்கப்பட்ட வாக்காளர்கள்தான், டிரம்பால் பிரதிநிதித்துவப்படுத்தும் பொருளாதார தேசியவாதம், பிரெக்ஸிட், ஐரோப்பிய தேசியவாதம் மற்றும் மிகவும் சமீபத்தில் பிரேசிலில் வலதுசாரி அரசு தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது ஆகியவற்றுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். ஜி20 நாடுகளின் வெற்றிகள் கடந்த காலத்தில்தான் உள்ளன. தற்போது இந்த குழு அதிகமாக பேசிவிட்டு, செயல்படுவதில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. ஆனால், இந்த கூட்டத்தின் முக்கியத்துவத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டுமானால் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுள்ள உலக நாடுகளின் தலைவர்கள் அதிக ஒத்துழைப்பை ஏற்படுத்த முயல வேண்டும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்