இஸ்லாமிய மாநாட்டில் பன்றி இறைச்சி - மன்னிப்பு கேட்ட ஜெர்மனி அரசு

கடந்த சில மணிநேரங்களில் நிகழ்ந்த சில முக்கிய உலக நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

மன்னிப்பு கேட்ட ஜெர்மன் அமைச்சகம்

இந்த வாரம் பெர்லினில் நடைபெற்ற ஜெர்மன் இஸ்லாமிய மாநாட்டில் பன்றி இறைச்சி கொண்டு தயாரிக்கப்பட்ட சாசேஜுகளை பரிமாறியதற்காக அந்நாட்டு உள்விவகாரங்கள் துறை அமைச்சகம் மன்னிப்புக் கேட்டுள்ளது.

பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் இந்த மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என்பதை மனதில் வைத்தே உணவுத் தெரிவுகள் அமைந்ததாக அந்த அமைச்சகம் கூறியுள்ளது.

அந்த இஸ்லாமிய மாநாட்டில் பரிமாறப்பட்ட சாசேஜுகளில் பன்றி இறைச்சி மற்றும் ரத்தம் சேர்க்கப்பட்டிருந்தது.

சாதனை படைக்கும் மிஷேலின் நூல்

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிஷேல் ஒபாமா தம் கடந்தகால நினைவுகள் குறித்து எழுதிய நூல், வெளியான 15 நாட்களில் 20 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்று சாதனை படைத்துள்ளது.

தமது இரு பெண் குழந்தைகளும் செயற்கை கருத்தரிப்பு மூலமே கருவாகினர் என்பதை முதல் முறையாக இந்த நூலில் அவர் கூறியிருந்தார்.

தெற்கு சூடானில் அதிகரிக்கும் பாலியல் வல்லுறவு

தெற்கு சூடானின் வடக்குப் பிரதேசங்களில் கடந்த 10 நாட்களில் அதிக எண்ணிக்கையிலான பெண்களும் சிறுமிகளும் பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, 'டாக்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ்' எனும் மருத்தவ தொண்டூழிய அமைப்பு கூறியுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 10 நாட்களில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட 125 பெண்களில், 10 சிறுமிகளும், 65 கர்ப்பிணிகளும் அடக்கம்.

அலாஸ்க்காவில் நிலநடுக்கம்

அமெரிக்க மாகாணமான அலாஸ்காவின் மிகப்பெரிய நகரான ஏன்கரேஜில் இருந்து 11 கி.மீ வடக்கில் மையம்கொண்டு, 7.0 அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சில பாலங்கள் மற்றும் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும், உயிர் பலி எதுவும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏன்கரேஜ் நகரில் சுமார் மூன்று லட்சம் பேரும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் பேரும் வசிக்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: